Monday 30 November, 2009

வீடு ! - 3

புழக்கடை ரேழி !

புழக்கடை ரேழியின் இரண்டுச் சின்னப் பரண்கள்.

ஒன்றில், விறகுகள் இருக்கும். மற்றொன்றில்,எருமுட்டை, செம்மண் உருண்டைகள் இருக்கும்.

எருமாமுட்டை (சாணியைதட்டி வெய்யிலில் காயவச்சி, எடுத்து வைத்தவை) வெந்நீரடுப்பு, சமையல் அடுப்பு எரிய ரொம்பத் தேவை.

அப்பா, கொடுவாளால் விறகைச் செதுக்கி, செதுக்கி, சிராய்த் தூளாக்குவார். சிராய்த் தூளும் ஜோராய் அடுப்பெரிக்க உதவும்.

ஆனால், மழைக் காலத்துலே எரியாத விறகும், காயாத எருமுட்டையும் அமையும்!அம்மாக்குத் திண்டாட்டம்தான்!

ஊதுகுழலால்(கண்ணன் கைக் குழல் அல்ல!)அடுப்பை ஊதி ஊதி எரிய வைக்கறத்துக்குள்ள எம்பாடு உன்பாடு ந்னு ஆயிடும்!

செம்மண் உருண்டைகள்(விசேஷங்களுக்குச் செம்மண் இடுவோமே! அதுக்கு) இருக்கும்.

புழக்கடை ரேழியின் மூலையில் ஐந்தாறு உலக்கைகள் இருக்கும்.

குழிவாய்ப் பூண்போட்டது, தட்டையாய்ப் பூண் போட்டது, என்று இருக்கும்.

வீட்டிலேயே 'அவல்' இடிப்பார்கள்.

அம்மா, புழுக்கி ஆர்வாடப் போட்ட நெல்லை பெரிய இரும்பு வாணலியில் போட்டு, ஒரு புதுத் தென்னங்குச்சிகளால் செய்த மாறால் (விளக்குமாறு) வேகமாக வறுத்து, உரலில் கொட்டினால், எதிரும், புதிருமா ரெண்டு வேலையாட்கள் 'சொய்' 'சொய்" ன்னு இடிப்பார்கள் !

தட்டை தட்டையா அவலு உமியோட இருக்கும்! பிறகு புடைத்து அவல் தனியாக எடுத்து வைப்பார்கள்.

மாவு, மிளகாய்த்தூள் எல்லாம் உரலில் இடித்துத்தான் செய்யப் படும். அதுக்குன்னே கடப்பாரையும் உண்டு!

ஊருக்குள்ளே, நெல் அரவை மில்லு இருக்கு!எள் எண்ணெய், கடலை எண்ணை ஆடுகின்ற செக்கு உண்டு! எள்ளுப் புண்ணாக்குத்(பிண்ணாக்கு?) தின்ற அனுபவம் இருக்கு!

இளையராஜாப் பாட்டு நினைவு வருது! 'போடாப் போடாப் புண்ணாக்கு போடாதேத் தப்புக் கணக்கு!'

இன்னிக்கு தயாராப் பாக்கெட்டுல மாவா, பொடியா எல்லாம் கிடைக்குது!

வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்தல், ஓடு மாத்தி வேய்தல் போன்ற கவனிப்புகளும் வேண்டும். இல்லாட்டா மழைவந்தா வீடெல்லாம் ஒழுகும்! திண்டாட்டம் தான்!

தூங்காமே துன்பப் பட்டதும் நிறைய அனுபவம் உண்டு!

நான் எழுதற கால கட்டம், என்னுடைய பள்ளி வயது!

மூட்டைப் பூச்சிக் கடி, கொசுக் கடி, சிரங்கு.... இவற்றில் சிக்காத பிள்ளைங்க
கிடையாது!

அப்போ விறகுப் பஞ்சம், அரிசிப் பஞ்சம் போன்ற கஷ்டமான நாட்களையும் கடந்துதான்
வாழ வேண்டியிருந்தது!

இன்னும் வரும்....

Sunday 29 November, 2009

வீடு ! - 2

வீடு !

நான் வளர்ந்து வாழ்ந்த வீடு!

வாழ்க்கைப்பட்டுப் போன..... வாழ்க்கைப் பட்டுப் போன பின்னும் பிஞ்சும், குஞ்சுமா
மூணுப் பிள்ளைகளோட கணவனை இழந்து வந்த போது தஞ்சம் தந்ததும் இந்த வீடுதான்!

என் மக்கள் வளர்ந்ததும் இந்த வீட்டில் தான்!

பெற்றோர், சகோதர, சகோதரிகளும் அனுசரணையாக இருந்தார்கள்.

தாழ்வாரத்தின் ஓரத்தில், எந்திரக்கல் மாவு அரைத்தல், ரவை உடைத்தல் போன்றவற்றிற்கு உபயோகிப்போம்.

பருப்பு உடைக்க ஒருவிதமான இயந்திரக் கல்லுண்டு. கல்லின் மேல்பகுதி லேசாக இருக்கும்.

முற்றத்தில், இரவில் நிலா பார்க்கலாம்.

நிலாச்சோறு, அம்மா கையில் போட, நாங்க சாப்பிட்டு இருக்கோம்!

பகல் வெய்யிலில், விறகு போன்றவற்றைக் காயப் போடுவோம்!

இதென்ன புதுமையா? ன்னு கேக்கலாம்!

இன்னிக்கு திறந்த வெளிக் காற்று வீட்டினில் கிடைப்பது அரிது!

பொட்டியாட்டம் வீட்டுக்குள்ளே, மின்விசிறி தான் காத்து கொடுக்கும்!

நாங்க அண்ணன், தம்பி, தங்கைகள் எட்டு பேரு.

சித்தப்பா, பெரியப்பா மக்கள் எல்லாம் விசேஷங்களில் கூடுவோம்!

வீடே திமிலோகப் படும்!

எல்லாம் உண்டு! சண்டையா? பேச்சு வார்த்தையா எல்லாம் உண்டு! மகிழ்ச்சி ஆரவாரம் எல்லாம் உண்டு!

புழக்கடையில், ஈரக் கடலைக்காயை (மல்லாக்கொட்டை? நிலக்கடலை?)

மண்தரையில் கொட்டி பரவலாக்கி, அதன்மேலே நல்லாக் காஞ்ச தென்ன ஓலையைப் போட்டு
நெருப்புப் பத்த வெச்சு எரியும்!

அப்போ சுற்றிலும் அண்ணன் தம்பிகள், அமர்ந்து கொண்டு குச்சியால் கிளறி விடுவார்கள்.

இப்போ, கடலை நல்லா வறுபட்டிருக்கும்! சிறிது நேரத்தில், எல்லாக் கடலையையும் பொறுக்கி ஒண்ணு சேத்தணும்! அவரவர் அங்கேயே கடலையை சாப்பிடுவார்கள்!

காலேஜ் விஷயம், ஹிந்தி, இங்கிலீஷ் சினிமா, இதைப் பற்றி எல்லாம் பேசுவார்கள்!

இன்னும்வரும்...

Saturday 28 November, 2009

வீடு ! - 1

வீடு!

நம்மைத் தனக்குள் அரவணைத்துக் கொள்ளும்! நம்முடைய சுக, துக்கங்களில் பங்கு கொள்ளும்!

வீடு என்பது சொத்தா? ஜடப் பொருளா? வெறும் கல்லு, மண்ணு, சுண்ணாம்பு.... இவைகளைக் கொண்டுக் கட்டப்பட்ட கட்டடம் மட்டும் தானா?

இல்லை! இல்லை! நம்மோடு வாழ்ந்து வரும் உயிர்ப் படைப்பு!

எல்லா நிலைகளிலும் பாதுகாப்பு மட்டுமன்று! நம்முடன் துணை இருக்கும் உயர்படைப்பு!

மக்களின் இன்ப, துன்ப, கோப, தாப, சிரிப்பு, அழுகை, வறுமை, செல்வம், காதல், உறவு, பிரிவு போன்ற அத்தனையும் வீடு அறியும்!

வாசல் முத்தம்!

முன்றில்! பெருக்கி சாணம் தெளித்து, அழகழகாய் புள்ளிக் கோலங்களும், கோடு கோலங்களும் நிறைந்து விளங்கும்!

வாசல் திண்ணைகள்!

இரண்டு திண்ணைகள்! வீட்டுப் பாடம் படித்து எழுதுவோம்! கதைகள் பேசி மகிழ்வோம்!

மழை நாட்களில், கயற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்போம்!

சந்தடி சாக்கில் மழையில் இறங்கி ஆடுவோம்! கப்பல் விட்டு விளையாடுவோம்!

திண்ணைகளுக்கிடையே ஏழு படிகட்டுகள்!

வாசலின் சிறிய திண்ணையில் ஒரு சின்ன உள் உண்டு! அது 'காந்தி சிறுவர் சங்கம்' அலுவலகம்! தம்பி, தங்கைகள் அவர்கள் நண்பர்களுடன் சிறப்பாக நடத்திய சிறுவர் சங்கம்!

ரேழியும்,ரேழித் திண்ணையும் !

ரேழித் திண்ணையில் பிரசவங்களும் நடந்திருக்கின்றன!

மற்றபடி குழந்தைகள் சொப்பு வைத்து விளையாடுவார்கள்! இங்கும் படிக்கலாம்!

நெல்லுக் கொட்டிவைக்கும் 'தொம்பை' ரேழியிலும், வீட்டின் அறையிலும் உண்டு!

தாழ்வாரமும்,கூடமும்,தொட்டி முத்தமும்!

ஓடியாடி விளையாடத் தோதான இடம்.

எல்லா உள்ளேயும் (உள்=அறை) ஒளிந்து விளையாடலாம்!

குழந்தைகளின் விளையாட்டுத் தொல்லைகளுக்கு பொறுமை காக்கும் பெரியோரும் உண்டு, கோபத்துடன் கத்தி பொறுமை இழக்கும் பெரியவர்களும் உண்டு!

இந்த கொடுவாள்,அரிவாள் போன்றவை வைத்து இடம் தாழ்வாரத்தின் மேல் கூரையில் இருக்கும்

'எரவாணம்' (இறவாணம்?) மரத்தில் ஆனது.

கூடம் என்பது (பட்டாசாலை?) வீட்டின் சகலவித நல்லவைக்கும், குழந்தைகள் அப்தபூர்த்தி, கல்யாணம், சீமந்தம், வளைகாப்பு, மணமான தம்பதியரை மணையில் அமர்த்தி, பாட்டுப் பாடி, வாழ்த்தி, ஆரத்தி எடுத்துக் கும்மி அடித்து மகிழ்வதும் கூடத்தில்தான்!

சோக நிகழ்வான திவசம் செய்தல்(சிரார்த்தம் செய்தல்) கூடத்தில் தான்!

எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதும் இந்தக் கூடத்தில்தான்!

அப்பா மதிய உணவருந்திய பின்பு, பாய் விரித்து தலைக்கு ஒரு பலகையைச் சாய்வாக வைத்துக் கொண்டு சிறிது நேரம் இளைப்பாறுவார்!

வெய்யில் தாழ்வாரம் கொறட்டுக் கல்லைத் தாண்டினால் மதியம் மணி இரண்டிற்கு மேல் ஆகிறது என்று பொருள்!

இன்னும் வரும்.....