Showing posts with label தாரமங்கலம். Show all posts
Showing posts with label தாரமங்கலம். Show all posts

Friday, 12 March 2010

சந்தை!



ஒரு காலத்தில், மக்கள் தங்களிடமுள்ள பண்டங்களை ஓரிடத்தில் கூடி, விற்பனை செய்வார்கள்.

அது பணம் பெற்றுக்கொண்டோ, அல்லது பண்ட மாற்றாகவோ நடைபெறும்.

தனது ஆசை எண்ணமாக, பாரதியாரும் தம் பாடலில் கூறுவார்!

"கங்கை நதிப் புரத்துக் கோதுமைபண்டம்
...காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்"
சிங்க மராட்டியர்தம் கவிதைக் கொண்டு
...சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்!"


பண்டைக் காலத்தில்,திருவிழாக்காலங்களில், மக்கள் கூடி,தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். இப்போதும் திருவிழாவின் போது "சந்தை" கூடும்!

ஆனால் "வார சந்தை" என்பது கிராமத்து மக்களுக்கு மிகவும் முக்கியம். அன்றாட தேவைகளுக்கு ஏற்ற பொருள்களை வாங்குவதற்கு மக்கள் சந்தைக்குச் செல்வார்கள்.

எங்கள் ஊரில் (தாரமங்கலம்) வியாழன் தோறும் சந்தை கூடும்!

சந்தை என்றால் ஒரு எதிர்பார்ப்பு எங்களுக்கு!

எங்கள் தந்தை காய்கறிகளுடன், பொரிகடலை, பழங்கள் வாங்கி வருவார்!

எங்களுக்கெல்லாம், (நாங்கள், எங்கள் சித்தப்பா பசங்களோட ஏழு, எட்டு பேரு இருப்போம்!) பகிர்ந்து உண்ணுவதில் மகிழ்ச்சி!

அந்தந்த காலத்தில் என்னப் பழம் கிடைக்குமோ, வாங்குவார். மாம்பழம், கொய்யாபழம், வெள்ளரிப்பழம்(வெல்லம் தொட்டு சாப்பிடச் சுவையாக இருக்கும்!) கோசப் பழம்(தர்பூஸணிப் பழம்!) பேரிக்காய், சீதாப் பழம் போன்ற பலவகைப் பழங்கள்...

கரும்பு, அப்பா வெட்டித் தருவார். நாங்கள் வாசலில் கதைப் பேசிகொண்டே கரும்பைக் கடிச்சி, உறிஞ்சிக் கொண்டே...ப் பேசுவோம்!



காய்களெல்லாம் கூறு,கூறாகத்தான் விற்பார்கள்!

அக்கம்பக்கத்து கிராமத்தில் விளையும் காய்களும் புதுசாகிடைக்கும்!

கொளத்தூரு கத்திரி பிஞ்சு ஒரு புட்டிக்கூடை ஒரு ரூவாய்க்கு வித்திருக்கு!

எங்கள் வீட்டு புழக்கடையில், பந்தலில், அவரை, பீர்க்கங்காய்,புடலை எல்லாம் காய்க்கும்!

வெங்குவின் படைப்பு! உழைப்பு! வெங்கு என் அண்ணன்(சித்தப்பா மகன்), நன்றாக தோட்ட வேலை செய்வார்!

("வெங்குவின்கடை" யில் வரும் அதே வெங்கு!)

அவரைக் "கீரை மாஸ்டர்" என்று கூறுவோம்! கீரை பாத்தி கட்டி பாதுகாத்து வளர்ப்பார்!

சந்தையை விட்டு விட்டேனே! சந்தையில் தானியங்கள், புளி, மிளகாய், கொத்தமல்லிவிரை(தனியா) விவசாயிகளுக்குத் தேவையான பொருள்களும் கிடைக்கும்!

மக்களுக்குச் சேந்து கிணத்துக்கு வேண்டுமென்ற கயிறு, வாளி (பக்கெட்டு) எல்லாம் கிடைக்கும்!

கயிறு "பத்து மாரு, பதினஞ்சு மாரு" என்ற அளவில் வாங்குவார்கள் !

காய்கள் என்று சொல்லும்போது உருளைக் கிழங்கு (என்பது அபூர்வம்!) சந்தையில் அப்பா வாங்குவார்!

மறுநாள், வெள்ளிக்கிழமை "உருளைக் கிழங்கு பொடிமாஸ்" உண்டு! சாம்பார் (சின்ன வெங்காயம் போட்டு) உண்டு!

பெரிய வெங்காயம் அப்போதுதான் கிராமத்துக்கு வந்தது! அதிசயமா இவ்வளவு பெரிய வெங்காயம் என்று அதிசயித்திருக்கிறேன்!

வியாழன், கல்கி வரும் நாள்! ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்!

இன்னொரு மறக்க முடியாத நினைவு!

சந்தைக்கு சந்தை தவறாமல், கண் தெரியாதப் பிச்சைக்காரர் ஒருவர் தெருவில் பாட்டுப் பாடிப் பிச்சைக் கேட்பார்!

காச்சனீ முத்துக் கருப்பங்களா!
கரும வாதனையில் உழன்றேன்!


(காசினியில் முத்துக்கருப்பஙளே! நான் கரும வாதனையில் உழல்கிறேன்!)

அடுத்து தன் வயிற்றில் அடித்துக் கொண்டு,

"ஒத்துருனாச்சும், ஆணைப் பெண்ணைப் பெத்த புண்ணியரே! ஒரு காச்சுனாச்சும் போடுங்கய்யா! அம்மா!"

வாசலில் தெருவில் காணும் காட்சி!

சந்தையிலிருந்து வரும் மக்கள் அவருக்குத் தின்பண்டமாக அவித்தக் கிழங்கு போன்றவை தருவார்கள்! காசுகளும் போடுவார்கள்! எங்கள் வீட்டிலும் அவருக்குக் காசுகள் தருவோம்!

சந்தைன்னு நினைத்தாலே, அந்த பிச்சைக்காரர் நினைவு வரும்!

பிறகு என்ன ஆனர் தெரியவில்லை!

Tuesday, 1 December 2009

வீடு ! - 4

புழக்கடை ரேழியைக் கடந்து சின்ன தாழ்வாரம் அதையொட்டி 'வெந்நீர் உள்'.

அப்புறம், புழக்கடையில் மேற்கால ஒரு சேந்து கிணறு!

எங்க சித்தப்பா, பெரியப்பா வீடும் எங்கள் வீட்டை ஒட்டி இருக்கும்.

புழக்கடை கிணற்றை எல்லோரும் உபயோகிப்போம்!

தெற்கு மூலையிலே அந்தக்கால கழிப்பறை! மேற்கூரை கிடையாது! வெட்ட வெளியா இருக்கும்!

இப்போ வீட்டுக்குள்ள வருவோம்!

கூடத்தைத் தொட்டாற்போல ஒருபுறம் சமையல்'உள்'

இன்னொருபுறம் 'கண்ணன் உள்'!என் தம்பியின் அறை!

சின்னவயசில, காய்ச்சல் வந்து கால்கள் நடக்க முடியாமே முடக்கி விட்டது. கையும் ஓரளவு இயங்கும்!

அவன் அந்த உள்ளில் தான் படிப்பு, தியானம் எல்லாம்! அவன் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பக்தனாக இருந்தான்!

இந்த வீட்டில்தான் பகவான் அடி அடைந்தான்!

பிறகு,வாசல் ரேழியை ஒட்டி,'படுக்கும் உள்'

அந்த உள்ளில் ஒரு அட்டாணி(பரண்) இருக்கும்.

அந்த அறையை பலகை மச்சு உள்'ளுன்னு சொல்வார்கள். குளிருக்கு அடக்கமாக இருக்கும்.

புழக்கடை நிலம் விற்கப்பட்டது! வீட்டின் இடதுபக்கத்து நிலம் விற்கப்பட்டது! இரண்டு சகோதரிகள் திருமணங்கள் நடந்தன!

வீட்டின் பழுதை சரி பார்க்கமுடியா சூழ்நிலை!

தருமபுரிக்கு மாற்றல் வந்தது!

என் பெற்றோருடனும், என் பெண்ணுடனும், தருமபுரி வந்து சேர்ந்தேன்.

மின் அலுவலர் வேலை(எழுத்தர்)

சின்ன மகன் கோவையில் டாக்டருக்கு படித்தான்.

பெரிய மகன் டெல்லியில் எஞ்சினீயரா வேலைப் பார்த்து வந்தான். தம்பியை, எங்களை கவனிச்சுக்கிட்டான்.

அப்பாக்கு வீட்டை விட்டு வந்தது பிடிக்கவில்லை!

கொஞ்ச நாளில் அப்பாவும் இறந்தார். அம்மாவும் சிலவருடங்களில் இரண்டாவது அண்ணன் விட்டில், பாரிஸ வாதத்தால் இறந்து போனார்.

வீடு விற்கப் பட்டது! அது தரைமட்டம் ஆக்கப் பட்டது!

உயிரோட்டமுள்ள வீடும் ஒரு நாள் இல்லாமல் தான் போகும்!


எங்கள் மனசில் என்றும் குடியிருக்கும் வீடே! உன்னை மறக்க முடியுமோ?

எங்கள் வாழ்க்கைக்கு சாட்சியாய் இருந்தாய்! ஆதாரமாக இருந்தாய்! உன்னை என் உயிருள்ள வரையும் நினைத்திருப்பேன்!

முடிந்தது...

Monday, 30 November 2009

வீடு ! - 3

புழக்கடை ரேழி !

புழக்கடை ரேழியின் இரண்டுச் சின்னப் பரண்கள்.

ஒன்றில், விறகுகள் இருக்கும். மற்றொன்றில்,எருமுட்டை, செம்மண் உருண்டைகள் இருக்கும்.

எருமாமுட்டை (சாணியைதட்டி வெய்யிலில் காயவச்சி, எடுத்து வைத்தவை) வெந்நீரடுப்பு, சமையல் அடுப்பு எரிய ரொம்பத் தேவை.

அப்பா, கொடுவாளால் விறகைச் செதுக்கி, செதுக்கி, சிராய்த் தூளாக்குவார். சிராய்த் தூளும் ஜோராய் அடுப்பெரிக்க உதவும்.

ஆனால், மழைக் காலத்துலே எரியாத விறகும், காயாத எருமுட்டையும் அமையும்!அம்மாக்குத் திண்டாட்டம்தான்!

ஊதுகுழலால்(கண்ணன் கைக் குழல் அல்ல!)அடுப்பை ஊதி ஊதி எரிய வைக்கறத்துக்குள்ள எம்பாடு உன்பாடு ந்னு ஆயிடும்!

செம்மண் உருண்டைகள்(விசேஷங்களுக்குச் செம்மண் இடுவோமே! அதுக்கு) இருக்கும்.

புழக்கடை ரேழியின் மூலையில் ஐந்தாறு உலக்கைகள் இருக்கும்.

குழிவாய்ப் பூண்போட்டது, தட்டையாய்ப் பூண் போட்டது, என்று இருக்கும்.

வீட்டிலேயே 'அவல்' இடிப்பார்கள்.

அம்மா, புழுக்கி ஆர்வாடப் போட்ட நெல்லை பெரிய இரும்பு வாணலியில் போட்டு, ஒரு புதுத் தென்னங்குச்சிகளால் செய்த மாறால் (விளக்குமாறு) வேகமாக வறுத்து, உரலில் கொட்டினால், எதிரும், புதிருமா ரெண்டு வேலையாட்கள் 'சொய்' 'சொய்" ன்னு இடிப்பார்கள் !

தட்டை தட்டையா அவலு உமியோட இருக்கும்! பிறகு புடைத்து அவல் தனியாக எடுத்து வைப்பார்கள்.

மாவு, மிளகாய்த்தூள் எல்லாம் உரலில் இடித்துத்தான் செய்யப் படும். அதுக்குன்னே கடப்பாரையும் உண்டு!

ஊருக்குள்ளே, நெல் அரவை மில்லு இருக்கு!எள் எண்ணெய், கடலை எண்ணை ஆடுகின்ற செக்கு உண்டு! எள்ளுப் புண்ணாக்குத்(பிண்ணாக்கு?) தின்ற அனுபவம் இருக்கு!

இளையராஜாப் பாட்டு நினைவு வருது! 'போடாப் போடாப் புண்ணாக்கு போடாதேத் தப்புக் கணக்கு!'

இன்னிக்கு தயாராப் பாக்கெட்டுல மாவா, பொடியா எல்லாம் கிடைக்குது!

வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்தல், ஓடு மாத்தி வேய்தல் போன்ற கவனிப்புகளும் வேண்டும். இல்லாட்டா மழைவந்தா வீடெல்லாம் ஒழுகும்! திண்டாட்டம் தான்!

தூங்காமே துன்பப் பட்டதும் நிறைய அனுபவம் உண்டு!

நான் எழுதற கால கட்டம், என்னுடைய பள்ளி வயது!

மூட்டைப் பூச்சிக் கடி, கொசுக் கடி, சிரங்கு.... இவற்றில் சிக்காத பிள்ளைங்க
கிடையாது!

அப்போ விறகுப் பஞ்சம், அரிசிப் பஞ்சம் போன்ற கஷ்டமான நாட்களையும் கடந்துதான்
வாழ வேண்டியிருந்தது!

இன்னும் வரும்....

Sunday, 29 November 2009

வீடு ! - 2

வீடு !

நான் வளர்ந்து வாழ்ந்த வீடு!

வாழ்க்கைப்பட்டுப் போன..... வாழ்க்கைப் பட்டுப் போன பின்னும் பிஞ்சும், குஞ்சுமா
மூணுப் பிள்ளைகளோட கணவனை இழந்து வந்த போது தஞ்சம் தந்ததும் இந்த வீடுதான்!

என் மக்கள் வளர்ந்ததும் இந்த வீட்டில் தான்!

பெற்றோர், சகோதர, சகோதரிகளும் அனுசரணையாக இருந்தார்கள்.

தாழ்வாரத்தின் ஓரத்தில், எந்திரக்கல் மாவு அரைத்தல், ரவை உடைத்தல் போன்றவற்றிற்கு உபயோகிப்போம்.

பருப்பு உடைக்க ஒருவிதமான இயந்திரக் கல்லுண்டு. கல்லின் மேல்பகுதி லேசாக இருக்கும்.

முற்றத்தில், இரவில் நிலா பார்க்கலாம்.

நிலாச்சோறு, அம்மா கையில் போட, நாங்க சாப்பிட்டு இருக்கோம்!

பகல் வெய்யிலில், விறகு போன்றவற்றைக் காயப் போடுவோம்!

இதென்ன புதுமையா? ன்னு கேக்கலாம்!

இன்னிக்கு திறந்த வெளிக் காற்று வீட்டினில் கிடைப்பது அரிது!

பொட்டியாட்டம் வீட்டுக்குள்ளே, மின்விசிறி தான் காத்து கொடுக்கும்!

நாங்க அண்ணன், தம்பி, தங்கைகள் எட்டு பேரு.

சித்தப்பா, பெரியப்பா மக்கள் எல்லாம் விசேஷங்களில் கூடுவோம்!

வீடே திமிலோகப் படும்!

எல்லாம் உண்டு! சண்டையா? பேச்சு வார்த்தையா எல்லாம் உண்டு! மகிழ்ச்சி ஆரவாரம் எல்லாம் உண்டு!

புழக்கடையில், ஈரக் கடலைக்காயை (மல்லாக்கொட்டை? நிலக்கடலை?)

மண்தரையில் கொட்டி பரவலாக்கி, அதன்மேலே நல்லாக் காஞ்ச தென்ன ஓலையைப் போட்டு
நெருப்புப் பத்த வெச்சு எரியும்!

அப்போ சுற்றிலும் அண்ணன் தம்பிகள், அமர்ந்து கொண்டு குச்சியால் கிளறி விடுவார்கள்.

இப்போ, கடலை நல்லா வறுபட்டிருக்கும்! சிறிது நேரத்தில், எல்லாக் கடலையையும் பொறுக்கி ஒண்ணு சேத்தணும்! அவரவர் அங்கேயே கடலையை சாப்பிடுவார்கள்!

காலேஜ் விஷயம், ஹிந்தி, இங்கிலீஷ் சினிமா, இதைப் பற்றி எல்லாம் பேசுவார்கள்!

இன்னும்வரும்...

Saturday, 28 November 2009

வீடு ! - 1

வீடு!

நம்மைத் தனக்குள் அரவணைத்துக் கொள்ளும்! நம்முடைய சுக, துக்கங்களில் பங்கு கொள்ளும்!

வீடு என்பது சொத்தா? ஜடப் பொருளா? வெறும் கல்லு, மண்ணு, சுண்ணாம்பு.... இவைகளைக் கொண்டுக் கட்டப்பட்ட கட்டடம் மட்டும் தானா?

இல்லை! இல்லை! நம்மோடு வாழ்ந்து வரும் உயிர்ப் படைப்பு!

எல்லா நிலைகளிலும் பாதுகாப்பு மட்டுமன்று! நம்முடன் துணை இருக்கும் உயர்படைப்பு!

மக்களின் இன்ப, துன்ப, கோப, தாப, சிரிப்பு, அழுகை, வறுமை, செல்வம், காதல், உறவு, பிரிவு போன்ற அத்தனையும் வீடு அறியும்!

வாசல் முத்தம்!

முன்றில்! பெருக்கி சாணம் தெளித்து, அழகழகாய் புள்ளிக் கோலங்களும், கோடு கோலங்களும் நிறைந்து விளங்கும்!

வாசல் திண்ணைகள்!

இரண்டு திண்ணைகள்! வீட்டுப் பாடம் படித்து எழுதுவோம்! கதைகள் பேசி மகிழ்வோம்!

மழை நாட்களில், கயற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்போம்!

சந்தடி சாக்கில் மழையில் இறங்கி ஆடுவோம்! கப்பல் விட்டு விளையாடுவோம்!

திண்ணைகளுக்கிடையே ஏழு படிகட்டுகள்!

வாசலின் சிறிய திண்ணையில் ஒரு சின்ன உள் உண்டு! அது 'காந்தி சிறுவர் சங்கம்' அலுவலகம்! தம்பி, தங்கைகள் அவர்கள் நண்பர்களுடன் சிறப்பாக நடத்திய சிறுவர் சங்கம்!

ரேழியும்,ரேழித் திண்ணையும் !

ரேழித் திண்ணையில் பிரசவங்களும் நடந்திருக்கின்றன!

மற்றபடி குழந்தைகள் சொப்பு வைத்து விளையாடுவார்கள்! இங்கும் படிக்கலாம்!

நெல்லுக் கொட்டிவைக்கும் 'தொம்பை' ரேழியிலும், வீட்டின் அறையிலும் உண்டு!

தாழ்வாரமும்,கூடமும்,தொட்டி முத்தமும்!

ஓடியாடி விளையாடத் தோதான இடம்.

எல்லா உள்ளேயும் (உள்=அறை) ஒளிந்து விளையாடலாம்!

குழந்தைகளின் விளையாட்டுத் தொல்லைகளுக்கு பொறுமை காக்கும் பெரியோரும் உண்டு, கோபத்துடன் கத்தி பொறுமை இழக்கும் பெரியவர்களும் உண்டு!

இந்த கொடுவாள்,அரிவாள் போன்றவை வைத்து இடம் தாழ்வாரத்தின் மேல் கூரையில் இருக்கும்

'எரவாணம்' (இறவாணம்?) மரத்தில் ஆனது.

கூடம் என்பது (பட்டாசாலை?) வீட்டின் சகலவித நல்லவைக்கும், குழந்தைகள் அப்தபூர்த்தி, கல்யாணம், சீமந்தம், வளைகாப்பு, மணமான தம்பதியரை மணையில் அமர்த்தி, பாட்டுப் பாடி, வாழ்த்தி, ஆரத்தி எடுத்துக் கும்மி அடித்து மகிழ்வதும் கூடத்தில்தான்!

சோக நிகழ்வான திவசம் செய்தல்(சிரார்த்தம் செய்தல்) கூடத்தில் தான்!

எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதும் இந்தக் கூடத்தில்தான்!

அப்பா மதிய உணவருந்திய பின்பு, பாய் விரித்து தலைக்கு ஒரு பலகையைச் சாய்வாக வைத்துக் கொண்டு சிறிது நேரம் இளைப்பாறுவார்!

வெய்யில் தாழ்வாரம் கொறட்டுக் கல்லைத் தாண்டினால் மதியம் மணி இரண்டிற்கு மேல் ஆகிறது என்று பொருள்!

இன்னும் வரும்.....

Thursday, 20 November 2008

வாத நாராயண மரத்து 'ஒடக்காண்'



என் குழந்தைப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கையில் தாரமங்கலமென்ற கிராமத்தைப் பற்றியும் அதன் 1970 களின் வாழ்க்கையைப் பற்றியும் எழுத வெண்டியதாகிறது.

எனக்குத் தெரிந்த 'தாரை மா நகர்' என்பது ஒரு சிறிய கிராமம்.

வயல் வெளிகளும் தென்னைத் தோப்புகளும் நிறைந்த பசுமையான இடங்களைத் தவிர சிறிதும் பெரிதுமான சில நூறு வீடுகளையும் ஒரு பெரிய கோவிலையும் மையத்தில் கொண்ட ஒரு அழகான கிராமம்.

(3 டாக்டர்களும் 2 மருந்து கடைகளும் 3 பள்ளிக் கூடங்களும் ஒரு சினிமா கொட்டகையும் கிராம வாழ்க்கையின் அடையாள நிதர்சனங்கள்.)

ஸன்னதி தெரு, அக்ரஹாரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகே எங்கள் வீடு.

எனது 17 வருட வாழ்க்கையிலேயே அந்த வீட்டில் நிறைய மாற்றங்கள்.

மூன்று தென்னை மரங்கள் தேன் கூட்டைக் கலைக்க வைத்த நெருப்பு சாகஸத்தில் இரண்டானது;

முதலியாருக்கு வீட்டின் முன் பகுதியை விற்றபின் வெங்கு மாமாவின் கடையடைத்தது,

பிறகு விற்ற பகுதிக்கு அடையாளமாக எழுப்ப பட்ட என் இடுப்புயர சுவற்றின் மீது நடந்து போன நாட்கள்...

பின் மழை பெய்து மண் கரைந்து போய் அந்த சுவர் என் காலுயரமானது...

நினைத்துப் பார்க்கையில் மழையினாலா அல்லது நான் உயரமானதாலா என்ற குழப்பம் இப்போது.

தென்னை மரங்களுடன் படர்ந்து வளர்ந்த ஒரு வாத நாராயண மரமும் அதில் வசித்த ஒரு 'ஒடக்காண்' குடும்பமும் என் மனதில் இன்றும் பசுமையாக.

(ஓணான் என்றால் 'ஒட்டகம் ஓணான் ஔவையார்' என்பது போல் நல்ல தமிழ் வார்த்தையாகிவிடும். எங்கள் தாரமங்கல தமிழில் அது என்றும் 'ஒடக்காண்' தான்!)

சின்ன வயதில் அந்த ஒடக்காணுடன் நிறைய பகிர்ந்து கொண்டிருக்கிறேன்;

என் சந்தோஷங்களை, என் தோல்விகளை, என் எண்ணங்களையும் ஆசைகளையும் என் பயங்களையும் கிலேசங்களையும் ....

இப்படி எது நான் சொன்னாலும் பொறுமையாக நின்ற இடம் நகராமல் தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டிருக்கும் அது!

என் 4 வயதில் பள்ளி ஆரம்பித்த நாட்களில், டீச்சரிடம் திட்டு வாங்கினாலோ, நண்பனிடம் சண்டை போட்டாலோ, மணி படுத்தினாலோ, உஷாவிடம் தகறாரென்றாலோ...

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு விட்டு ஆமோதிக்க நல்ல ஒரு கௌன்ஸில்லர், தெரபிஸ்ட் அந்த ஒடக்காண்!

பாட்டுப் போட்டிக்கு தயார் செய்யவெண்டுமானால், ஓடு தோட்டத்துக்கு!

நல்ல மழையில் வருமே ஒரு 'மெலன்கொலி'- மனக்கிலேசமா...(அது ஒழுகும் கூரையாலா அல்லது மழை வந்தவுடன் தாத்தாவுக்கு பிடிக்கும் 'தண்ணீ பூதத்' தினாலா? அல்லது வெளியில் ஓடியாடி விளையாட முடியாதாலா?) ஒடு வாசலுக்கு..

சொட்டும் மழையில் குளிர்ச் சிலிர்ப்புடன் அந்த ஒடக்காண்.

சில வேளையில் பள்ளியிலிருந்து வீடு வந்தால் காணாமல் போய் விடும் ஒடக்காணைத் தேடி மரம் மரமாய் பார்வையை ஒட்டினால்,

மிகச் சிறந்த 'கேமோFலாஜ் ஆர்டிஸ்டாய்' கண் முன்னாலேயே மறைந்திருக்கும் அந்த நண்பனைப் பார்த்ததும் தான் நிம்மதி வரும்!

பின்னாளில் பாரதியின் கயிற்றைப் பற்றிய வசனக் கவிதையைப் புரிந்து கொள்ள முற்படுகையில் அவரது கற்பனை எனது ஐந்து ஆறு வயதுக்கான 'ஒடக்காண்' கற்பனையை நினைவூட்டியது.

- திப்பிலி.

Monday, 4 August 2008

எங்கள் ஊர் - தாரமங்கலம் !



சேலம் நகரிலிருந்து 19 மைல் தொலைவில் தாரமங்கலம் என்னும் எங்கள் கிராமம் இயற்கை அழகு நிறைந்து விளங்குகிறது.

கோவில்கள், குளங்கள், பள்ளிகள், ஊருக்கேத் தனி அழகூட்டுகிறது!

கைலாசநாதர் கோவில், சிற்பக் கலையின் அற்புதங்கள் நிறைந்தது! சுற்றுலாத் தலம்!

எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனுமு..!

வருடாவருடம் சிறப்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்து அளிக்கும் தாரைவாழ் செங்குந்தர் மஹாஜன அன்பர்களுக்கு என் மனமுவந்த நன்றியைச் சொல்லிக் கொள்வேன்.

திருவிழா நாட்களில், செவிக்கும், மனதுக்கும் சுவையளிக்கும் சொற்பொழிவுகள், இசைநிகழ்ச்சிகள்!

சிலம்பொலி செல்லப்பா,மா.வே.பசுபதி, சத்திய சீலன், அ.வ.ராஜகோபால், சுகிசிவம், சொ.சொ.மீ.சுந்தரம், அரு.நாகப்பன், இன்னும் பலர்...நினைவு இல்லை.

சீர்காழிகோவிந்தராஜன், மதுரை சோமு, சூலமங்கலம் சகோதரிகள், இன்னும் பலர் இவர்களின் இசைநிகழ்ச்சிகளைக் கேட்டுமகிழ்ந்திருக்கின்றோம்!

சவுணிக்கட்டு எனும் சொல் அன்றாட காய்கறி அங்காடியைக் குறிக்கின்றது. ஹொய்சளர் ஆட்சியினால் (முன்னொருகாலம்) இந்த சொல்இங்கு பேச்சு வழக்கில் வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

'டூரிங் டாக்கீஸ்' சினிமாக் கொட்டகை, எங்கள் ஊரைச்சுத்தியுள்ள கிராமத்துமக்களும் வந்து பொழுதுபோக்காய் கண்டு இரசித்துச் செல்வார்கள்!

எங்கள் ஊரைப் பற்றிய பல இனிய நினைவுகள் இன்னும் உண்டு!

அன்புடன்,
தங்கமணி.