Friday, 12 March 2010

சந்தை!



ஒரு காலத்தில், மக்கள் தங்களிடமுள்ள பண்டங்களை ஓரிடத்தில் கூடி, விற்பனை செய்வார்கள்.

அது பணம் பெற்றுக்கொண்டோ, அல்லது பண்ட மாற்றாகவோ நடைபெறும்.

தனது ஆசை எண்ணமாக, பாரதியாரும் தம் பாடலில் கூறுவார்!

"கங்கை நதிப் புரத்துக் கோதுமைபண்டம்
...காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்"
சிங்க மராட்டியர்தம் கவிதைக் கொண்டு
...சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்!"


பண்டைக் காலத்தில்,திருவிழாக்காலங்களில், மக்கள் கூடி,தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். இப்போதும் திருவிழாவின் போது "சந்தை" கூடும்!

ஆனால் "வார சந்தை" என்பது கிராமத்து மக்களுக்கு மிகவும் முக்கியம். அன்றாட தேவைகளுக்கு ஏற்ற பொருள்களை வாங்குவதற்கு மக்கள் சந்தைக்குச் செல்வார்கள்.

எங்கள் ஊரில் (தாரமங்கலம்) வியாழன் தோறும் சந்தை கூடும்!

சந்தை என்றால் ஒரு எதிர்பார்ப்பு எங்களுக்கு!

எங்கள் தந்தை காய்கறிகளுடன், பொரிகடலை, பழங்கள் வாங்கி வருவார்!

எங்களுக்கெல்லாம், (நாங்கள், எங்கள் சித்தப்பா பசங்களோட ஏழு, எட்டு பேரு இருப்போம்!) பகிர்ந்து உண்ணுவதில் மகிழ்ச்சி!

அந்தந்த காலத்தில் என்னப் பழம் கிடைக்குமோ, வாங்குவார். மாம்பழம், கொய்யாபழம், வெள்ளரிப்பழம்(வெல்லம் தொட்டு சாப்பிடச் சுவையாக இருக்கும்!) கோசப் பழம்(தர்பூஸணிப் பழம்!) பேரிக்காய், சீதாப் பழம் போன்ற பலவகைப் பழங்கள்...

கரும்பு, அப்பா வெட்டித் தருவார். நாங்கள் வாசலில் கதைப் பேசிகொண்டே கரும்பைக் கடிச்சி, உறிஞ்சிக் கொண்டே...ப் பேசுவோம்!



காய்களெல்லாம் கூறு,கூறாகத்தான் விற்பார்கள்!

அக்கம்பக்கத்து கிராமத்தில் விளையும் காய்களும் புதுசாகிடைக்கும்!

கொளத்தூரு கத்திரி பிஞ்சு ஒரு புட்டிக்கூடை ஒரு ரூவாய்க்கு வித்திருக்கு!

எங்கள் வீட்டு புழக்கடையில், பந்தலில், அவரை, பீர்க்கங்காய்,புடலை எல்லாம் காய்க்கும்!

வெங்குவின் படைப்பு! உழைப்பு! வெங்கு என் அண்ணன்(சித்தப்பா மகன்), நன்றாக தோட்ட வேலை செய்வார்!

("வெங்குவின்கடை" யில் வரும் அதே வெங்கு!)

அவரைக் "கீரை மாஸ்டர்" என்று கூறுவோம்! கீரை பாத்தி கட்டி பாதுகாத்து வளர்ப்பார்!

சந்தையை விட்டு விட்டேனே! சந்தையில் தானியங்கள், புளி, மிளகாய், கொத்தமல்லிவிரை(தனியா) விவசாயிகளுக்குத் தேவையான பொருள்களும் கிடைக்கும்!

மக்களுக்குச் சேந்து கிணத்துக்கு வேண்டுமென்ற கயிறு, வாளி (பக்கெட்டு) எல்லாம் கிடைக்கும்!

கயிறு "பத்து மாரு, பதினஞ்சு மாரு" என்ற அளவில் வாங்குவார்கள் !

காய்கள் என்று சொல்லும்போது உருளைக் கிழங்கு (என்பது அபூர்வம்!) சந்தையில் அப்பா வாங்குவார்!

மறுநாள், வெள்ளிக்கிழமை "உருளைக் கிழங்கு பொடிமாஸ்" உண்டு! சாம்பார் (சின்ன வெங்காயம் போட்டு) உண்டு!

பெரிய வெங்காயம் அப்போதுதான் கிராமத்துக்கு வந்தது! அதிசயமா இவ்வளவு பெரிய வெங்காயம் என்று அதிசயித்திருக்கிறேன்!

வியாழன், கல்கி வரும் நாள்! ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்!

இன்னொரு மறக்க முடியாத நினைவு!

சந்தைக்கு சந்தை தவறாமல், கண் தெரியாதப் பிச்சைக்காரர் ஒருவர் தெருவில் பாட்டுப் பாடிப் பிச்சைக் கேட்பார்!

காச்சனீ முத்துக் கருப்பங்களா!
கரும வாதனையில் உழன்றேன்!


(காசினியில் முத்துக்கருப்பஙளே! நான் கரும வாதனையில் உழல்கிறேன்!)

அடுத்து தன் வயிற்றில் அடித்துக் கொண்டு,

"ஒத்துருனாச்சும், ஆணைப் பெண்ணைப் பெத்த புண்ணியரே! ஒரு காச்சுனாச்சும் போடுங்கய்யா! அம்மா!"

வாசலில் தெருவில் காணும் காட்சி!

சந்தையிலிருந்து வரும் மக்கள் அவருக்குத் தின்பண்டமாக அவித்தக் கிழங்கு போன்றவை தருவார்கள்! காசுகளும் போடுவார்கள்! எங்கள் வீட்டிலும் அவருக்குக் காசுகள் தருவோம்!

சந்தைன்னு நினைத்தாலே, அந்த பிச்சைக்காரர் நினைவு வரும்!

பிறகு என்ன ஆனர் தெரியவில்லை!

Monday, 8 March 2010

பெண் !




"அம்மா! ராத்திரி நான் தூங்கும்போதும் வீட்டுவேலைன்னு எங்கிட்ட படுத்துக்க மாட்டே!

காலையிலும் வேலைன்னு நான் முழிச்சுக்கும்போது, பக்கத்துலே இருக்க மாட்டே!"

இது ஒரு பெண் குழந்தையின் புலம்பல்!

"ஷூவை இப்படி போட்டுண்டு, நாடாவை இப்படி கட்டு!" என்று ஜாடையில் சொல்லித் தரும் அம்மா!

நான்கு வயதுக் குழந்தைக்கு அம்மா கிடைக்க மாட்டாள்!

அப்போதெல்லாம் பெரியவர்களுக்காக (அம்மா) மடியாய், ஆசாரத்துடன் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்!

வேலைக்குப் போகும் அம்மாதான் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை என்று இல்லை!

வீட்டில் இருக்கும் அம்மாவும் குழந்தைகளுக்குக் கிடைப்பது கஷ்டம் என்று அப்போது இருந்த காலம் உண்டு!



பெண் என்பவள் தாயாய், மனைவியாய், சகோதரியாய், மகளாய் வாழ்ந்து சகாப்தம் படைத்திடுவாள்!

பெண்மை, அன்பில் ஒளிர்கின்றது!

பெண்மை பொறுமையில் மிளிர்கின்றது!

இன்றைய பெண்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையைக் கொள்ள வேண்டும்!

அதனால் உயர்வே அன்றி தாழ்வு வாராது!



இன்றைய ஆண்கள் பெண்களுக்கு விட்டுக் கொடுக்கின்றனர்!

இரு கண்களாக ஆணும், பெண்ணும் அனுசரணையாய் வாழ்வதுதான் நிறைந்த வாழ்வாகும்!

பெண்ணின் பெருமையே பெருமை!

தனித்துவம் வாய்ந்து உயர்வினில் வளர்வது!!

பெண், குடும்பத்தை அரவணைத்து அன்பு செலுத்துவாள்!

குடும்பத்தில் அவளுக்கென இருக்கும் இடத்தை, யாராலும் நிரப்பிவிட முடியாது!

அவளுக்கு நிகர் அவளே!

இன்றைய நாகரீக உலகினில், பெண், ஆணுக்கு நிகராய் வானில் பறந்து, மண்ணில் அலைந்து வீடு காத்து, நாடும் காக்கின்றாள்!

"பெண்மை வெல்க!" என வாழ்த்துவோம்!

Tuesday, 2 March 2010

கண்ணன் குழல் அமுதம்-- 2.

கண்ணன் வேய்ங்குழல் ஊதற்சிறப்பு!
=================================

கண்ணனின் குழலிசை அமுதப் பிரவாகமாய் வழிகிறது!

உயிரினங்கள் எல்லாம் அந்த இசையில் கட்டுண்டு எப்படியெல்லாம் காட்சி அளிக்கின்றன!

பறவைகள் தன் கூடுதுறந்து தரையின்மீது கிடக்கின்றன ! கறவைகள் கால்பரப்பி, தலை தாழ்ந்து செவியாட்டாமல் அப்படியே நிற்கின்றன!

மருண்டமான்கள் மேய்தலை மறந்து,வாயிலுள்ள புல் கடைவாய் வழியாய் வெளியே நழுவும்படியாகத் தன்னை மறந்து, இருக்கும் நிலை, வரைந்த ஓவியங்களாய் அசையாதச் சித்திரங்களாய்க் காண்கின்றன!

என்னென்பது குழல்வழி அமுதகீதம்! யாதவக்கண்ணனின் கருணைநிறைந்த லீலையன்றோ?

குழலிசையில் உயிரினங்கள் எல்லாம் தன்நிலை மறந்து இருக்கும்போது மனிதராகிய நாம் எம்மாத்திரம்?

வண்டினம் சூழ்ந்த தாமரை போல சுருண்டுருண்ட குழல் சூழ்ந்த முகமலரோன், முகில்வண்ணன் சிறு வியர்வைத் துளிர்க்கும்படியான புருவங்கள் கூட, சிவந்த கண்கள் செருக
குழலின் துளைகளைச் சிறுவிரல்களால் தடவி குழலூதும் போது, குவியும் செவ்விதழின் அழகு போன்ற அற்புதக் காட்சிகளும், உயிரினங்களின் தன்னை மறந்த நிலைகளும் எழுதியச் சித்திரமாய்ப் படைத்து நமக்கு அளித்த பெரியாழ்வார் அனுபவித்ததை நமக்குப் பாடல்களாக
அளித்து அருளிச்செய்துள்ளார்!

நாம் இப்பாடல்களைப் படித்து உணர்ந்து, அனுபவித்து உய்வோமாக!

பாடல்கள் இதோ:

சிறுவிரல் கள் தடவிப் பறிமாறச்
..செங்கண் கோடச் செய்ய வாய்க்கொப் பளிக்க
குறுவெயர்ப் புருவம் கூட லிப்பக்
..கோவிந்தன் குழல் கொடூதி யபோது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
..வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால்ப ரப்பிட்டுக்
..கவிழ்ந்திறங்கிச் செவியாட்டகில் லாவே!

திரண்டெ ழுதழை மழைமுகில் வண்னன்
..செங்க மலர்சூழ் வண்டினம் போலே
சுருண்டி ருண்ட குழல்தாழ்ந்த முகத்தான்
..ஊது கின்ற குழலோசை வழியே
மருண்டு மான்கணங்கள் மேய்கை மறந்து
..மேய்ந்த புல்லும் கடைவாய் வழிசோர
இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா
..எழுதுசித் திரங்கள் போல நின்றனவே !

Friday, 26 February 2010

கண்ணன் குழல் அமுதம்!

இப்பாடலை ஒருதரம் படித்தேன்.

அந்த கோகுலத்திற்கேச் சென்று விட்டேன்!

நான் அனுபவித்த இன்பத்தை நீங்களும் அனுபவியுங்களேன்.

பெரியாழ்வார் மிக அற்புதமாக, கண்ணன் குழல் ஊதும் அழகை, கீத இசையை
மனம் கிறங்கிட அனுபவித்துக் கூறுகிறார்.

கண்ணனின் கண்களைப் பார்க்கிறார்! வியந்து பேசுகிறார்! "செம்பெருந்தடங்கண்ணன்!"

அவர் பார்வை தோளழகில் விழுகிறது!

கம்பன் சொன்னானே! "தோள் கண்டார் தோளேகண்டார்!" என்பது போல பெரியாழ்வர் "திரள் தோளன்" என்று கண்ணனின் புஜ பல பராக்கிரமத்தைப் பேசுகிறார்!

யசோதையின் மழலையாய், வளர்ந்து, பல அற்புதங்களை கோகுலத்தில் நிகழ்த்தி யாவர்
மனத்தையும் கொள்ளைக் கொண்ட யாதவச் சிறுவன்.

யசோதையும், பரந்தாமனைக் கொஞ்சி, குலவி, மிரட்டி, கயிற்றில் கட்டி வாய் பொத்திக் கெஞ்ச வைத்து, இன்னும் இன்னும் நிறைய அவனைக் கொண்டாடியிருக்கிறாள் !

பாவம் ! தேவகி!

கண்ணனின் விளையாடல்களைப் பக்கத்தில் இருந்து அனுபவித்தவளில்லை!

தேவகியின் மணிவயிற்றில் உதித்த பிள்ளையல்லவா?

பெரியாழ்வார் சொல்கிறார் "தேவகி சிறுவன் ...."

இன்னும் சொல்கிறார் 'தேவர்கள் சிங்கம்"

ஆம். நரசிம்மமாய் அவதரித்து, இரண்யனைக் கொன்று, பிரஹ்லாதனுக்கு அருளிய
"நரசிங்கமல்லவா அவன்!

இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டே போவதில் மனம் திருப்தி அடையவில்லையாம்!

"நம் பரமன்" அப்பாடா!

இப்பொழுது பெரியாழ்வாருக்கு உவகைப் பெருகுகிறது!

ஆமாம்...கண்ணனின் குழலூதும் அழகைப் பருக வந்துவிட்டு, அவனழகில் உருகி நின்றால் எப்படி?

வாருங்கள்! பெரியாழ்வார் கூறுகிறார்! கேட்போம்:

கண்ணனின் குழலிசைக் கேட்டவரெல்லாம் தவித்தனர்!

அமுத மய கீதமென்னும் கீத வலையில் சிக்குண்டு, வானவெளியில் இயங்கும்
கந்தர்வர்கள், மயங்கி நிலைகுலைந்தனராம்!

கந்தருவர் என்ன? நாமும் அந்த குழலிசை மயக்கத்தில் இருக்கிறோம்!

பெரியாழ்வார் திருமொழி.
====================

கண்ணன் வேய்ங்குழலூதற் சிறப்பு.

செம்பெருந் தடங்கண் ணன் திரள் தோளன்
..தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம்பர மன் இந் நாள்குழ லூதக்
...கேட்ட வர்கள் இடருற் ரன கேளீர்
அம்பரந் திரியும் காந்தப் பரெல்லாம்
...அமுத கீத வலையால் சுருக்குண்டு
நம்பர மன்றென்று நாணி மயங்கி
...நைந்து சோர்ந்து கைமறித்து நின்றனரே.

Tuesday, 2 February 2010

"டஸன் டெக்கான்!"

உஷாவுக்கு அப்போது ஆறுவயதுன்னு நினைக்கிறேன்!
சின்னவன் திலீபுக்கு மூன்றுவயது!
ஒருதடவை என் நாத்தனார் பிள்ளை எங்கவீட்டுக்கு
வந்திருந்தான்.கையில் இருந்த சாக்லெட் டப்பாவை
திலீபுவிடம் கொடுத்தான்.
குழந்தை என்னிடம் கொடுத்தான்!நான் அதை அறையில்,
பலகை மேலே வைத்து விட்டேன்!
ஊர்விஷயங்களெல்லாம் பேசினோம்,அந்தப்
பிள்ளை குளித்து விட்டு, உணவருந்தி விட்டு,
கூடத்தில் பாயில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டு
அப்படியே உறங்கிப் போனான்!
அன்று இரவே ஊருக்குக் கிளம்பி விட்டான்!
அந்த சாக்லெட் டப்பா நினைவு வந்தது!
பாவம்! குழந்தைகள்! ஆசையாகச் சாக்லெட் தின்ன
காத்திண்டிருக்குமே!...ன்னு தோன்றியது!
உள்ளே போனால்...!!
அங்கே திலீப்'ஓ'வென்று அழறான்!
அதற்குள் உஷாவே வேகமாக என்னிடம் வந்து,
"அம்மா! சாக்லெட் திங்கணும் .னு ரொம்ப
ஆசையா இருந்துதும்மா!
நீயும் தரமாட்டேங்கறே!
அதான் நான் ஒரு சாக்லெட் திங்கப்
போகும்போது
இவன் வந்துட்டான்!இவனுக்கும் தந்தேன்மா!"

இப்பொ திலீப்,
"அம்மா!இவோ சாக்லெட்டை கல்லாலே ஒடச்சு ஒடச்சு
எனக்குக் கொஞ்சூன்டு! அவளுக்கு நெறயா எடுத்துக்கறா அம்மா!
ஓவென்று ஒரே அழுகை!
(பெரியவன் குமார் சாது!சமத்து!இந்த வம்புக்கே வரவில்லை!)

'அழாதெடாக் கண்ணு!!உஷா!டப்பாவைக் கொண்டா!
உஷா சாக்லெட் டப்பாவை என்னிடம் கொடுக்கின்றாள்1
திறந்து பார்த்தேன்!
கணிசமாக் கொறஞ்சு இருந்தது!
எவ்வளவு சாக்லெட் தின்றீர்கள் ரெண்டு பேரும்?
உஷா சொல்றா:அங்கே பக்கத்துல இருக்கிற ஸ்டூல இழுத்துண்டு வந்து,மேலே
அங்கே சுவரோரமா மரப் பெட்டி ஒன்று இருக்கும்!
"அம்மா! டெக்கான்(சாக்லெட் பேரு!)சாக்லெட்டுலே
சுத்தியிருந்த பேபர்லாம் இங்கதான் போட்டேன்மா!"இது உஷா.
மரப்பொட்டி சந்துல பன்னிரெண்டு சாக்லெட் பேபர் கிடந்தன!
பசங்களுக்குத் தெரிஞ்சி
அதுக்கப்புறம் உஷாவை "டஸன் டெக்கான்!"என்று கிண்டலடிக்க,
அவள் அழ ஒரே அமர்க்களம்தான்!

ஆனால்,பாவம் உஷா! டெக்கான்சாக்லெட்டை எடுக்க,
ஒவ்வொரு தடவையும் ஸ்டூல் மேல ஏறி,
டப்பாலேர்ந்து ஒருசாக்லெட் எடுத்து
கீழே இறங்கி(கூடவே திலீப் தயாரா இருப்பான்!)
முழுசு முழுசா ஆளுக்கொரு சாக்லெட்டுன்னு
திங்கத் தெரியலையே!
இதுல சத்தமில்லாம சாக்லெட்ட
கல்லுல ஒடைக்கிற கஷ்டம் வேற!
ஒடச்சு ஒடச்சே கஷ்டப் பட்டே 12 டெக்கான் சாக்லெட்டும்
தின்ற ரெண்டு குழந்தைகளின் பேதமையும்
மனசுக்கு வருத்தமா இருந்தது!
பகிர்ந்து தின்னும் குணம் பாராட்ட வேண்டும்!
உஷாவைப் ஒரு விஷயத்துக்குப் பாராட்டனும்!
அவளுக்கு எது திங்கக் கிடைத்தாலும்
எங்க எல்லாருக்கும் கொடுத்துத் தானும் தின்பாள்!
நல்லகுணம்!

Friday, 15 January 2010

பொங்கலோ பொங்கல்!

மண்ணுக்கும், விண்ணிருந்து புவி காக்கும் சூரியனுக்கும், உழைக்கும் மாடுகளுக்கும், உயர்வான உழவுக்கும், பயிர் வளர்த்து உயிர் அளிக்கும் உழவர் பெருமக்களுக்கும் நன்றி சொல்லிப் பணியும் விழாதான் இப்பொங்கல் திருவிழா!

பொங்கல் நாளில், புது மண் அடுப்பில் ஏற்றிய புத்தம்புதுக் கோலப் பானையில், கட்டியக் கொத்து மஞ்சளுடன், புத்தரிசி, பாகு வெல்லம், ஏலம் மணக்க, புத்துருக்கு நெய்யூற்றி, கட்டுக் கரும்பும், பக்கத்தில் சாத்தி வைத்து, மனமெல்லாம் மணக்க,வாழ்வெல்லாம் மணக்க ஏழையர் வாழ்வினிக்க இறைவனருள் வேண்டியே "பொங்குக பொங்கல்! பொங்கலோ பொங்கல்" என்று கூடியேக் கூவிடுவோம்!

விவசாயத்தில் பெண்களின் நிலை கூறி, அவர்களின் உயர்வு கூறும் 'கோடுகளும், கோலங்களும்' என்னும் நாவலை அளித்த, திருமதி. ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றி!

பெண்ணுயர்வுக்குத் தலை வணங்குவோம்!

பள்ளி நாட்கள், சிறு வயதினில், கும்மிப் பாடல் ஒன்று...

அப்போது அதன்பொருள் விளங்காமலே பாடிக் கும்மிக் கொட்டியிருக்கேன்!

அந்தப் பாடல் அருமையான படல்! ஒரு சிறிதே நினைவில் இருக்கிறது!

'அறிகுவமே! அறிகுவமே!
அமுதின் சரிதமிதை அறிகுவமே!

நிலம் உழுது நன்றாய் நீர்ப் பாய்ச்சி
பறம்படித்து நன்றாய் பண்படுத்தி
பலவித நெல்மணிகளைத் தெளிக்க'


............. (மறந்து விட்டது)


பொங்கல் நாளில் மனிதம் மலிந்து, தீவிரம் மறைந்துவிடக் கோருவோம்!

அன்பே தெய்வம்! அன்பே செய்வோம்!

Monday, 14 December 2009

எப்படியெல்லாம் எழுதினோம்...!

சிறிய வயதில், எப்படி எழுதக் கற்றோம்?

முதலில் கையில் கிடைத்தப் பென்ஸில், சாக்பீஸ் இவற்றால் சுவரெல்லாம் கிறுக்கி, கையில் கிடைத்தப் பேப்பரில் கிறுக்கி மகிழ்ந்தோம்!

பள்ளியில் வாத்தியார் பிள்ளைகள் கைப் பிடித்து, விரலால் மணலில்,'' நா ''வன்னா எல்லாம் எழுதக் கற்றுத் தந்தார்!

பின்பு, சிலேட்டில் (பலகையில்) எழுதினோம். அப்போ ஒண்ணாப்பு, ரெண்டாப்பு வந்திருப்போம்!

பென்ஸிலில் (பலப்பம்) பலவகைகள் இருக்கும்! கல் பென்சில், மாப்பென்சில், கலர் கலரான மாப்பென்சில் ...இப்படி...

சாதாப் பென்சில் சிலசமயம் சிலேட்டில் கீறல் செய்யும். ஆனால், கல் பென்சில் அப்படியே 'அச்சுக் கொட்டும்!

மேல்வகுப்பு வந்தால், காகிதப் பென்சிலில் நோட்டுப்புத்தகத்தில் எழுத வேண்டும். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்!

அப்புறம் பேனாவில், இன்க்(மை) தொட்டு எழுதும்பேனா! பிறகுதான் 'ஊற்றுப் பேனா'வில் எழுதும்பழக்கம் வந்தது!

இன்னும் எளிதாக 'ஜெல்' வகையறாப் பேனாக்களும் பவனி வந்து எழுதும் ஆசையைத் தூண்டுகின்றன!

இன்று...எங்கேயோ போய்விட்டோம்!!!

கணினி பொத்தானைத் தட்டிவிட்டால் 'அச்சு அச்சாக' எழுத்துகள் பூவாய்க் கொட்டுகின்றனவே! மை இல்லை! பேனா இல்லை! தாள் இல்லை!

விந்தையிதை என்னென்போம்?

கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் சொல்வோம்!

Wednesday, 9 December 2009

விவசாயம், தானியங்கள்(தவசம்), சம்பந்தமான வினைச் சொற்கள்:

தமிழில், வினைச் சொற்கள்... விவசாயம், தானியங்கள்(தவசம்) சம்பந்தமான வினைச் சொற்கள்:

நிலத்தை உழுதல், நீர் பாய்ச்சுதல், விதை விதைத்தல், உரம் இடுதல், களை எடுத்தல், நாற்று நடுதல், அறுவடை செய்தல்,

பரம்படித்தல், பண்படுத்தல், தூற்றுதல், தானியங்களை அரவைமெஷினில் அரைத்தல், அல்லது உரலில் குத்தி புடைத்தல், முறத்தைக் கொண்டு புடைத்தல், குறுணையைக் கொழித்தல், கல்லைத் தரித்தல்,

அரிசியாகி சமையலறைக்கு வந்து அரிச்சிடப்பட்டு, அங்கும் கொஞ்சம் கற்கள் இழி ஏத்தி, கற்கள் நீக்கப் பட்டு, உலையிலிடப்பட்டுச் சோறு ஆகிறது!

நம் உயிர்க்கு உரமளிக்கிறது!

துவரம்பருப்பு, செம்மண்ணினால் கட்டி, வெயிலில் காயவைத்து, எந்திரத்தில் உடைத்தல், கடுகினை நேம்புதல்,(கல்,தூசிநீக்குதல்) இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

Sunday, 6 December 2009

அதிர்ச்சி வைத்தியம்!

தினம் விளையாட வரும் பத்மாவை இப்போதெல்லாம் காணோமே?

பத்மாவும்,சுந்தரியும் விளையாட்டுத் தோழிகள்!

பத்மாவுக்கு எட்டு வயசு இருக்கும்! சுந்தரிக்கு ஆறு வயசு இருக்கும்!

வீட்டில் அம்மாவைக் கேட்டால் 'அவளுக்கு அம்மை போட்டிருக்கு! அவ வீட்டு வாசலில்
வேப்பிலைச் செருகியிருக்கு பாரு!' அப்படீங்கறா!

ஒரு நாள்,சுந்தரி, மெதுவா பத்மா வீட்டுக்குப் போனாள்!

உள்ளே அந்த அறையின் ஜன்னல் வழியாப் பாத்தக் காட்சி!

ஒரே ஓட்டம்!

சுந்தரி, வீடு வந்துதான் மூச்சு விட்டாள்!

வாழை இலையில்...கருப்பா, துரும்பா இளைச்சு ஒரு உருவம் கிடந்தது! பெரியம்மை(வைசூரி) (1940 களின் இறுதிகளில் என்று நினைவு!)

பத்மாவின் அம்மா, மாரியம்மன் கோவிலுக்குச் சென்று, தினமும் குளித்து விட்டு, மாரியம்மன் சந்நிதியின் முன்னே வேண்டி கொண்டு, எதிரிலிருக்கும் கம்பத்தின் மீது நீர் ஊற்றுவார்!

இன்னும் என்னென்ன வேண்டுதல் உண்டோ எல்லாம் பக்தி,சிரத்தையோடு செய்து வந்தார்!

மாரியம்மா கண்ணு தொறந்துட்டா! பத்மா சிறிது சிறிதா குணமடைஞ்சா!

நல்ல காலம்! கண்கள் பாதிக்கலை!

கால ஓட்டத்தில், கொஞ்சம் கொஞ்சமா குணமாகி வந்தா!

உடம்பெல்லாம் இன்னும் தழும்பு நிறம் மாறவில்லை!

பத்மா வெளியிலே வளைய வர ஆரம்பிச்சுட்டா!

பத்மா வரான்னு சொன்னாப் போதும் சுந்தரி சமையல் அறைக் கதவுக்குப் பின்னால்,கண்ணை இருக்க மூடிக் கொண்டு கத்துவாள்!

பத்மாவும் ஏமாற்றத்தோடு போய் விடுவாள்!

சுந்தரியிடம் 'பத்மா வரா!' என்று சொன்னாலே போதும்! பயத்தோடு கண்ணைப் பொத்திகொண்டுக் கத்துவா!

ஒருநாள்! ஞாயிற்றுக் கிழமை! விடுமுறை தினம்!

சுந்தரியும், அவள் தோழிகளுடன், தன் வீட்டில் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தனர்!

அப்போது சுந்தரி வேகமா ஓடி வந்துகொண்டிருந்தா! எதிரில் யார்மீதோ மோதிக் கொண்டு,
இரண்டு பேரும் கீழே விழுந்தார்கள்!

வலியுடன்,தலையைத் தடவி கொண்டே...நிமிர்ந்துப்...பார்த்தாள்....

பார்த்தவுடன் சிரிப்பு...சிரிப்பு!....

பத்மாவைப் பக்கத்திலே பார்த்ததும் பயம் விலகிவிட்டது!

பத்மாவும் இப்போ நிறைய குணமாகிவிட்டாள்! தழும்புகள் இருக்கு!

எதிர்பாராதத் திடீர் சந்திப்பு சுந்தரியின் பயத்தைப் போக்கிவிட்டது!

நல்ல அதிர்ச்சி வைத்தியம்!

Saturday, 5 December 2009

கண்ணன் என் தம்பி! -- 3

சேலம் ராமகிருஷ்ண மடத்தையும், மடத்துச் சான்றோர்களையும் காண மிகவும் ஆவலாக இருந்தான்!

கண்ணனின் எண்ணம் நிறைவேறியதா?

ராஜு! எங்கள் (சித்தப்பா மகன்) தம்பி வந்தான். சேலம் செல்ல ஏற்பாடு செய்தான்!

ஒரு வேனில், கண்ணனை சிலர் (கை உருளையோடு) ஏற்றினார்கள். ராஜு கண்ணனுடன் சென்று அவனுக்கு உதவியாக இருந்தான்!

கண்ணன் மனம் மகிழ அங்குள்ளப் பெரியோரைச் சந்தித்தது, அங்கு நடந்த பூஜையில் கலந்துகொண்டது(எல்லாம் உருளையுடன் நகர்ந்து...நகர்ந்தே..)

இன்னும் சொல்லியிருப்பான்! எனக்கு நினைவில்லை!

இப்படியே ஒன்பது வருடங்கள் உருண்டது! உடல் நலமின்றி, ஆகாரம் செல்லவில்லை!

டாக்டரும் வந்தார்! மருந்துகள் கொடுத்தார்! ஒன்றும் பலனில்லை!

மூச்சுத் திணறல் வந்தது!

அக்கம் பக்கம் சொந்தக்காரர்கள் வந்து பார்த்துச் சென்றனர்!

இதற்குள் ராஜு, சேலம் மடத்திலிருந்து பிரசாதம் வாங்கி வந்தான்!

மூன்றாவது அண்ணாவின் மடியிலேயே... இரவு சென்றது...

மூச்சுத் திணறல்....

பக்கத்து வீட்டுப் பெரியப்பா சொல்கிறார்: 'நாங்கள்ளாம் அஞ்ஞானிகள்! நீ ஞானஸ்தன்! ஒனக்கு சொல்றதுக்கு என்னப்பா இருக்கு! நாராயணா ங்கற நாமத்தை கெட்டியாப் பிடிச்சுக்கோ!'

கண்ணன் சந்நியாஸம் வாங்கிண்டான்!

தபால் மூலமாக...(விவரம் சொல்லலை) குரு பாயின் புனித காவி வஸ்திரத் துளி(பிட்)

அதை மூச்சுக்குக்கும், இதயத்துக்கும் வைத்துக் கொண்டான்.

அதுவும் முடியலை! மூச்சு வாங்கறது!

விரல்கள் ஜப மாலையை தேடுவதுபோல் தோன்றியது!

ராமகிருஷ்ணர் படத்தை அவன் கண் முன்னாலே காட்டிண்டு, 'ஓம் ராமகிருஷ்ணா! ஓம் ராமகிருஷ்ணா!' ந்னு நான் பலமா சொல்ரேன்!

பக்கத்து வீட்டு சந்துரு அண்ணா அப்படியே கரம் கூப்பிண்டிருக்கின்றார்!

கண்ணன் விடுதலைப் பெற்று விட்டான்!

ராமகிருஷ்ணர் பதம் சேர்ந்தான்!

அப்போது அவனுக்குவயது இருபத்தியேழு!

நிறைவுற்றது.



--------------------------------------------------

கண்ணன்(சிவாம்ருதம்) தமிழில் கவிதைகளும், கீர்த்தனைகளும் இயற்றியுள்ளான்.

அவற்றிலிருந்து...

கீர்த்தனை--- 1
====================

ராகம் திலங். தாளம் ஆதி.

பல்லவி
=======

நம்பினேன் அருள்செய் நாயகனே!உன்பால்
நாளும் பக்திஓங்க நீளும் பிறவி நீங்க(நம்பி)

அனுபல்லவி
==========

அம்பிகை ஸ்ரிபவ தாரிணி பாலா!
அன்னை சாரதையின் ஆருயிர் மணவாளா!(நம்பி)

சரணம்
======

வஞ்சப் புலனைந்தைக் கொஞ்சமும் நம்பிடேன்!
..வந்த உலகை எந்தன் சொந்தமாய் நம்பிடேன்!
தஞ்சமென் ருன்மலர்த் தாளையே நம்பினேன்!
..தாமதம் செய்யாதே! ராமக்ருஷ்ண தேவாஉனை(நம்பி)
--------------

கீர்த்தனை--- 2
====================

ராகம் சரஸ்வதி தாளம் ரூபகம்.

பல்லவி
========

பகவானைப் பணி மனமே!
பரமஹம்ஸ ராமகிருஷ்ண (பக)

அனுபல்லவி
===========

சுகவாழ் வுற்றிடவே சத்
..சிதானந்த ஸ்வரூபனை (பக)

சரணம்
========

தூய அன்னை நேயனைஅன்பர்த்
..துயர் நீக்கும்ச காயனை
மாயனை குரு மஹராஜனை
..மஹாதேவ கதாதரனை (பக)
-------------


பகவான் ராமகிருஷ்ணருக்கு, மலர்களால் அருச்சனை!
---------------------------------------------------

வெண்டா மரைசெந் தாமரையும்
...வீசும் மணமுடை மல்லிகையும்
வண்டார் தேனின் ரோஜாவும்
...வாய்த்த தும்பை நாகவல்லி
கண்டார் நயக்கத் துளசியினால்
...கருதும் வில்வத் தளங்களினால்
உண்டா கியபே ரன்போடு
உனையருச் சித்தேன் ராமகிருஷ்ணா!

தீப தூபம் காட்டல்.
-----------------------

ஒற்றைத் தீபம் முத்தீபம்
...ஒளிர்ந்தே கண்ணைக் கவரும் வண்ணம்
கற்றைத் தீபம் பல உன்முன்
...காட்டி அகில்சந் தனமுதலாம்
உற்ற வாசனைத் திரவியங்கள்
...உன்னைச் சூழ உண்டாக்கி
மற்றை எவையும் மறந்துன்னை
...மனத்தில் நினைத்தேன் ராமகிருஷ்ணா!

----------------