Saturday 22 November, 2008

வெங்குவின் பெட்டிக் கடை!

அந்த ஆரம்ப நாட்களின் நினைவுகளில் ஒன்று 'வெங்குக் கடை'.

அருணாசலம் 'ஜலம் மாமா' வாகவும், செல்லமணி 'மாமா''வாகவும் லக்ஷ்மி நாராயணன் 'அம்பி'மாமாவாகவும் ஆன போதிலும் வெங்கடேசன் மற்றும் 'வெங்கு' தான்.

மாமா என்ற விகுதி பெறாததற்கு காரணம், எந்தக் குழந்தையையும் கவரும் சிரிப்புடனான 'வளர்ந்த மழலை' யும் நூறு நூறு கதை சொல்ல தேவைப்படும் 'குழந்தைத்தனமான கற்பனையும்'

என் வயதுக் குழந்தைகளின் நண்பனாக அடையாளம் காட்டியதே தவிர 'மிரட்டும் மாமா' வாக அன்று.

எனவே நேற்றுப் பிறந்த 'வக்கீலாத்து' காயத்ரி முதல் வளர்ந்த 'வாசு' வரை எல்லோருக்கும் 'வெங்கு' தான்.

வீட்டு வேலையெல்லாம் 'மங்கு மங்கென்று' செய்ய சலிக்காத மனிதர்.

மற்ற நேரத்தில், தெரிந்த மந்திரத்தில் தெரிந்த உச்சரிப்பில் 'பூணூல்' போட்ட ஒரே காரணத்தால் கடவுள் மன்னிப்பாரென்ற ஒரே தைரியத்தில் சுற்றுப் பட்ட கிராமத்திற்கெல்லாம் 'புரோகிதர்' ஆக ஒரு அவதாரம்.

வளர்ந்த வயதில் கண் சரியாகத் தெரியாத வெங்குவை நான் சைக்கிளில் குருக்கப்பட்டி என்ற குக்கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள குக்குக்குக்குக் கிராமத்திற்கு (ஒரு சாவிற்காக) ஒட்டிச் சென்றதை மட்டுமே 'ஷ்யாம் பெனெகல்' ஸ்டைலில் ஒரு சினிமா எடுக்கலாம்!

தனக்கே உண்டான பாணியில் அவர் சொல்லும் கதைகளைக் கேட்பதென்பது ஒவ்வொரு தெவச மத்யானங்களின் சிறப்பம்சம்!

'வெங்கு வெங்கு ஒரு கதை சொல்லேன்' என்று நச்சும் குழந்தைகளுக்கு மத்தியில் ஒரு 'கேண்டால்F-ஆக அவர்!

பாட்டி வடை பண்ணும் கதையில் ஒரு சமையல் குறிப்பே நடந்து விடும்.

நன்கு சாப்பிட்ட பின்னும் பசியெடுக்கும் அந்த வடைக்கு.

ஆனால் பாட்டி வடையோடு நிறுத்த மாட்டாள்!

ஜிலெபி ஜாங்கிரி என்று பலப்பல பலகாரங்கள்!

சில நேரத்தில் காக்காய் வராமலேயே கதை முடிந்து அலிபாபா திடீர் விஜயம் செய்வார்!

வாரத்தில் ஒரு நாள் தவறாமல் செல்லும் மேட்டினீ ஷோ பலனாக (இரவில் கண் சரியாகத் தெரியாது) பல திரைக்கதை இயக்குனர் ரீதியில் ஒரு புகைப்படமாகவே கதை சொல்லும் திறன் அசத்தும்.



இந்த வெங்குவின் கடையில் என் நினைவில் இருப்பது கலர் கலாராய் இருக்கும் ஒரு பைசா மிட்டாய்.

மைதா மாவினாலான இனிப்பு உருண்டைகள் என்று நினைக்கிறேன்.

வீட்டில் இரண்டு பைசா கிடைத்த மாத்திரத்திலேயே தோட்டத்தின் இடப்பக்கமாக இருக்கும் 'இடைக்கதவு' வழியாக ஓடி கடை பின் பக்கமாய் நுழைந்து இருட்டில் சரியாகக் கண் தெரியாத வெங்கு கண்டு பிடிக்கும் முன்பாகவே மூன்று மிட்டாய்களை எடுத்துக் கொண்டு ' இந்தா வெங்கு இரண்டு மிட்டாய்க்கு காசு' என்று எப்போதோ ஏமாத்தியது இப்பொது மன வேதனையுடன் கூச வைக்கிறது!

சில வருடங்களுக்கு முன்னால் முதிர்ந்த வெங்குவிடம் இதைச் சொன்னேன்; சிரித்தார்.(புகைப்படம் மேலே)

பக்கத்துக் கடையில் க்ஷவரம் (ஆஹா!என்ன ஒரு வார்த்தை! நாவிதமும் அம்பட்டமும் இதற்கு ஈடாகுமா?) பண்ணிக் கொள்ள வரும் 'பெரிய' மனிதர்கள் வெங்கு கடையில் இல்லாத போது கேட்கும் 'Passing Show, Charminar, Scissors' போன்ற சிகரெட்டுக்களை எடுத்து கொடுத்து சரியான சில்லரை கொடுக்கும் பெரிய பொறுப்பு பின்னாளில் என் மேல் விழுந்ததுண்டு!

அப்போதெல்லாம் என்னவோ ஒரு பெரிய ஆஸ்தானத்துக்கே அதிபதி போல் உணர்வேன்! ஒரு பெரிய தொழிலதிபருக்கு உண்டான 'கெத்தோடு' 'பணத்தை' டீல் செய்வேன்.



அரிசி மில்லிற்கும் எங்களது வீட்டுக்கும் இடையிலான இடத்தை யாருடைய கல்யாணத்திற்காகவோ 'மிராசுதார்' TLV தாத்தா விற்ற பின் வெங்கு கடை சகாப்தம் முடிந்தது.

மேலே உள்ள புகைப்படத்தில் என் பின்னாலுள்ள (உலகப்போர் வெடிகுண்டு விழுந்தது போல் உள்ள) இடம் தான் வெங்குக்கடை!

2 comments:

CSR said...

Just through the tears that spread in my eyes, but fail to come out, is the only way I can record my comments to this core-of-heart posting.

The photos tell more story than Shyam Benegal!

At that age and with the life he faces now, are we capable of smiling like "Vengu"? I fail to get an affirmative answer myself!

Excellent tribute by you Dhileep!

Another such posting I would like to have from you is on "Ayyanaar".

Kumar

Thangamani said...

அன்பு திலீப்!
மிக அருமையாக"நீ கண்ட வெங்கு"வை
நினைவில் இருந்ததை எடுத்துச் சொன்னாய்!
உன் தமிழ்நடை சிறப்பு!மேலும் தொடர்க!
வாழ்த்துகள்!

அன்புடன்
தங்கமணி.