Monday, 30 November 2009

வீடு ! - 3

புழக்கடை ரேழி !

புழக்கடை ரேழியின் இரண்டுச் சின்னப் பரண்கள்.

ஒன்றில், விறகுகள் இருக்கும். மற்றொன்றில்,எருமுட்டை, செம்மண் உருண்டைகள் இருக்கும்.

எருமாமுட்டை (சாணியைதட்டி வெய்யிலில் காயவச்சி, எடுத்து வைத்தவை) வெந்நீரடுப்பு, சமையல் அடுப்பு எரிய ரொம்பத் தேவை.

அப்பா, கொடுவாளால் விறகைச் செதுக்கி, செதுக்கி, சிராய்த் தூளாக்குவார். சிராய்த் தூளும் ஜோராய் அடுப்பெரிக்க உதவும்.

ஆனால், மழைக் காலத்துலே எரியாத விறகும், காயாத எருமுட்டையும் அமையும்!அம்மாக்குத் திண்டாட்டம்தான்!

ஊதுகுழலால்(கண்ணன் கைக் குழல் அல்ல!)அடுப்பை ஊதி ஊதி எரிய வைக்கறத்துக்குள்ள எம்பாடு உன்பாடு ந்னு ஆயிடும்!

செம்மண் உருண்டைகள்(விசேஷங்களுக்குச் செம்மண் இடுவோமே! அதுக்கு) இருக்கும்.

புழக்கடை ரேழியின் மூலையில் ஐந்தாறு உலக்கைகள் இருக்கும்.

குழிவாய்ப் பூண்போட்டது, தட்டையாய்ப் பூண் போட்டது, என்று இருக்கும்.

வீட்டிலேயே 'அவல்' இடிப்பார்கள்.

அம்மா, புழுக்கி ஆர்வாடப் போட்ட நெல்லை பெரிய இரும்பு வாணலியில் போட்டு, ஒரு புதுத் தென்னங்குச்சிகளால் செய்த மாறால் (விளக்குமாறு) வேகமாக வறுத்து, உரலில் கொட்டினால், எதிரும், புதிருமா ரெண்டு வேலையாட்கள் 'சொய்' 'சொய்" ன்னு இடிப்பார்கள் !

தட்டை தட்டையா அவலு உமியோட இருக்கும்! பிறகு புடைத்து அவல் தனியாக எடுத்து வைப்பார்கள்.

மாவு, மிளகாய்த்தூள் எல்லாம் உரலில் இடித்துத்தான் செய்யப் படும். அதுக்குன்னே கடப்பாரையும் உண்டு!

ஊருக்குள்ளே, நெல் அரவை மில்லு இருக்கு!எள் எண்ணெய், கடலை எண்ணை ஆடுகின்ற செக்கு உண்டு! எள்ளுப் புண்ணாக்குத்(பிண்ணாக்கு?) தின்ற அனுபவம் இருக்கு!

இளையராஜாப் பாட்டு நினைவு வருது! 'போடாப் போடாப் புண்ணாக்கு போடாதேத் தப்புக் கணக்கு!'

இன்னிக்கு தயாராப் பாக்கெட்டுல மாவா, பொடியா எல்லாம் கிடைக்குது!

வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்தல், ஓடு மாத்தி வேய்தல் போன்ற கவனிப்புகளும் வேண்டும். இல்லாட்டா மழைவந்தா வீடெல்லாம் ஒழுகும்! திண்டாட்டம் தான்!

தூங்காமே துன்பப் பட்டதும் நிறைய அனுபவம் உண்டு!

நான் எழுதற கால கட்டம், என்னுடைய பள்ளி வயது!

மூட்டைப் பூச்சிக் கடி, கொசுக் கடி, சிரங்கு.... இவற்றில் சிக்காத பிள்ளைங்க
கிடையாது!

அப்போ விறகுப் பஞ்சம், அரிசிப் பஞ்சம் போன்ற கஷ்டமான நாட்களையும் கடந்துதான்
வாழ வேண்டியிருந்தது!

இன்னும் வரும்....

Sunday, 29 November 2009

வீடு ! - 2

வீடு !

நான் வளர்ந்து வாழ்ந்த வீடு!

வாழ்க்கைப்பட்டுப் போன..... வாழ்க்கைப் பட்டுப் போன பின்னும் பிஞ்சும், குஞ்சுமா
மூணுப் பிள்ளைகளோட கணவனை இழந்து வந்த போது தஞ்சம் தந்ததும் இந்த வீடுதான்!

என் மக்கள் வளர்ந்ததும் இந்த வீட்டில் தான்!

பெற்றோர், சகோதர, சகோதரிகளும் அனுசரணையாக இருந்தார்கள்.

தாழ்வாரத்தின் ஓரத்தில், எந்திரக்கல் மாவு அரைத்தல், ரவை உடைத்தல் போன்றவற்றிற்கு உபயோகிப்போம்.

பருப்பு உடைக்க ஒருவிதமான இயந்திரக் கல்லுண்டு. கல்லின் மேல்பகுதி லேசாக இருக்கும்.

முற்றத்தில், இரவில் நிலா பார்க்கலாம்.

நிலாச்சோறு, அம்மா கையில் போட, நாங்க சாப்பிட்டு இருக்கோம்!

பகல் வெய்யிலில், விறகு போன்றவற்றைக் காயப் போடுவோம்!

இதென்ன புதுமையா? ன்னு கேக்கலாம்!

இன்னிக்கு திறந்த வெளிக் காற்று வீட்டினில் கிடைப்பது அரிது!

பொட்டியாட்டம் வீட்டுக்குள்ளே, மின்விசிறி தான் காத்து கொடுக்கும்!

நாங்க அண்ணன், தம்பி, தங்கைகள் எட்டு பேரு.

சித்தப்பா, பெரியப்பா மக்கள் எல்லாம் விசேஷங்களில் கூடுவோம்!

வீடே திமிலோகப் படும்!

எல்லாம் உண்டு! சண்டையா? பேச்சு வார்த்தையா எல்லாம் உண்டு! மகிழ்ச்சி ஆரவாரம் எல்லாம் உண்டு!

புழக்கடையில், ஈரக் கடலைக்காயை (மல்லாக்கொட்டை? நிலக்கடலை?)

மண்தரையில் கொட்டி பரவலாக்கி, அதன்மேலே நல்லாக் காஞ்ச தென்ன ஓலையைப் போட்டு
நெருப்புப் பத்த வெச்சு எரியும்!

அப்போ சுற்றிலும் அண்ணன் தம்பிகள், அமர்ந்து கொண்டு குச்சியால் கிளறி விடுவார்கள்.

இப்போ, கடலை நல்லா வறுபட்டிருக்கும்! சிறிது நேரத்தில், எல்லாக் கடலையையும் பொறுக்கி ஒண்ணு சேத்தணும்! அவரவர் அங்கேயே கடலையை சாப்பிடுவார்கள்!

காலேஜ் விஷயம், ஹிந்தி, இங்கிலீஷ் சினிமா, இதைப் பற்றி எல்லாம் பேசுவார்கள்!

இன்னும்வரும்...

Saturday, 28 November 2009

வீடு ! - 1

வீடு!

நம்மைத் தனக்குள் அரவணைத்துக் கொள்ளும்! நம்முடைய சுக, துக்கங்களில் பங்கு கொள்ளும்!

வீடு என்பது சொத்தா? ஜடப் பொருளா? வெறும் கல்லு, மண்ணு, சுண்ணாம்பு.... இவைகளைக் கொண்டுக் கட்டப்பட்ட கட்டடம் மட்டும் தானா?

இல்லை! இல்லை! நம்மோடு வாழ்ந்து வரும் உயிர்ப் படைப்பு!

எல்லா நிலைகளிலும் பாதுகாப்பு மட்டுமன்று! நம்முடன் துணை இருக்கும் உயர்படைப்பு!

மக்களின் இன்ப, துன்ப, கோப, தாப, சிரிப்பு, அழுகை, வறுமை, செல்வம், காதல், உறவு, பிரிவு போன்ற அத்தனையும் வீடு அறியும்!

வாசல் முத்தம்!

முன்றில்! பெருக்கி சாணம் தெளித்து, அழகழகாய் புள்ளிக் கோலங்களும், கோடு கோலங்களும் நிறைந்து விளங்கும்!

வாசல் திண்ணைகள்!

இரண்டு திண்ணைகள்! வீட்டுப் பாடம் படித்து எழுதுவோம்! கதைகள் பேசி மகிழ்வோம்!

மழை நாட்களில், கயற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்போம்!

சந்தடி சாக்கில் மழையில் இறங்கி ஆடுவோம்! கப்பல் விட்டு விளையாடுவோம்!

திண்ணைகளுக்கிடையே ஏழு படிகட்டுகள்!

வாசலின் சிறிய திண்ணையில் ஒரு சின்ன உள் உண்டு! அது 'காந்தி சிறுவர் சங்கம்' அலுவலகம்! தம்பி, தங்கைகள் அவர்கள் நண்பர்களுடன் சிறப்பாக நடத்திய சிறுவர் சங்கம்!

ரேழியும்,ரேழித் திண்ணையும் !

ரேழித் திண்ணையில் பிரசவங்களும் நடந்திருக்கின்றன!

மற்றபடி குழந்தைகள் சொப்பு வைத்து விளையாடுவார்கள்! இங்கும் படிக்கலாம்!

நெல்லுக் கொட்டிவைக்கும் 'தொம்பை' ரேழியிலும், வீட்டின் அறையிலும் உண்டு!

தாழ்வாரமும்,கூடமும்,தொட்டி முத்தமும்!

ஓடியாடி விளையாடத் தோதான இடம்.

எல்லா உள்ளேயும் (உள்=அறை) ஒளிந்து விளையாடலாம்!

குழந்தைகளின் விளையாட்டுத் தொல்லைகளுக்கு பொறுமை காக்கும் பெரியோரும் உண்டு, கோபத்துடன் கத்தி பொறுமை இழக்கும் பெரியவர்களும் உண்டு!

இந்த கொடுவாள்,அரிவாள் போன்றவை வைத்து இடம் தாழ்வாரத்தின் மேல் கூரையில் இருக்கும்

'எரவாணம்' (இறவாணம்?) மரத்தில் ஆனது.

கூடம் என்பது (பட்டாசாலை?) வீட்டின் சகலவித நல்லவைக்கும், குழந்தைகள் அப்தபூர்த்தி, கல்யாணம், சீமந்தம், வளைகாப்பு, மணமான தம்பதியரை மணையில் அமர்த்தி, பாட்டுப் பாடி, வாழ்த்தி, ஆரத்தி எடுத்துக் கும்மி அடித்து மகிழ்வதும் கூடத்தில்தான்!

சோக நிகழ்வான திவசம் செய்தல்(சிரார்த்தம் செய்தல்) கூடத்தில் தான்!

எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதும் இந்தக் கூடத்தில்தான்!

அப்பா மதிய உணவருந்திய பின்பு, பாய் விரித்து தலைக்கு ஒரு பலகையைச் சாய்வாக வைத்துக் கொண்டு சிறிது நேரம் இளைப்பாறுவார்!

வெய்யில் தாழ்வாரம் கொறட்டுக் கல்லைத் தாண்டினால் மதியம் மணி இரண்டிற்கு மேல் ஆகிறது என்று பொருள்!

இன்னும் வரும்.....

Thursday, 2 July 2009

பிள்ளைச் செல்வமே!

அன்னை மனம் குழந்தையைக் கண்டால் பாகாய் உருகும்! பித்தாய் அலையும்!

மழலையின் ஒவ்வொரு அசைவிலும் களிகொள்ளும்!

பாரதி சொன்னானே!

"என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!
பிள்ளைக் கனியமுதே! கண்ணம்மா!

பேசும் பொற்சித்திரமே!...
உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி!..."


நாட்டுப்புறப் பாடல்களும், இலக்கியப் பாடல்களும் பிள்ளைச் செல்வத்தின் உயர்வை அழகாக, அருமையாகச் சொல்லுகின்றன!

பிள்ளைத் தமிழில்,செங்கீரைப் பருவம் முதலாகப் பத்துப் பருவங்களில்
கடவுளர்களை குழந்தையாகக் கொண்டு, அமைத்தப் பாடல்கள்
நாம் அனுபவித்துப் படித்துணர வேண்டியவையாகும்.

திரைப் படப் பாடல்களிலும் அழகும், பாசமும், நயமும்
பொங்க அன்னையின் சீராட்டும், பாராட்டும் நிறைய உண்டு!

ஒரு அன்னையின் பாட்டு! தாய்மையின் தவிப்பிலே பாடுகிறாள்! கேளுங்கள்!

'வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவம் இருந்து
தேடிய நாள்தன்னில் செல்வமாய் வந்தவளே!
..........
அழுதா அரும்புதிரும்!அண்ணாந்தா பொன்னுதிரும்!
சிரிச்சா முத்துதிரும்!வாய்திறந்தா தேன்சிதறும்!'


அடுத்து அன்னையின் பொறுப்பு வாய்ந்த தன் கடமையைச் சொல்லுகிறாள்!

பிள்ளையை பெற்றுவிட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?'


இன்று, தொட்டில் குழந்தைகள் உருவாகும் நிலை கண்டு, நெஞ்சம் குமுறுகின்றது!

இந்நிலை இனித் தொடராமல் இருக்க இறையருளை வேண்டுவோம்!

நம் பெரியோர்கள் குழந்தையின் ஒவ்வொரு அசைவிற்கும் பாட்டு சொல்வர்!

இரண்டு கைகளையும் கொட்டி, கொட்டி ஆடும் போது கைகளைக் குவித்து தலைக்கு மேல் தூக்கும்! அதற்கு ஒரு பாடல்!

'ராமா கிருஷ்ணா கோவிந்தா
கிருஷ்ணா ராமா கோவிந்தா

வெங்கட ரமணா கோவிந்தா
சங்கட ஹரணா கோவிந்தா

அப்பரமேயா கோவிந்தா
சுப்பிரசன்னா கோவிந்தா

வட்டிக்காசு வாங்கும் வடமலையப்பனுக்குக்
குட்டி கோவிந்தா!'


குழந்தை ஐந்து, ஆறு மாதங்களில் காலில் தண்டை கொலுசு சப்திக்க,
ஜிங்கு ஜிங்கு என்று மகிழ்ச்சியுடன் குதிக்கும்! அதற்கு ஒரு பாடல்!

சங்குசக்கர சாமிவந்து
ஜிங்கு ஜிங்குனு குதிக்குமாம்!

கொட்டு கொட்டச் சொல்லுமாம்-அது
கூத்தும் ஆடப் பண்ணுமாம்!

உலகம் மூன்றும் அளக்குமாம்!--அது
ஓங்கி வானம் அளக்குமாம்!

கலகலன்னு சிரிக்குமாம்!--அதைக்
காணக்காண இனிக்குமாம்!


தவழ முயலும்போது ஒரு பாடல்!

ஆனை ஆனை! அழகரானை!
ஆனயும் குட்டியும் ஆடுமானை!

ஜல்லைக் கரும்பை முறிக்கும் ஆனை!
சீராடி சீராடிக் கொஞ்சும் ஆனை!

குட்டி ஆனைக்குக் கொம்பு முளச்சுதாம்!
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம்!


இன்னும்,

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!
சாயக் கிளியே சாய்ந்தாடு!
குத்துவிளக்கே சாய்ந்தாடு!
கோவில் புறாவே சாய்ந்தாடு!


ஆழ்வார்களும் நாயன்மார்களும் தாங்களேத் தங்களைத் தாயாக பாவித்து "வாத்ஸல்யம்" பெருகப் பாடியருளியது நாம் செய்த பாக்கியம்!

பெரியாழ்வார் திருமொழி
======================
பொன்னியல் கிண்கிணி சுட்டி புறங்கட்டி
தன்னியல் ஓசை சலன்சலன் என்றிட
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்
என்னிடைக் கோட்டரா அச்சோவச்சோ எம்பெருமான் வாரா அச்சோவச்சோவே!


குழந்தை கண்ணனை, வெண்ணையுண்ட வாயனை, மண்ணளந்த மாலோனை ஆழ்வார் அழைக்கிறார்!

ஓடி வந்து தன்னை அணைத்துக் கொள்ள வேண்டுகிறார்!

என்ன அழகு பாருங்கள்!

Friday, 26 June 2009

பிள்ளைச் செல்வமே!

பிள்ளையைப் பெற்று வளர்த்து ஆளாக்குவது என்பது இன்று ஒரு பெரிய சாதனைதான்!

இருக்கட்டும்....

பிறந்த மழலையைக் காண்பது மனசுக்கு உற்சாகமும், புத்துணர்ச்சியும் தருகிறது!

நாமும் குழந்தையாய் ஆகி விடுகிறோம்!

அதோ ஒரு தாயின் தாலாட்டு....கேட்போம்!

மரத்தடி நிழலில் தூளியில் தூங்க வைத்து, பின் வயல் வேலைக்குச் செல்லும் ஒரு ஏழை தாயின் பாடல்!

குழந்தைக்கு இயற்கை தரும் வசதியிலே உறங்கச் சொல்லும் தாயின் தாலாட்டில், மன உணர்வுகளை இதைவிட எளிதாக, அழகாகச் சொல்ல முடியுமோ?

கண்ணுறங்கு,கண்ணுறங்கு
கண்மணியே கண்ணுறங்கு
வண்ண மருக்கொழுந்தே
மல்லிகையே கண்ணுறங்கு!

வேப்பமரக் காத்துப்பட்டா
வேறுவினை சேராது!
காப்பா மகமாயி
கண்ணுறங்கு என்மகனே!

பாலுனக்கு வேணுமின்னு
பாடுபடப் போறேண்டா
காலுதச்சு நீயழுதா
கண்ணீர் வருகுதடா!

நாலெழுத்து நீபடிச்சு
நஞ்சைபுஞ்சை வாங்கோணும்
பால்கொடுத்த ஆத்தாவுக்கு
பட்டுசேலை எடுக்கோணும்!

நீசிரிச்சா நான்சிரிப்பேன்
நீயழுதா நானழுவேன்
ஆசைவச்சேன் உன்மேலே
அழவேணாம் கண்ணுறங்கு!


கவிமாமணி இலந்தை அவர்களின் பாடல்.

மிக்க நன்றி!

(தொடரும்)

Saturday, 4 April 2009

நம்மாழ்வார் திருவாய்மொழி

சீலைக் குதம்பை யொருகா தொருகாது செந்நிற மேல்தோன் றிப்பூ கோலப் பணைக்கச்சும் கூறை யுடையும் குளிர்முத்தின் கோடா லமும்
காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்!
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்! நானே மற்றா ருமில்லை.



என்மனசைக் கவர்ந்த பாடல்!

ஒருநாள் இனியக் காலைப் போது!

அதோ அந்த யாதவச் சிறுவர்கள் மாடுகளுடன் மேய்ச்சலுக்கு கிளம்புகின்றனர்!

"என் கண்ணனும் உங்களுடன் வருகிறான்! பத்திரமாக அழைத்து போங்கள்!" என்று பிரியாவிடை கொடுத்து அனுப்புகிறாள் யசோதை!



நேரம் செல்லுகிறது...... மாலை வந்தது!

வழிமேல் விழிவைத்துப் பார்த்திருக்கிறாள்!

குழந்தை கண்ணன் வருகைக்காக காத்திருக்கிறாள்!

ஆயர்குலப் பிள்ளைகளுடன் அதோ வந்து கொண்டிருக்கிறான் கோவிந்தன்!

எப்படி வருகிறானாம்?

யசோதை கூவுகிறாள்!

"அடி கோபிகைகளே!

சேலைத்துணியைக் காதணியாய்க் கொண்டு ஒருகாதிலும்,

செந்நிற மருதோன்றிப்பூ காதணியாய் மற்றொரு காதிலும்
அணிந்து,

அழகான இடுப்பில் கூறை ஆடையைக் கச்சாக அணிந்து,

முத்தினாலான ஒருவகைக் கழுத்தணியும் அணிந்து,

அந்த யாதவப் பிள்ளைகளிடயே ஒரு தனி அழகோடு விளங்குகின்ற

கடல்வண்ணனின் வேடத்தை பாருங்களேன்!"




இப்போது யசோதை என்ன சொல்லப் போகிறாள்?

எந்த தாயும் "அவன் என் பிள்ளை!" என்றுதானே சொல்வர்?

நாமும் அதைத்தானே எதிர்பார்க்கிறோம்?

ஆனால்...? யசோதை என்ன சொல்கிறாள்?

"ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை."

இந்தப் பிள்ளையைப் பெத்தவள் வேறு யாருமில்லை நானேதான்!

பிள்ளையைப் பற்றி சொல்லிவிட்டு, அந்த பிள்ளை ' என்னுடைய் பிள்ளை' எனலாம்.

ஆனால், பிள்ளையைப் பற்றி மகிழ்ந்து விவரித்து விட்டு, அந்தப் பிள்ளயின் தாய் என்னும் போது, இப்படி எண்ணத் தோன்றுகிறது:

"பெறற்கரிய பேறுடையவனின் தாய் நான்!" என்ற புளகாங்கிதம்
யசோதையின் கூற்றில் தெரிகின்றது!

அருமையான பாசுரம்!

அன்புடன்,
தங்கமணி.

Sunday, 25 January 2009

அந்த கருப்பு வெள்ளி !

January 23, 2004...

"அந்த நாளும் வந்திடாதோ "..

எத்தனையோ நாட்களுக்காக , கணங்களுக்காக ஏங்கியதுண்டு..

ஆனால்.. இந்த நாள்..

இன்று நினைத்தாலும்.. உள்ளமும் உடலும் நடுங்கும் நாள்..

ஏன் வந்தது என்று எண்ணி மருகும் ஒரு நாள்..

"வாசலிலே மாக்கோலம்.. வீட்டினிலே லக்ஷ்மிகரம்" என ஊரெங்கும் தை வெள்ளி கொண்டாட்டம் ஒருபுறம்..

புதிதாக கட்டிய அந்த திருமண மண்டபத்தின் முதல் முகூர்த்தம் நெருங்கும் நேரம்..காலை 9.15 மணி..

எங்கும் சந்தோஷ சிரிப்பு, உபசாரம், விசாரிப்புகள்..குதூகலம் உச்சத்தில் இருந்த நேரம்..

வாழ்த்த வந்த முதியோர்கள், விளையாடி திரிந்த மழலை பட்டாளங்கள் ,

களையாய் வளைய வந்த கன்னிகள், பட்டு புடவைகள் சரசரக்க வளையல் சத்தம் மெட்டுபோட..

என எங்கும் சொல்லொன்னா மகிழ்ச்சி வெள்ளம்..

வாத்திய கோஷம் ஒரு பக்கம் முழங்கி கொண்டு இருக்க..

மாங்கல்ய தாரணம் நடக்க சில நிமிடங்களே.. இருந்த அந்த நேரம்..

சிறு தீப் பொறி..பொசுங்க ஆரம்பித்தன.. அலங்கார வண்ண வண்ண காகிதங்கள்..

கண்சிமிட்டும் நேரத்தில்..தற்காலிகமாக போடப்பட்ட கூரை பற்றி எறிய ஆரம்பித்தது..

எங்கும் தீ.. தீ.... தீக்கங்குகள் தான்..

சிரிப்புகள் அலறலாய் மாற.. எங்கும் அழுகையும் .. ஓலமும்..

இருந்ததோ ஒரே வழி..

தப்பிக்க எத்தனித்தனர் வந்திருந்த அத்தனை பேரும்..

இதில் வெளியேர முடிந்தோருக்கு. புது ஜன்மம் அன்று..

முயன்று தோற்றோர்.. முகம் கூட அடையாளம் தெரியவில்லை..


ஒளி இழந்தன பல வீடுகள்..

எத்தனை இழப்புக்கள்..

வார்த்தையால் விவரிக்க முடியாத துக்கம்.. எங்கும்..

என் வீட்டுலும் இருள் சூழ்ந்த நாளது..

உறவிலே என் அன்னையின் தமக்கை..

ஆனால்... என் உள்ளத்தை பொறுத்தவரை என் அன்னைக்கு மேலாக என்னை வழி நடத்தியவள்..

தோழியாய் துணை தந்தவள்..

வாஞ்சையாய் வழி காட்டியவள்..

நல்லதை நயமாக எனக்கு சொல்லி தந்தவள்..

பேரில் மட்டுமல்ல குணத்திலும் அவள் ஒரு சாந்த சொரூபி..
பளிச்சென்ற புன்னகை..

நடமாடும் விவித பாரதியாய்.. மெட்டுக்கள் முணுமுணுக்க.. வேலை பார்க்கும் பாங்கு.. எதை சொல்ல..

"கடவுள் எங்கே?" .. இந்த கேள்வி என் மனதில் திரும்ப திரும்ப கேட்டு சலித்து போய் விட்டேன்..

கனவுகள் பல சுமந்து.. கை கூடும் வேளையில்.. காணாமல் போனதேனோ..???????

."சக்கரை நிலவே..பெண் நிலவே ..
காணும் போதே கரைந்தாயே..
நிம்மதி இல்லை.. ஏன் இல்லை..
நீ.. இல்லையே.."

நீ விரும்பி முணுமுணுத்த ஒரு பாடல்...


உன் இனிமை குரலில் இனி எப்போது கேட்பேன்???????

காலம் உருண்டோடலாம்..

ஆனால்.. என் கண்ணில் இருந்து உருண்டோடும் கண்ணீர் நின்றபாடில்லை..

மிஞ்சி இருப்பது உன் பற்றிய நீங்கா நினைவுகள்..நினைவுகள்..

We miss YOU .. We miss YOU

Tuesday, 20 January 2009

பாட்டியின் நினைவுகளில்...

அன்பு மகனே!

பாட்டியைப் பற்றியும், பாடல்களைப் பற்றியுமுள்ள உன்னுடைய ஞாபக சக்திக்கு என் Hats off!

தலை தாழ்த்திப் பணிகிறேன்!

எனக்கு நீ சொல்லசொல்ல பாட்டிக் கூறியது நினைவு வருகிறது!

ஆங்கிலேயர் ஆட்சி காலம்.

பாட்டியோட அப்பா குமரலிங்கம் என்னும் ஊரில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

("கே"ஊர்கள்னு சொல்லி ஞாபகம்) கணியூர், கடத்தூர், கொழுமம், கொத்தாம்பாடி, குமரலிங்கம். காரத்தொழு

அங்கு ஒரு தமிழ் புலவர் அப்போதே உடனே கவி எழுதியதுதான் இந்த "சர்வா டம்ப்ரமாம் குமரலிங்கம் அங்கு தங்கும் மாணாக்கர்கள் கல்விச்சங்கம்"என்ற பாடல்!

இங்லிஷ் நோட்டு மெட்டுலே பாடின பாடல் இது!

(இந்த டியூனை கிடாரிலோ,வயலினிலோ நீ இசைக்கலாமே!)

பாட்டியின் அப்பா பெயர் ராமசாமி.

பாட்டியின் அப்பா ராமுப்பா, கூடப் பிறந்தவர்கள் உம்மாச்சிப்பா, காப்பிப்பா, ஒரு அத்தை லக்ஷ்மி(அப்பிச்சியம்மா)

ஆசையாய் குழந்தைகளுக்கு பட்சணம் (குழந்தை மொழியில்
அப்பிச்சி என்றால் பட்சணம் என்று பொருள்) செய்து தருவதால்!

கூட்டுக் குடும்பம்! பெரிய குடும்பம்!

பாத்திரம் நமக்கு அடிமையா? நாம் பாத்திரத்துக்கு அடிமையா? என்னும் பாட்டியின் பேச்சு, பாத்திரங்கள் பற்றாமையால் மட்டும் அல்ல! தேவைக்கு பயன் படித்துவோம்! என்ற எண்ணத்தில் கூறியது.

(பாட்டி இரண்டாம் வகுப்பு படித்து இருக்கிறாள். பாட்டிக்கு ஒன்பது வயசில் கல்யாணம். தாத்தாக்கு அப்போ 15 வயது)

தத்துவப் பாடலில் இந்தப் பாடலும்:

"எச்சில் எச்சில் என்கிறீர்! ஏதுங்கெட்ட மூடரே!
பொறந்தபிள்ளை எச்சிலோ? கறந்த பாலும் எச்சிலோ!"


ராமநாடகக் கீர்த்தனைகளையும், தேசிங்கு ராஜா கதை பாட்டுகளையும்,

"நாயகர் பட்சமடி! எனக்கது ஆயிரம் லட்சமடி!"

கூழேயானாலும் எனக்கது தேனே!
கொண்டவனிருக்கக் குறையென்ன மானே!"


போன்ற வேதநாயகம் பிள்ளையின் பாடல்களையும், சித்தர் பாடல்களையும், கவிகுஞ்சரர், சிவன், கோபாலகிருஷ்ண பாரதியார், போன்றோரின் பாடல்களையும் பாடி, தத்துவமும், தேச பக்தியும், பக்தியும் நிறைந்த உள்ளத்தோடு வாழ்ந்தவள்.

"இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழிலுடையோன்
எங்கள் தமிழன்!மேலாம்(எழிலுடையோன்)

கந்தமூலமே புசிக்கநேரினும் கடமை தவறவே
மாட்டான் தமிழன்!"


(எம்.எம்.மாரியப்பா பாடியது என நினைக்கிறென்)

தாரமங்கலம் டூரிங் டாக்கிஸ் கொட்டகையில் இந்தப்
பாடல்கள் ஒலிக்கும்! கேட்கும் தூரத்தில் வீடு.

கே.ஆர்.ராமசாமி பாடிய பாடல்களை அம்மா ரசித்துப் பாடுவாள்.

"இன்னமும் பராமுகம் ஏனம்மா! ஏழை
இடர்தவிர்ப்பதுன் பாரம்மா!"

"நீதானல்லாமல் துணை யார்!
மாதா பிதாவும் நீயே!"


வானொலியில் 50 களின் கடைசியில் பல மெல்லிசைப் பாடல்கள் அருமையாக இருக்கும்!

சுந்தரியும்,உமாவும் நினைவு கூர்ந்து சொன்ன பாடல்கள்! யார் எழுதிய பாடல் தெரியவில்லை! அருமையான பாடல்!

"இதய தாபம் தீருமா!இறைவா
எனது வேட்கை மாறுமா?
உடலின் நடிப்பும் ஓய்ந்திடவில்லை!
உயிரின் துடிப்பும் சாய்ந்திடவில்லை

நினைவுக்கப்பால் நெடுவழ ஓடி
கனவுக்கப்பால் கண்டது கோடி!

நிலையின்றி நானும் அழுதேன் தேடி!

பயிலும் வினையும் பண்படவில்லை!
பாடி அழுதும் உன்கண்படவில்லை!


இன்னொரு பாடல்..

கதிரவன் கிரணக் கையால் தொழுவான்!
சுதியோடு புட்கள் ஆடிப்பாடி துதி செய்யும்!
பொதியலர் தூவிப் போற்றும் தருக்களெல்லாம்
பூதம் தம்தொழில் செய் தேற்றும்!
அதிர்கடல் தனொலியால் வாழ்த்தும்!
அகமே! நீ வாழ்த்தாததென்னே...."


70 களில் வானொலிப் பாட்டொன்று,

"அஞ்சலி செய்தோம் பாரத தேவி!
அணுவொடுப் பயிலத் தேர்ந்தவளே!
சஞ்சலம் தீர்க்கும் செஞ்சுடற் செல்வி
சமத்துவ நெறியைச் சார்ந்தவளே!"

எஸ்.ஜானகி பாடிய பாடல். குமார் பாட்டுப் போட்டிக்கு பாடினான்.

(பொக்ரானில் அணு பரிசோதனை இந்திராகாந்தி ஆட்சிக் காலம்)

இந்தப் பாடல்கள் இப்போது கேட்கக் கிடைக்குமா?

இன்னும் உன் பள்ளிநாள், கல்லூரி நாள், நினைவுகளைப்
பகிர்ந்து கொள்ளேன்.

வாழ்க வளமுடன்!

Sunday, 18 January 2009

ராஜம்மாள் - பாட்டியின் நினைவுகள்

அம்மா,

என் குழந்தைப் பருவ (சில) வருடங்களில் நானும் பல பாடல்களை பாட்டி பாடி கேட்டிருக்கிறென்.

காந்தி லண்டன் சேர்ந்த பாடல் வட்டமேசை மா நாட்டிற்காக என வரலாற்றில் படித்து புரிந்து கொண்டது;

அதே சமயத்தில்,ஜார்ஜு துரை வரவிற்காக பாட்டியின் பள்ளி நாட்களில் பாடிய பாட்டு

( நினைவிருக்கிறதா? -

'ஐந்தாம் மன்னர் ஜார்ஜு துரை எங்கள் மஹராஜா,
அருமையான மேரியம்மாள் எங்கள் மஹராணி' )-

இன்னுமொரு பாட்டு King george coronation-பற்றி

'சக்ரவர்த்தி முடிசூடும் சம்ப்ரவமே,
தரணியங்கும் புகழும் வைபவமே,


லண்டனிலே ஸ்டீமரேறி ஏடென் வழியாக வந்து,
தண்டு தாளங்களுடன் ஜார்ஜு மன்னர் முடி புனைன்தார் ?

டெல்லி நகரத்திலே டிஸம்பர் பதினெட்டினிலே
சொல்ல முடியாதுஙம்மா, ஸ்வதேசி மன்னர் கூட்டமதை,

சக்ரவர்த்தி முடிசூடும் சம்ப்ரவமே,
தரணியங்கும் புகழும் வைபவமே

காந்திக்கும் பாட்டு, துரைக்கும் பாட்டு, என்ன சமத்துவம்!

'என்ன வார்த்தை சொன்னாயடா தொன்றம்மல்லண்ணா!,

நீ வந்தார்ப்போல் நவாபு வந்தால் நிமிஷமிருக்க மாட்டேன்,

பணம் என்ற சொல்லே காதில் விழுந்தால்
பாய்ந்து வெட்டுவேன் நான்,

டாரு டாராய் வெட்டிப் போடுவேன்
நவாபு சேனையைத் தான்!' -


வரிப் பணம் கேட்டு நவாபு அனுப்பித்த தூதரிடம் ராஜா தேசிங்கு வீரமாக பாடுவதான இந்தப் பாடலை பாட்டி ஆக்ரோஷமாய்ப் பாடும் போது வீட்டு விவகாரமெல்லாம் மறந்து போகும்.

பாட்டிக்கும் தான் என்று இப்போது நினைக்கிறேன்,

தாத்தா ''காப்பி பொடி வாங்கி பத்தே நாள் தான் ஆச்சு,அதுக்குள்ளே தீத்துட்டேளா'' என்று ஆங்காரமாய் கத்தினால்,

'என்ன வார்த்தை சொன்னாயடா........'

பொருத்தமாய்த் தான் இருக்கிறது!!!

இன்னும் பல பாடல்கள் கஷ்டங்களில் மட்டுமின்றி எல்லா சமயங்களுக்கும் பாட்டு ஒரு துணை பாட்டிக்கு.

பாட்டியின் அப்பா பள்ளிக்கூடத்தில் உள்ள எல்லா ஆசிரியர்களின் பெயரும் எனக்கு இன்னும் மனப்பாடம் இன்றும்!

‘சர்வாடம்ப்ரமாம் குமரலிங்கம், தங்கும் மாணாக்கர்கள் கல்விச் சங்கம்’

(மணிப்ப்ரவாளத்தை முழுதாக மறந்த எழுபதுகளில் எனக்கு இது முழுதும் புதிது,

‘சர்வ ஆடம்ப்ரம்’-மும் ‘மாணாக்கர் கல்விச் சங்கம்’- மும் ஒரெ வாக்கியத்தில் எழுத முடிகிற நடையை உதறி விட்டது ஒரு விஷயத்தில் தமிழின் நஷ்டமென்று நான் சொன்னால் தமிழ் பேசும் நல்லுலகத்தில் உதை படுவேன்!)

‘தரிசனமொடு தலைமியில் வரும் ப்ரெசிடென்ட் சார்,
தர்மதுரை ராமசாமிக் கௌண்டர்,
தன்யராம் ஹெட்மாஸ்டர் சார்,
தனமுத்து சுப்ரமண்ய பண்டிதரே,
தரமோர்க் கிள்ளை ? பெருமாள் பிள்ளை,
சாஸ்திரி ராமனாதய்யர் துரை ராமசாமி லக்ஷ்மிராஜு சம்மதியில்''


இதில் பாட்டியின் அப்பா ராமனாதய்யரென்று நினைக்கிறேன்.
இன்னும் தனது சகோதரியுடன் சேர்ந்து மாலை நேரங்களில் பாடிய பல பாடல்கள் பெரிய தாத்தா எழுதியது என நினைக்கிறேன் !

அம்மா, உனக்கு நினைவிருந்தால் வலை விரி!
(தேவி எனைக் காரம்மா)

பாட்டியைப் பற்றி சிலவிஷயங்கள் என் நினைவுகளில், வெகுளி, வாழ்க்கயைப் பற்றிய வரைமுறைகளில் சிறிதும் குழப்பமில்லாமல், கண்டதே காட்சியாய் வாழ்ந்து முடித்தவள்.
சூதுக்கும் வாதுக்கும் இடம் கொடுக்காமல் இதயமும் வாயும் ஒன்றாக வாழ்ந்தவள்.

'நாம் பாத்திரத்துக்கு அடிமையா இல்லை பாத்திரம் நமக்கு அடிமையா' என்பதான தர்க்கத்தில் வீட்டில் பாத்திரம் பத்தாத குறைபாட்டை மறக்க முயலும் escapism ஒரு weakness என சொல்லலாமோ?

இந்த விதமான வாழ்க்கை முறையால் ஏற்பட்ட பல குடும்ப பிளவுகளை she gracefully tackled.

பாட்டி தாத்தாவின் கல்யாண வாழ்க்கை, gives an insight into arranged Indian maariage.

இதைப் பற்றி இன்னொரு முறை எழுத வேண்டும்.!

நினைவலைகளில்...!

என் அம்மா பாடிய பாட்டுகள்!

"அடுத்து வந்த என்னைத் தள்ளலாகாது!
அரஹரா என்று சொன்னாலும் போதாதோ?"


அம்மா சமையல் உள்ளே கணீரென்று பாடுகிறாள்!

புகைமண்டிய, எரியாத அடுப்பை ஊதி ஊதி களைத்து, இந்த மாதிரியான பாடல்களை அம்மா பாடுவதை நான் பலமுறைக் கேட்டிருக்கிறேன்...

"சம்போ! கங்காதரா! சந்ரசேகரா! ஹரஹர!"

ஏதாவது கஷ்டமான சூழ்நிலைகளில் அம்மா பாடுவதை பல நேரந்க்களில் கண்டு கேட்டிருக்கிறேன்!

"கண்டாமணி ஆடுது! கண்டுபிணி வாடுது!"
"சிவலோக நாதனைக் கண்டு சேவித்திருப்போம்! வாரீர்!"


"உடலைவளர்த்தேன்! உயிர் வளர்த்தேனே!" திருமூலர் பாடல்!

"வெட்டவெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்கு
பட்டயம் ஏதுக்கடி!குதம்பாய்!"
போன்ற குதம்பை சித்தர் பாடல்!

"தாரகமே நீ பாரு! பவந்தாண்டியே கரை சேரு! மனமே! (தாரகமே)

இன்றைக்கு இருப்பார் நாளைக்கு காணோம்
நிலையில்லாக் காயம் மனமே!"


யார் பாடல்?தெரியாது!

இப்படியோர் பாடல்!

"மோசம் போகாதே! மனமே! மோசம் போகாதே!
ஒன்பது வாசலின் கூடு!
உற்று பார்த்தால் மலக்காடு!
துன்பதிற்காகிய வீடு!
இந்த துற்புத்தியைத் தள்ளி போடு!"


தேசபக்தி பாடல்கள் நிறையப் பாடல்கள் அம்மா பாடி கேட்டிருக்கேன்!

"பொழுது புலர்ந்தது! யாம் செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்!"


பெண்விடுதலைக் கும்மி பாடல்

" ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை யென்றெண்ணியிருந்தவர்
மாய்ந்து விட்டார்!"

"கற்பு நிலை யென்று சொல்ல வந்தால்
இருகட்சிக்கும் அஃதை பொதுவில் வைப்போம்!"


சிறப்பாகப் பாடுவாள்!

"கனிந்து வந்தேமாதரம் ஓதும்...
...லோகமான்ய பால கங்காதரத் திலகமே!
அஞ்சாத பால கங்காதரத் திலகமே!"

"காந்தி லண்டன் சேர்ந்தார் கைகூப்பித் தொழுவீர்!"

"கதர்கொடி கப்பல் தோணுதே!",


திருமதி சுந்தராம்பாள் பாடியது என நினைக்கிறேன்!

வள்ளலார் பாடல், தண்டலையார் சதகம், எல்லாம் அம்மா எப்படி எப்போது படித்து தெரிந்து கொண்டாளோ !

இதைத் தவிர கும்மி, கோலாட்டப் பாடல், கண்ணன் ஓடக் கும்மி, போன்ற பாடல்களும் அம்மா ஆசையாகப் பாடிக் காட்டியிருகிறாள்!

இன்னும் இன்னும் நிறைய! மும்மூர்த்திகளின் சில பாடல்களும் அம்மா பாடி கேட்டிருக்கிறேன்! என்னுடைய 30 களில்!

"மதுரைக் கரசியான கண்மணி!
மாட்சிசேர் மீனாட்சி அம்மணி!
சதுர்முகனோடு முனிவர் பணியும்
தாரணி! நாரணி1!பூரணி!காரணி!"


இன்னொரு பாடல்...

"தருவாய்!நல்வரம்!தாயே!வாணி!
தருண மிதுனதடிச் சார்ந்தெமைப் பேணி!
குருவாய் உலகில் குறை தவிர்த்திடவே
தருவாய் குருகிய மதி வினைக் கெடவே!"


பாபனாசம் சிவன் பாடல்களும் அம்மாவின் விருப்பமாகும்.

என் சிறியவயதிலிருந்து அம்மா பாடுவதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் என்பதை நினைப்பதே எனக்கு இன்றைக்கும் மகிழ்ச்சியை தருகின்றது!