Monday 14 December, 2009

எப்படியெல்லாம் எழுதினோம்...!

சிறிய வயதில், எப்படி எழுதக் கற்றோம்?

முதலில் கையில் கிடைத்தப் பென்ஸில், சாக்பீஸ் இவற்றால் சுவரெல்லாம் கிறுக்கி, கையில் கிடைத்தப் பேப்பரில் கிறுக்கி மகிழ்ந்தோம்!

பள்ளியில் வாத்தியார் பிள்ளைகள் கைப் பிடித்து, விரலால் மணலில்,'' நா ''வன்னா எல்லாம் எழுதக் கற்றுத் தந்தார்!

பின்பு, சிலேட்டில் (பலகையில்) எழுதினோம். அப்போ ஒண்ணாப்பு, ரெண்டாப்பு வந்திருப்போம்!

பென்ஸிலில் (பலப்பம்) பலவகைகள் இருக்கும்! கல் பென்சில், மாப்பென்சில், கலர் கலரான மாப்பென்சில் ...இப்படி...

சாதாப் பென்சில் சிலசமயம் சிலேட்டில் கீறல் செய்யும். ஆனால், கல் பென்சில் அப்படியே 'அச்சுக் கொட்டும்!

மேல்வகுப்பு வந்தால், காகிதப் பென்சிலில் நோட்டுப்புத்தகத்தில் எழுத வேண்டும். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்!

அப்புறம் பேனாவில், இன்க்(மை) தொட்டு எழுதும்பேனா! பிறகுதான் 'ஊற்றுப் பேனா'வில் எழுதும்பழக்கம் வந்தது!

இன்னும் எளிதாக 'ஜெல்' வகையறாப் பேனாக்களும் பவனி வந்து எழுதும் ஆசையைத் தூண்டுகின்றன!

இன்று...எங்கேயோ போய்விட்டோம்!!!

கணினி பொத்தானைத் தட்டிவிட்டால் 'அச்சு அச்சாக' எழுத்துகள் பூவாய்க் கொட்டுகின்றனவே! மை இல்லை! பேனா இல்லை! தாள் இல்லை!

விந்தையிதை என்னென்போம்?

கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் சொல்வோம்!

Wednesday 9 December, 2009

விவசாயம், தானியங்கள்(தவசம்), சம்பந்தமான வினைச் சொற்கள்:

தமிழில், வினைச் சொற்கள்... விவசாயம், தானியங்கள்(தவசம்) சம்பந்தமான வினைச் சொற்கள்:

நிலத்தை உழுதல், நீர் பாய்ச்சுதல், விதை விதைத்தல், உரம் இடுதல், களை எடுத்தல், நாற்று நடுதல், அறுவடை செய்தல்,

பரம்படித்தல், பண்படுத்தல், தூற்றுதல், தானியங்களை அரவைமெஷினில் அரைத்தல், அல்லது உரலில் குத்தி புடைத்தல், முறத்தைக் கொண்டு புடைத்தல், குறுணையைக் கொழித்தல், கல்லைத் தரித்தல்,

அரிசியாகி சமையலறைக்கு வந்து அரிச்சிடப்பட்டு, அங்கும் கொஞ்சம் கற்கள் இழி ஏத்தி, கற்கள் நீக்கப் பட்டு, உலையிலிடப்பட்டுச் சோறு ஆகிறது!

நம் உயிர்க்கு உரமளிக்கிறது!

துவரம்பருப்பு, செம்மண்ணினால் கட்டி, வெயிலில் காயவைத்து, எந்திரத்தில் உடைத்தல், கடுகினை நேம்புதல்,(கல்,தூசிநீக்குதல்) இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

Sunday 6 December, 2009

அதிர்ச்சி வைத்தியம்!

தினம் விளையாட வரும் பத்மாவை இப்போதெல்லாம் காணோமே?

பத்மாவும்,சுந்தரியும் விளையாட்டுத் தோழிகள்!

பத்மாவுக்கு எட்டு வயசு இருக்கும்! சுந்தரிக்கு ஆறு வயசு இருக்கும்!

வீட்டில் அம்மாவைக் கேட்டால் 'அவளுக்கு அம்மை போட்டிருக்கு! அவ வீட்டு வாசலில்
வேப்பிலைச் செருகியிருக்கு பாரு!' அப்படீங்கறா!

ஒரு நாள்,சுந்தரி, மெதுவா பத்மா வீட்டுக்குப் போனாள்!

உள்ளே அந்த அறையின் ஜன்னல் வழியாப் பாத்தக் காட்சி!

ஒரே ஓட்டம்!

சுந்தரி, வீடு வந்துதான் மூச்சு விட்டாள்!

வாழை இலையில்...கருப்பா, துரும்பா இளைச்சு ஒரு உருவம் கிடந்தது! பெரியம்மை(வைசூரி) (1940 களின் இறுதிகளில் என்று நினைவு!)

பத்மாவின் அம்மா, மாரியம்மன் கோவிலுக்குச் சென்று, தினமும் குளித்து விட்டு, மாரியம்மன் சந்நிதியின் முன்னே வேண்டி கொண்டு, எதிரிலிருக்கும் கம்பத்தின் மீது நீர் ஊற்றுவார்!

இன்னும் என்னென்ன வேண்டுதல் உண்டோ எல்லாம் பக்தி,சிரத்தையோடு செய்து வந்தார்!

மாரியம்மா கண்ணு தொறந்துட்டா! பத்மா சிறிது சிறிதா குணமடைஞ்சா!

நல்ல காலம்! கண்கள் பாதிக்கலை!

கால ஓட்டத்தில், கொஞ்சம் கொஞ்சமா குணமாகி வந்தா!

உடம்பெல்லாம் இன்னும் தழும்பு நிறம் மாறவில்லை!

பத்மா வெளியிலே வளைய வர ஆரம்பிச்சுட்டா!

பத்மா வரான்னு சொன்னாப் போதும் சுந்தரி சமையல் அறைக் கதவுக்குப் பின்னால்,கண்ணை இருக்க மூடிக் கொண்டு கத்துவாள்!

பத்மாவும் ஏமாற்றத்தோடு போய் விடுவாள்!

சுந்தரியிடம் 'பத்மா வரா!' என்று சொன்னாலே போதும்! பயத்தோடு கண்ணைப் பொத்திகொண்டுக் கத்துவா!

ஒருநாள்! ஞாயிற்றுக் கிழமை! விடுமுறை தினம்!

சுந்தரியும், அவள் தோழிகளுடன், தன் வீட்டில் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தனர்!

அப்போது சுந்தரி வேகமா ஓடி வந்துகொண்டிருந்தா! எதிரில் யார்மீதோ மோதிக் கொண்டு,
இரண்டு பேரும் கீழே விழுந்தார்கள்!

வலியுடன்,தலையைத் தடவி கொண்டே...நிமிர்ந்துப்...பார்த்தாள்....

பார்த்தவுடன் சிரிப்பு...சிரிப்பு!....

பத்மாவைப் பக்கத்திலே பார்த்ததும் பயம் விலகிவிட்டது!

பத்மாவும் இப்போ நிறைய குணமாகிவிட்டாள்! தழும்புகள் இருக்கு!

எதிர்பாராதத் திடீர் சந்திப்பு சுந்தரியின் பயத்தைப் போக்கிவிட்டது!

நல்ல அதிர்ச்சி வைத்தியம்!

Saturday 5 December, 2009

கண்ணன் என் தம்பி! -- 3

சேலம் ராமகிருஷ்ண மடத்தையும், மடத்துச் சான்றோர்களையும் காண மிகவும் ஆவலாக இருந்தான்!

கண்ணனின் எண்ணம் நிறைவேறியதா?

ராஜு! எங்கள் (சித்தப்பா மகன்) தம்பி வந்தான். சேலம் செல்ல ஏற்பாடு செய்தான்!

ஒரு வேனில், கண்ணனை சிலர் (கை உருளையோடு) ஏற்றினார்கள். ராஜு கண்ணனுடன் சென்று அவனுக்கு உதவியாக இருந்தான்!

கண்ணன் மனம் மகிழ அங்குள்ளப் பெரியோரைச் சந்தித்தது, அங்கு நடந்த பூஜையில் கலந்துகொண்டது(எல்லாம் உருளையுடன் நகர்ந்து...நகர்ந்தே..)

இன்னும் சொல்லியிருப்பான்! எனக்கு நினைவில்லை!

இப்படியே ஒன்பது வருடங்கள் உருண்டது! உடல் நலமின்றி, ஆகாரம் செல்லவில்லை!

டாக்டரும் வந்தார்! மருந்துகள் கொடுத்தார்! ஒன்றும் பலனில்லை!

மூச்சுத் திணறல் வந்தது!

அக்கம் பக்கம் சொந்தக்காரர்கள் வந்து பார்த்துச் சென்றனர்!

இதற்குள் ராஜு, சேலம் மடத்திலிருந்து பிரசாதம் வாங்கி வந்தான்!

மூன்றாவது அண்ணாவின் மடியிலேயே... இரவு சென்றது...

மூச்சுத் திணறல்....

பக்கத்து வீட்டுப் பெரியப்பா சொல்கிறார்: 'நாங்கள்ளாம் அஞ்ஞானிகள்! நீ ஞானஸ்தன்! ஒனக்கு சொல்றதுக்கு என்னப்பா இருக்கு! நாராயணா ங்கற நாமத்தை கெட்டியாப் பிடிச்சுக்கோ!'

கண்ணன் சந்நியாஸம் வாங்கிண்டான்!

தபால் மூலமாக...(விவரம் சொல்லலை) குரு பாயின் புனித காவி வஸ்திரத் துளி(பிட்)

அதை மூச்சுக்குக்கும், இதயத்துக்கும் வைத்துக் கொண்டான்.

அதுவும் முடியலை! மூச்சு வாங்கறது!

விரல்கள் ஜப மாலையை தேடுவதுபோல் தோன்றியது!

ராமகிருஷ்ணர் படத்தை அவன் கண் முன்னாலே காட்டிண்டு, 'ஓம் ராமகிருஷ்ணா! ஓம் ராமகிருஷ்ணா!' ந்னு நான் பலமா சொல்ரேன்!

பக்கத்து வீட்டு சந்துரு அண்ணா அப்படியே கரம் கூப்பிண்டிருக்கின்றார்!

கண்ணன் விடுதலைப் பெற்று விட்டான்!

ராமகிருஷ்ணர் பதம் சேர்ந்தான்!

அப்போது அவனுக்குவயது இருபத்தியேழு!

நிறைவுற்றது.



--------------------------------------------------

கண்ணன்(சிவாம்ருதம்) தமிழில் கவிதைகளும், கீர்த்தனைகளும் இயற்றியுள்ளான்.

அவற்றிலிருந்து...

கீர்த்தனை--- 1
====================

ராகம் திலங். தாளம் ஆதி.

பல்லவி
=======

நம்பினேன் அருள்செய் நாயகனே!உன்பால்
நாளும் பக்திஓங்க நீளும் பிறவி நீங்க(நம்பி)

அனுபல்லவி
==========

அம்பிகை ஸ்ரிபவ தாரிணி பாலா!
அன்னை சாரதையின் ஆருயிர் மணவாளா!(நம்பி)

சரணம்
======

வஞ்சப் புலனைந்தைக் கொஞ்சமும் நம்பிடேன்!
..வந்த உலகை எந்தன் சொந்தமாய் நம்பிடேன்!
தஞ்சமென் ருன்மலர்த் தாளையே நம்பினேன்!
..தாமதம் செய்யாதே! ராமக்ருஷ்ண தேவாஉனை(நம்பி)
--------------

கீர்த்தனை--- 2
====================

ராகம் சரஸ்வதி தாளம் ரூபகம்.

பல்லவி
========

பகவானைப் பணி மனமே!
பரமஹம்ஸ ராமகிருஷ்ண (பக)

அனுபல்லவி
===========

சுகவாழ் வுற்றிடவே சத்
..சிதானந்த ஸ்வரூபனை (பக)

சரணம்
========

தூய அன்னை நேயனைஅன்பர்த்
..துயர் நீக்கும்ச காயனை
மாயனை குரு மஹராஜனை
..மஹாதேவ கதாதரனை (பக)
-------------


பகவான் ராமகிருஷ்ணருக்கு, மலர்களால் அருச்சனை!
---------------------------------------------------

வெண்டா மரைசெந் தாமரையும்
...வீசும் மணமுடை மல்லிகையும்
வண்டார் தேனின் ரோஜாவும்
...வாய்த்த தும்பை நாகவல்லி
கண்டார் நயக்கத் துளசியினால்
...கருதும் வில்வத் தளங்களினால்
உண்டா கியபே ரன்போடு
உனையருச் சித்தேன் ராமகிருஷ்ணா!

தீப தூபம் காட்டல்.
-----------------------

ஒற்றைத் தீபம் முத்தீபம்
...ஒளிர்ந்தே கண்ணைக் கவரும் வண்ணம்
கற்றைத் தீபம் பல உன்முன்
...காட்டி அகில்சந் தனமுதலாம்
உற்ற வாசனைத் திரவியங்கள்
...உன்னைச் சூழ உண்டாக்கி
மற்றை எவையும் மறந்துன்னை
...மனத்தில் நினைத்தேன் ராமகிருஷ்ணா!

----------------

Friday 4 December, 2009

கண்ணன் என் தம்பி! - 2

பெற்றோர் கண்ணனுக்கு வைத்த பெயர் சிவாம்ருதம்.

அப்பா அப்படித்தான் கூப்பிடுவார்!

பள்ளியில் கொடுத்த பெயர் சிவாம்ருதம்.

நாங்கள்தான் கண்ணா! கண்ணா! என்று கூப்பிடுவோம்!

நிறைய புத்தகங்கள் மூலமாக, விவேகானந்தரையும், ராமகிருஷ்ண பரமஹம்ஸரையும் அறிந்து கொள்ள முயன்றான்.

ராமகிருஷ்ணரின் நேரடி சீடர்கள் (குரு பாயிக்கள்) துரியானந்தர், லாடு போன்றோர் வரலாற்றையும் படித்தான்.

"காஸ்பெல் ஆப் ராமகிருஷ்ணா" புத்தகம் படிக்க ரொம்ப விரும்பினான்.

அவன் ஆர்வம் பலித்தது! விலைக்கு வாங்கப் பட்டது!

ராமாயணப் பலகையில் வைத்து படித்து வந்தான்.

ஆன்மீக விஷயமாக வரும் சந்தேகங்களை, பேலுர் மடத் துறவிகள், அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் மடத் துறவிகளிடம் கடிதம் எழுதித் தெளிவித்துக் கொள்வான்.

தபாலுக்காகக் காத்திருப்பதில் ஒரு மகிழ்ச்சி அடைவான்!

வீட்டில் ராமகிருஷ்ண விஜயம், வேதாந்த கேசரி போன்ற சஞ்சிகைகள் தருவிக்கப் பட்டன.

சேலம் மடத்துடன், கடிதப் போக்குவரவு வைத்திருந்தான்.

"சகோதரி நிவேதிதா" மீது பாடல் எழுதி கல்கிக்கு அனுப்பினான்.

அது வெளிவந்தது! 30, அல்லது 50 ரூபாய் கிடைத்தது !

ராமகிருஷ்ணரின் உருவப் படத்திற்கு, எவர்சில்வர் பிரேம் போட்டு வைத்துக் கொண்டான்!

திரு.ரா.கணபதி அவர்கள் "அறிவுக்கனலே! அருட்புனலே!"

முதல் பதிப்பு -வருடம் 1965. விலை -ரூ.12. கலைமகள் காரியாலயம்.

ராஷ்ட்டிரபதி எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டு கௌரவித்தது.


மேற்சொல்லப்பட்ட புத்தகத்தை, திரு.ரா.கணபதி அவர்கள் தம் கைப்பட சிவாம்ருதத்தின் நலம் விழைந்து,

"குருமஹராஜின் கிருபையால் ச்ரி. சிவாம்ருதத்திற்கு ஆன்ம நலன், உடல் நலன் இரண்டும் கிட்ட வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

ரா.கணபதி."

என்று எழுதி புத்தகத்தை அளித்துள்ளார்.


பகவான் ராமகிருஷ்ணர், சாரதாமணி தேவி, விவேகானந்தர் இவர்களின் பிறந்த தினம் அன்று, துதிப்பாடலுடன், இனிப்பு (தேங்காய் பர்பி) செய்து வணங்குவோம்!

தமிழில் கவிதைகள், கீர்த்தனைகள் இயற்றினான்.

அவனுக்கு எழுத முடியாத போது நாங்களும் உதவியாக எழுதுவோம்

சம்ஸ்க்ருதமும் அவனாகக் கற்றுக் கொண்டு "பகவத் கீதை" படிக்கலானான்.

சேலம் ராமகிருஷ்ணா மடம் சென்று பார்க்க ஆசைப் பட்டான்.

இன்னும் வரும்....

Thursday 3 December, 2009

கண்ணன் என் தம்பி! - 1

சின்ன வயதில் கண்ணன் வீடே தங்க மாட்டான்!

விளையாட்டுத்தான் அவனுக்கு எப்போதும்!

அவனுடன், ராஜுவும் (எங்கள் சித்தப்பா மகன்) சேர்ந்தால் கொண்டாட்டம்தான்! ரெண்டு பேரும் ஏறக்குறைய ஒரே வயதினர்!

கோவிலில் திருவிழா என்றால், இவர்கள் அங்கே வேடிக்கைப் பார்க்கச் சென்று விடுவார்கள்!

மாரியம்மன் மஹமேருவில் (புஷ்பப் பல்லக்கில்) ஊர்வலம்! அதுக்கு பூக்களெல்லாம் அலங்கரிக்கிப்பதைப் பார்ப்பது ஒரு வேடிக்கை!

வேலை செய்யும் கலைஞர்களுக்கு ஏதாவது சின்ன உதவிகள் செய்வார்கள்!

இரவு வீட்டிற்கு வரும்போது பயத்தோடு வீட்டினுள் நுழைவார்கள். ஏனென்றால்,அப்பா கோவத்தோட கத்துவார்! படிக்காம, சாப்பிடாமே ஊர் சுத்துகிறார்களே என்று அக்கறை!

கண்ணன் ரொம்பக் கோவக்காரன்! அவன் கேட்டது கிடைக்கலேன்னா ஒரே ரகளைதான்!

அடிக்கடி கால்வலின்னு சொல்வான்!

அப்பா மேலே கால் போட்டுண்டு படுத்துப்பான்! அப்பா அவன் காலைப் பிடித்து விடுவார்!

படிப்பில் சூடிகையா இருந்தான்!

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, பத்தாம் வகுப்பு முழு பரீட்சை முடிஞ்சு...லீவு! நீண்ட விடுமுறை!

இன்னொன்று சொல்ல மறந்தேனே!

அவனுக்கு ஏசிசி யில்சேர ஆர்வம்!(என்.சி.சி மாதிரி)

அதுக்கு காக்கி சீருடை, ஷூ,தொப்பி எல்லாம் வாங்கணும்!
அப்பா காசு கஷ்டம்! முடியாதுங்கறார்!

ரெண்டாவது அண்ணாகிட்ட கேட்டு வெச்சிருக்கான். அவரும் சரீன்னுட்டார்! வாங்கி கொடுத்தாரே! ஆசையோடு தொப்பியைப் போட்டுப் பார்த்து மகிழ்ந்தானே!

ஆனா விதியோட விளையாட்டை என்னன்னு சொல்றது?

கடுமையானக் காய்ச்சல்! நாலு நாளா வாட்டறது!

உடம்பை அசைச்சால் வலீன்னு கத்தறான்! இன்ச் கூட நகர முடியலை!

டாக்டர் வீட்டுக்கே வந்து பார்த்தார்! காய்ச்சல் கொறஞ்சிது!

ஆனா நேரா நடக்க முடியல்லே! ஒரு கோல்(தடி)பிடித்து நடக்க முயன்றான்.

அந்த சமயம் என் கல்யாணம்! வீட்டிலேயே! (திருமண மண்டபம்கிடையாது)

இந்த நிலையில்,நான் புகுந்த வீடு சென்றேன்!

என் அம்மாவும், தங்கைகள் ரெண்டுபேரும், அவனைக் கவனித்துக் கொண்டனர்!

கண்ணனுக்கு சுத்தமா நடையே வரவில்லை!

கால்கள் இரண்டும் முடக்கி விட்டது!

படுக்கும் போது கூட,கால்கள் முடங்கியே தான் இருக்கும்!

கால்களை நீட்ட முடியாது! கைகளில் வலது கை டனா அளவுக்கு வரும்.

"வாயோடு குந்தாணி" தெரியும்தானே?

அதுதான் அவனுக்கு நகர்ந்து செல்ல உதவியாக இருந்தது!
அதை வலது கையால் உருட்டிண்டு வருவான்! மற்ற எல்லா வேலையும் இடது கையில்தான்!

அவன் எழுந்து உருளையை உருட்டிண்டு, தொட்டி முத்தத்திலே, பல் தேய்ச்சுண்டு, காலைக் கடன் எல்லாம் முடிச்சிப்பான்!

அம்மா கவனிச்சுப்பார். சகோதரிகளும் கவனித்துக் கொள்வர்.

அவனுக்காக வீட்டில்'ரேடியோ'வாங்கினார்கள். அப்போ வானொலி சஞ்சிகை மாதா மாதம் வெளிவரும். அதில்,பாடல் பயிற்சியில் பாட்டும், ச்வரமும், ராகமும் எழுதி யிருக்கும்!

தாளம் "அரை எடுப்புத் தள்ளி" ந்னு இருக்கும். சரியாப் பாடிடுவான்!

தாளங்களை ரசிச்சுக் கேப்பான்!

கச்சேரிப் பாடல் நடக்கும் போது, அதுக்கு சரியாக் கொன்னக் கோல் சொல்லுவான்!

இன்னும் வரும்....

Tuesday 1 December, 2009

வீடு ! - 4

புழக்கடை ரேழியைக் கடந்து சின்ன தாழ்வாரம் அதையொட்டி 'வெந்நீர் உள்'.

அப்புறம், புழக்கடையில் மேற்கால ஒரு சேந்து கிணறு!

எங்க சித்தப்பா, பெரியப்பா வீடும் எங்கள் வீட்டை ஒட்டி இருக்கும்.

புழக்கடை கிணற்றை எல்லோரும் உபயோகிப்போம்!

தெற்கு மூலையிலே அந்தக்கால கழிப்பறை! மேற்கூரை கிடையாது! வெட்ட வெளியா இருக்கும்!

இப்போ வீட்டுக்குள்ள வருவோம்!

கூடத்தைத் தொட்டாற்போல ஒருபுறம் சமையல்'உள்'

இன்னொருபுறம் 'கண்ணன் உள்'!என் தம்பியின் அறை!

சின்னவயசில, காய்ச்சல் வந்து கால்கள் நடக்க முடியாமே முடக்கி விட்டது. கையும் ஓரளவு இயங்கும்!

அவன் அந்த உள்ளில் தான் படிப்பு, தியானம் எல்லாம்! அவன் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பக்தனாக இருந்தான்!

இந்த வீட்டில்தான் பகவான் அடி அடைந்தான்!

பிறகு,வாசல் ரேழியை ஒட்டி,'படுக்கும் உள்'

அந்த உள்ளில் ஒரு அட்டாணி(பரண்) இருக்கும்.

அந்த அறையை பலகை மச்சு உள்'ளுன்னு சொல்வார்கள். குளிருக்கு அடக்கமாக இருக்கும்.

புழக்கடை நிலம் விற்கப்பட்டது! வீட்டின் இடதுபக்கத்து நிலம் விற்கப்பட்டது! இரண்டு சகோதரிகள் திருமணங்கள் நடந்தன!

வீட்டின் பழுதை சரி பார்க்கமுடியா சூழ்நிலை!

தருமபுரிக்கு மாற்றல் வந்தது!

என் பெற்றோருடனும், என் பெண்ணுடனும், தருமபுரி வந்து சேர்ந்தேன்.

மின் அலுவலர் வேலை(எழுத்தர்)

சின்ன மகன் கோவையில் டாக்டருக்கு படித்தான்.

பெரிய மகன் டெல்லியில் எஞ்சினீயரா வேலைப் பார்த்து வந்தான். தம்பியை, எங்களை கவனிச்சுக்கிட்டான்.

அப்பாக்கு வீட்டை விட்டு வந்தது பிடிக்கவில்லை!

கொஞ்ச நாளில் அப்பாவும் இறந்தார். அம்மாவும் சிலவருடங்களில் இரண்டாவது அண்ணன் விட்டில், பாரிஸ வாதத்தால் இறந்து போனார்.

வீடு விற்கப் பட்டது! அது தரைமட்டம் ஆக்கப் பட்டது!

உயிரோட்டமுள்ள வீடும் ஒரு நாள் இல்லாமல் தான் போகும்!


எங்கள் மனசில் என்றும் குடியிருக்கும் வீடே! உன்னை மறக்க முடியுமோ?

எங்கள் வாழ்க்கைக்கு சாட்சியாய் இருந்தாய்! ஆதாரமாக இருந்தாய்! உன்னை என் உயிருள்ள வரையும் நினைத்திருப்பேன்!

முடிந்தது...

Monday 30 November, 2009

வீடு ! - 3

புழக்கடை ரேழி !

புழக்கடை ரேழியின் இரண்டுச் சின்னப் பரண்கள்.

ஒன்றில், விறகுகள் இருக்கும். மற்றொன்றில்,எருமுட்டை, செம்மண் உருண்டைகள் இருக்கும்.

எருமாமுட்டை (சாணியைதட்டி வெய்யிலில் காயவச்சி, எடுத்து வைத்தவை) வெந்நீரடுப்பு, சமையல் அடுப்பு எரிய ரொம்பத் தேவை.

அப்பா, கொடுவாளால் விறகைச் செதுக்கி, செதுக்கி, சிராய்த் தூளாக்குவார். சிராய்த் தூளும் ஜோராய் அடுப்பெரிக்க உதவும்.

ஆனால், மழைக் காலத்துலே எரியாத விறகும், காயாத எருமுட்டையும் அமையும்!அம்மாக்குத் திண்டாட்டம்தான்!

ஊதுகுழலால்(கண்ணன் கைக் குழல் அல்ல!)அடுப்பை ஊதி ஊதி எரிய வைக்கறத்துக்குள்ள எம்பாடு உன்பாடு ந்னு ஆயிடும்!

செம்மண் உருண்டைகள்(விசேஷங்களுக்குச் செம்மண் இடுவோமே! அதுக்கு) இருக்கும்.

புழக்கடை ரேழியின் மூலையில் ஐந்தாறு உலக்கைகள் இருக்கும்.

குழிவாய்ப் பூண்போட்டது, தட்டையாய்ப் பூண் போட்டது, என்று இருக்கும்.

வீட்டிலேயே 'அவல்' இடிப்பார்கள்.

அம்மா, புழுக்கி ஆர்வாடப் போட்ட நெல்லை பெரிய இரும்பு வாணலியில் போட்டு, ஒரு புதுத் தென்னங்குச்சிகளால் செய்த மாறால் (விளக்குமாறு) வேகமாக வறுத்து, உரலில் கொட்டினால், எதிரும், புதிருமா ரெண்டு வேலையாட்கள் 'சொய்' 'சொய்" ன்னு இடிப்பார்கள் !

தட்டை தட்டையா அவலு உமியோட இருக்கும்! பிறகு புடைத்து அவல் தனியாக எடுத்து வைப்பார்கள்.

மாவு, மிளகாய்த்தூள் எல்லாம் உரலில் இடித்துத்தான் செய்யப் படும். அதுக்குன்னே கடப்பாரையும் உண்டு!

ஊருக்குள்ளே, நெல் அரவை மில்லு இருக்கு!எள் எண்ணெய், கடலை எண்ணை ஆடுகின்ற செக்கு உண்டு! எள்ளுப் புண்ணாக்குத்(பிண்ணாக்கு?) தின்ற அனுபவம் இருக்கு!

இளையராஜாப் பாட்டு நினைவு வருது! 'போடாப் போடாப் புண்ணாக்கு போடாதேத் தப்புக் கணக்கு!'

இன்னிக்கு தயாராப் பாக்கெட்டுல மாவா, பொடியா எல்லாம் கிடைக்குது!

வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்தல், ஓடு மாத்தி வேய்தல் போன்ற கவனிப்புகளும் வேண்டும். இல்லாட்டா மழைவந்தா வீடெல்லாம் ஒழுகும்! திண்டாட்டம் தான்!

தூங்காமே துன்பப் பட்டதும் நிறைய அனுபவம் உண்டு!

நான் எழுதற கால கட்டம், என்னுடைய பள்ளி வயது!

மூட்டைப் பூச்சிக் கடி, கொசுக் கடி, சிரங்கு.... இவற்றில் சிக்காத பிள்ளைங்க
கிடையாது!

அப்போ விறகுப் பஞ்சம், அரிசிப் பஞ்சம் போன்ற கஷ்டமான நாட்களையும் கடந்துதான்
வாழ வேண்டியிருந்தது!

இன்னும் வரும்....

Sunday 29 November, 2009

வீடு ! - 2

வீடு !

நான் வளர்ந்து வாழ்ந்த வீடு!

வாழ்க்கைப்பட்டுப் போன..... வாழ்க்கைப் பட்டுப் போன பின்னும் பிஞ்சும், குஞ்சுமா
மூணுப் பிள்ளைகளோட கணவனை இழந்து வந்த போது தஞ்சம் தந்ததும் இந்த வீடுதான்!

என் மக்கள் வளர்ந்ததும் இந்த வீட்டில் தான்!

பெற்றோர், சகோதர, சகோதரிகளும் அனுசரணையாக இருந்தார்கள்.

தாழ்வாரத்தின் ஓரத்தில், எந்திரக்கல் மாவு அரைத்தல், ரவை உடைத்தல் போன்றவற்றிற்கு உபயோகிப்போம்.

பருப்பு உடைக்க ஒருவிதமான இயந்திரக் கல்லுண்டு. கல்லின் மேல்பகுதி லேசாக இருக்கும்.

முற்றத்தில், இரவில் நிலா பார்க்கலாம்.

நிலாச்சோறு, அம்மா கையில் போட, நாங்க சாப்பிட்டு இருக்கோம்!

பகல் வெய்யிலில், விறகு போன்றவற்றைக் காயப் போடுவோம்!

இதென்ன புதுமையா? ன்னு கேக்கலாம்!

இன்னிக்கு திறந்த வெளிக் காற்று வீட்டினில் கிடைப்பது அரிது!

பொட்டியாட்டம் வீட்டுக்குள்ளே, மின்விசிறி தான் காத்து கொடுக்கும்!

நாங்க அண்ணன், தம்பி, தங்கைகள் எட்டு பேரு.

சித்தப்பா, பெரியப்பா மக்கள் எல்லாம் விசேஷங்களில் கூடுவோம்!

வீடே திமிலோகப் படும்!

எல்லாம் உண்டு! சண்டையா? பேச்சு வார்த்தையா எல்லாம் உண்டு! மகிழ்ச்சி ஆரவாரம் எல்லாம் உண்டு!

புழக்கடையில், ஈரக் கடலைக்காயை (மல்லாக்கொட்டை? நிலக்கடலை?)

மண்தரையில் கொட்டி பரவலாக்கி, அதன்மேலே நல்லாக் காஞ்ச தென்ன ஓலையைப் போட்டு
நெருப்புப் பத்த வெச்சு எரியும்!

அப்போ சுற்றிலும் அண்ணன் தம்பிகள், அமர்ந்து கொண்டு குச்சியால் கிளறி விடுவார்கள்.

இப்போ, கடலை நல்லா வறுபட்டிருக்கும்! சிறிது நேரத்தில், எல்லாக் கடலையையும் பொறுக்கி ஒண்ணு சேத்தணும்! அவரவர் அங்கேயே கடலையை சாப்பிடுவார்கள்!

காலேஜ் விஷயம், ஹிந்தி, இங்கிலீஷ் சினிமா, இதைப் பற்றி எல்லாம் பேசுவார்கள்!

இன்னும்வரும்...

Saturday 28 November, 2009

வீடு ! - 1

வீடு!

நம்மைத் தனக்குள் அரவணைத்துக் கொள்ளும்! நம்முடைய சுக, துக்கங்களில் பங்கு கொள்ளும்!

வீடு என்பது சொத்தா? ஜடப் பொருளா? வெறும் கல்லு, மண்ணு, சுண்ணாம்பு.... இவைகளைக் கொண்டுக் கட்டப்பட்ட கட்டடம் மட்டும் தானா?

இல்லை! இல்லை! நம்மோடு வாழ்ந்து வரும் உயிர்ப் படைப்பு!

எல்லா நிலைகளிலும் பாதுகாப்பு மட்டுமன்று! நம்முடன் துணை இருக்கும் உயர்படைப்பு!

மக்களின் இன்ப, துன்ப, கோப, தாப, சிரிப்பு, அழுகை, வறுமை, செல்வம், காதல், உறவு, பிரிவு போன்ற அத்தனையும் வீடு அறியும்!

வாசல் முத்தம்!

முன்றில்! பெருக்கி சாணம் தெளித்து, அழகழகாய் புள்ளிக் கோலங்களும், கோடு கோலங்களும் நிறைந்து விளங்கும்!

வாசல் திண்ணைகள்!

இரண்டு திண்ணைகள்! வீட்டுப் பாடம் படித்து எழுதுவோம்! கதைகள் பேசி மகிழ்வோம்!

மழை நாட்களில், கயற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்போம்!

சந்தடி சாக்கில் மழையில் இறங்கி ஆடுவோம்! கப்பல் விட்டு விளையாடுவோம்!

திண்ணைகளுக்கிடையே ஏழு படிகட்டுகள்!

வாசலின் சிறிய திண்ணையில் ஒரு சின்ன உள் உண்டு! அது 'காந்தி சிறுவர் சங்கம்' அலுவலகம்! தம்பி, தங்கைகள் அவர்கள் நண்பர்களுடன் சிறப்பாக நடத்திய சிறுவர் சங்கம்!

ரேழியும்,ரேழித் திண்ணையும் !

ரேழித் திண்ணையில் பிரசவங்களும் நடந்திருக்கின்றன!

மற்றபடி குழந்தைகள் சொப்பு வைத்து விளையாடுவார்கள்! இங்கும் படிக்கலாம்!

நெல்லுக் கொட்டிவைக்கும் 'தொம்பை' ரேழியிலும், வீட்டின் அறையிலும் உண்டு!

தாழ்வாரமும்,கூடமும்,தொட்டி முத்தமும்!

ஓடியாடி விளையாடத் தோதான இடம்.

எல்லா உள்ளேயும் (உள்=அறை) ஒளிந்து விளையாடலாம்!

குழந்தைகளின் விளையாட்டுத் தொல்லைகளுக்கு பொறுமை காக்கும் பெரியோரும் உண்டு, கோபத்துடன் கத்தி பொறுமை இழக்கும் பெரியவர்களும் உண்டு!

இந்த கொடுவாள்,அரிவாள் போன்றவை வைத்து இடம் தாழ்வாரத்தின் மேல் கூரையில் இருக்கும்

'எரவாணம்' (இறவாணம்?) மரத்தில் ஆனது.

கூடம் என்பது (பட்டாசாலை?) வீட்டின் சகலவித நல்லவைக்கும், குழந்தைகள் அப்தபூர்த்தி, கல்யாணம், சீமந்தம், வளைகாப்பு, மணமான தம்பதியரை மணையில் அமர்த்தி, பாட்டுப் பாடி, வாழ்த்தி, ஆரத்தி எடுத்துக் கும்மி அடித்து மகிழ்வதும் கூடத்தில்தான்!

சோக நிகழ்வான திவசம் செய்தல்(சிரார்த்தம் செய்தல்) கூடத்தில் தான்!

எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதும் இந்தக் கூடத்தில்தான்!

அப்பா மதிய உணவருந்திய பின்பு, பாய் விரித்து தலைக்கு ஒரு பலகையைச் சாய்வாக வைத்துக் கொண்டு சிறிது நேரம் இளைப்பாறுவார்!

வெய்யில் தாழ்வாரம் கொறட்டுக் கல்லைத் தாண்டினால் மதியம் மணி இரண்டிற்கு மேல் ஆகிறது என்று பொருள்!

இன்னும் வரும்.....

Thursday 2 July, 2009

பிள்ளைச் செல்வமே!

அன்னை மனம் குழந்தையைக் கண்டால் பாகாய் உருகும்! பித்தாய் அலையும்!

மழலையின் ஒவ்வொரு அசைவிலும் களிகொள்ளும்!

பாரதி சொன்னானே!

"என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!
பிள்ளைக் கனியமுதே! கண்ணம்மா!

பேசும் பொற்சித்திரமே!...
உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி!..."


நாட்டுப்புறப் பாடல்களும், இலக்கியப் பாடல்களும் பிள்ளைச் செல்வத்தின் உயர்வை அழகாக, அருமையாகச் சொல்லுகின்றன!

பிள்ளைத் தமிழில்,செங்கீரைப் பருவம் முதலாகப் பத்துப் பருவங்களில்
கடவுளர்களை குழந்தையாகக் கொண்டு, அமைத்தப் பாடல்கள்
நாம் அனுபவித்துப் படித்துணர வேண்டியவையாகும்.

திரைப் படப் பாடல்களிலும் அழகும், பாசமும், நயமும்
பொங்க அன்னையின் சீராட்டும், பாராட்டும் நிறைய உண்டு!

ஒரு அன்னையின் பாட்டு! தாய்மையின் தவிப்பிலே பாடுகிறாள்! கேளுங்கள்!

'வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவம் இருந்து
தேடிய நாள்தன்னில் செல்வமாய் வந்தவளே!
..........
அழுதா அரும்புதிரும்!அண்ணாந்தா பொன்னுதிரும்!
சிரிச்சா முத்துதிரும்!வாய்திறந்தா தேன்சிதறும்!'


அடுத்து அன்னையின் பொறுப்பு வாய்ந்த தன் கடமையைச் சொல்லுகிறாள்!

பிள்ளையை பெற்றுவிட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?'


இன்று, தொட்டில் குழந்தைகள் உருவாகும் நிலை கண்டு, நெஞ்சம் குமுறுகின்றது!

இந்நிலை இனித் தொடராமல் இருக்க இறையருளை வேண்டுவோம்!

நம் பெரியோர்கள் குழந்தையின் ஒவ்வொரு அசைவிற்கும் பாட்டு சொல்வர்!

இரண்டு கைகளையும் கொட்டி, கொட்டி ஆடும் போது கைகளைக் குவித்து தலைக்கு மேல் தூக்கும்! அதற்கு ஒரு பாடல்!

'ராமா கிருஷ்ணா கோவிந்தா
கிருஷ்ணா ராமா கோவிந்தா

வெங்கட ரமணா கோவிந்தா
சங்கட ஹரணா கோவிந்தா

அப்பரமேயா கோவிந்தா
சுப்பிரசன்னா கோவிந்தா

வட்டிக்காசு வாங்கும் வடமலையப்பனுக்குக்
குட்டி கோவிந்தா!'


குழந்தை ஐந்து, ஆறு மாதங்களில் காலில் தண்டை கொலுசு சப்திக்க,
ஜிங்கு ஜிங்கு என்று மகிழ்ச்சியுடன் குதிக்கும்! அதற்கு ஒரு பாடல்!

சங்குசக்கர சாமிவந்து
ஜிங்கு ஜிங்குனு குதிக்குமாம்!

கொட்டு கொட்டச் சொல்லுமாம்-அது
கூத்தும் ஆடப் பண்ணுமாம்!

உலகம் மூன்றும் அளக்குமாம்!--அது
ஓங்கி வானம் அளக்குமாம்!

கலகலன்னு சிரிக்குமாம்!--அதைக்
காணக்காண இனிக்குமாம்!


தவழ முயலும்போது ஒரு பாடல்!

ஆனை ஆனை! அழகரானை!
ஆனயும் குட்டியும் ஆடுமானை!

ஜல்லைக் கரும்பை முறிக்கும் ஆனை!
சீராடி சீராடிக் கொஞ்சும் ஆனை!

குட்டி ஆனைக்குக் கொம்பு முளச்சுதாம்!
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம்!


இன்னும்,

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!
சாயக் கிளியே சாய்ந்தாடு!
குத்துவிளக்கே சாய்ந்தாடு!
கோவில் புறாவே சாய்ந்தாடு!


ஆழ்வார்களும் நாயன்மார்களும் தாங்களேத் தங்களைத் தாயாக பாவித்து "வாத்ஸல்யம்" பெருகப் பாடியருளியது நாம் செய்த பாக்கியம்!

பெரியாழ்வார் திருமொழி
======================
பொன்னியல் கிண்கிணி சுட்டி புறங்கட்டி
தன்னியல் ஓசை சலன்சலன் என்றிட
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்
என்னிடைக் கோட்டரா அச்சோவச்சோ எம்பெருமான் வாரா அச்சோவச்சோவே!


குழந்தை கண்ணனை, வெண்ணையுண்ட வாயனை, மண்ணளந்த மாலோனை ஆழ்வார் அழைக்கிறார்!

ஓடி வந்து தன்னை அணைத்துக் கொள்ள வேண்டுகிறார்!

என்ன அழகு பாருங்கள்!

Friday 26 June, 2009

பிள்ளைச் செல்வமே!

பிள்ளையைப் பெற்று வளர்த்து ஆளாக்குவது என்பது இன்று ஒரு பெரிய சாதனைதான்!

இருக்கட்டும்....

பிறந்த மழலையைக் காண்பது மனசுக்கு உற்சாகமும், புத்துணர்ச்சியும் தருகிறது!

நாமும் குழந்தையாய் ஆகி விடுகிறோம்!

அதோ ஒரு தாயின் தாலாட்டு....கேட்போம்!

மரத்தடி நிழலில் தூளியில் தூங்க வைத்து, பின் வயல் வேலைக்குச் செல்லும் ஒரு ஏழை தாயின் பாடல்!

குழந்தைக்கு இயற்கை தரும் வசதியிலே உறங்கச் சொல்லும் தாயின் தாலாட்டில், மன உணர்வுகளை இதைவிட எளிதாக, அழகாகச் சொல்ல முடியுமோ?

கண்ணுறங்கு,கண்ணுறங்கு
கண்மணியே கண்ணுறங்கு
வண்ண மருக்கொழுந்தே
மல்லிகையே கண்ணுறங்கு!

வேப்பமரக் காத்துப்பட்டா
வேறுவினை சேராது!
காப்பா மகமாயி
கண்ணுறங்கு என்மகனே!

பாலுனக்கு வேணுமின்னு
பாடுபடப் போறேண்டா
காலுதச்சு நீயழுதா
கண்ணீர் வருகுதடா!

நாலெழுத்து நீபடிச்சு
நஞ்சைபுஞ்சை வாங்கோணும்
பால்கொடுத்த ஆத்தாவுக்கு
பட்டுசேலை எடுக்கோணும்!

நீசிரிச்சா நான்சிரிப்பேன்
நீயழுதா நானழுவேன்
ஆசைவச்சேன் உன்மேலே
அழவேணாம் கண்ணுறங்கு!


கவிமாமணி இலந்தை அவர்களின் பாடல்.

மிக்க நன்றி!

(தொடரும்)

Saturday 4 April, 2009

நம்மாழ்வார் திருவாய்மொழி

சீலைக் குதம்பை யொருகா தொருகாது செந்நிற மேல்தோன் றிப்பூ கோலப் பணைக்கச்சும் கூறை யுடையும் குளிர்முத்தின் கோடா லமும்
காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்!
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்! நானே மற்றா ருமில்லை.



என்மனசைக் கவர்ந்த பாடல்!

ஒருநாள் இனியக் காலைப் போது!

அதோ அந்த யாதவச் சிறுவர்கள் மாடுகளுடன் மேய்ச்சலுக்கு கிளம்புகின்றனர்!

"என் கண்ணனும் உங்களுடன் வருகிறான்! பத்திரமாக அழைத்து போங்கள்!" என்று பிரியாவிடை கொடுத்து அனுப்புகிறாள் யசோதை!



நேரம் செல்லுகிறது...... மாலை வந்தது!

வழிமேல் விழிவைத்துப் பார்த்திருக்கிறாள்!

குழந்தை கண்ணன் வருகைக்காக காத்திருக்கிறாள்!

ஆயர்குலப் பிள்ளைகளுடன் அதோ வந்து கொண்டிருக்கிறான் கோவிந்தன்!

எப்படி வருகிறானாம்?

யசோதை கூவுகிறாள்!

"அடி கோபிகைகளே!

சேலைத்துணியைக் காதணியாய்க் கொண்டு ஒருகாதிலும்,

செந்நிற மருதோன்றிப்பூ காதணியாய் மற்றொரு காதிலும்
அணிந்து,

அழகான இடுப்பில் கூறை ஆடையைக் கச்சாக அணிந்து,

முத்தினாலான ஒருவகைக் கழுத்தணியும் அணிந்து,

அந்த யாதவப் பிள்ளைகளிடயே ஒரு தனி அழகோடு விளங்குகின்ற

கடல்வண்ணனின் வேடத்தை பாருங்களேன்!"




இப்போது யசோதை என்ன சொல்லப் போகிறாள்?

எந்த தாயும் "அவன் என் பிள்ளை!" என்றுதானே சொல்வர்?

நாமும் அதைத்தானே எதிர்பார்க்கிறோம்?

ஆனால்...? யசோதை என்ன சொல்கிறாள்?

"ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை."

இந்தப் பிள்ளையைப் பெத்தவள் வேறு யாருமில்லை நானேதான்!

பிள்ளையைப் பற்றி சொல்லிவிட்டு, அந்த பிள்ளை ' என்னுடைய் பிள்ளை' எனலாம்.

ஆனால், பிள்ளையைப் பற்றி மகிழ்ந்து விவரித்து விட்டு, அந்தப் பிள்ளயின் தாய் என்னும் போது, இப்படி எண்ணத் தோன்றுகிறது:

"பெறற்கரிய பேறுடையவனின் தாய் நான்!" என்ற புளகாங்கிதம்
யசோதையின் கூற்றில் தெரிகின்றது!

அருமையான பாசுரம்!

அன்புடன்,
தங்கமணி.

Sunday 25 January, 2009

அந்த கருப்பு வெள்ளி !

January 23, 2004...

"அந்த நாளும் வந்திடாதோ "..

எத்தனையோ நாட்களுக்காக , கணங்களுக்காக ஏங்கியதுண்டு..

ஆனால்.. இந்த நாள்..

இன்று நினைத்தாலும்.. உள்ளமும் உடலும் நடுங்கும் நாள்..

ஏன் வந்தது என்று எண்ணி மருகும் ஒரு நாள்..

"வாசலிலே மாக்கோலம்.. வீட்டினிலே லக்ஷ்மிகரம்" என ஊரெங்கும் தை வெள்ளி கொண்டாட்டம் ஒருபுறம்..

புதிதாக கட்டிய அந்த திருமண மண்டபத்தின் முதல் முகூர்த்தம் நெருங்கும் நேரம்..காலை 9.15 மணி..

எங்கும் சந்தோஷ சிரிப்பு, உபசாரம், விசாரிப்புகள்..குதூகலம் உச்சத்தில் இருந்த நேரம்..

வாழ்த்த வந்த முதியோர்கள், விளையாடி திரிந்த மழலை பட்டாளங்கள் ,

களையாய் வளைய வந்த கன்னிகள், பட்டு புடவைகள் சரசரக்க வளையல் சத்தம் மெட்டுபோட..

என எங்கும் சொல்லொன்னா மகிழ்ச்சி வெள்ளம்..

வாத்திய கோஷம் ஒரு பக்கம் முழங்கி கொண்டு இருக்க..

மாங்கல்ய தாரணம் நடக்க சில நிமிடங்களே.. இருந்த அந்த நேரம்..

சிறு தீப் பொறி..பொசுங்க ஆரம்பித்தன.. அலங்கார வண்ண வண்ண காகிதங்கள்..

கண்சிமிட்டும் நேரத்தில்..தற்காலிகமாக போடப்பட்ட கூரை பற்றி எறிய ஆரம்பித்தது..

எங்கும் தீ.. தீ.... தீக்கங்குகள் தான்..

சிரிப்புகள் அலறலாய் மாற.. எங்கும் அழுகையும் .. ஓலமும்..

இருந்ததோ ஒரே வழி..

தப்பிக்க எத்தனித்தனர் வந்திருந்த அத்தனை பேரும்..

இதில் வெளியேர முடிந்தோருக்கு. புது ஜன்மம் அன்று..

முயன்று தோற்றோர்.. முகம் கூட அடையாளம் தெரியவில்லை..


ஒளி இழந்தன பல வீடுகள்..

எத்தனை இழப்புக்கள்..

வார்த்தையால் விவரிக்க முடியாத துக்கம்.. எங்கும்..

என் வீட்டுலும் இருள் சூழ்ந்த நாளது..

உறவிலே என் அன்னையின் தமக்கை..

ஆனால்... என் உள்ளத்தை பொறுத்தவரை என் அன்னைக்கு மேலாக என்னை வழி நடத்தியவள்..

தோழியாய் துணை தந்தவள்..

வாஞ்சையாய் வழி காட்டியவள்..

நல்லதை நயமாக எனக்கு சொல்லி தந்தவள்..

பேரில் மட்டுமல்ல குணத்திலும் அவள் ஒரு சாந்த சொரூபி..
பளிச்சென்ற புன்னகை..

நடமாடும் விவித பாரதியாய்.. மெட்டுக்கள் முணுமுணுக்க.. வேலை பார்க்கும் பாங்கு.. எதை சொல்ல..

"கடவுள் எங்கே?" .. இந்த கேள்வி என் மனதில் திரும்ப திரும்ப கேட்டு சலித்து போய் விட்டேன்..

கனவுகள் பல சுமந்து.. கை கூடும் வேளையில்.. காணாமல் போனதேனோ..???????

."சக்கரை நிலவே..பெண் நிலவே ..
காணும் போதே கரைந்தாயே..
நிம்மதி இல்லை.. ஏன் இல்லை..
நீ.. இல்லையே.."

நீ விரும்பி முணுமுணுத்த ஒரு பாடல்...


உன் இனிமை குரலில் இனி எப்போது கேட்பேன்???????

காலம் உருண்டோடலாம்..

ஆனால்.. என் கண்ணில் இருந்து உருண்டோடும் கண்ணீர் நின்றபாடில்லை..

மிஞ்சி இருப்பது உன் பற்றிய நீங்கா நினைவுகள்..நினைவுகள்..

We miss YOU .. We miss YOU

Tuesday 20 January, 2009

பாட்டியின் நினைவுகளில்...

அன்பு மகனே!

பாட்டியைப் பற்றியும், பாடல்களைப் பற்றியுமுள்ள உன்னுடைய ஞாபக சக்திக்கு என் Hats off!

தலை தாழ்த்திப் பணிகிறேன்!

எனக்கு நீ சொல்லசொல்ல பாட்டிக் கூறியது நினைவு வருகிறது!

ஆங்கிலேயர் ஆட்சி காலம்.

பாட்டியோட அப்பா குமரலிங்கம் என்னும் ஊரில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

("கே"ஊர்கள்னு சொல்லி ஞாபகம்) கணியூர், கடத்தூர், கொழுமம், கொத்தாம்பாடி, குமரலிங்கம். காரத்தொழு

அங்கு ஒரு தமிழ் புலவர் அப்போதே உடனே கவி எழுதியதுதான் இந்த "சர்வா டம்ப்ரமாம் குமரலிங்கம் அங்கு தங்கும் மாணாக்கர்கள் கல்விச்சங்கம்"என்ற பாடல்!

இங்லிஷ் நோட்டு மெட்டுலே பாடின பாடல் இது!

(இந்த டியூனை கிடாரிலோ,வயலினிலோ நீ இசைக்கலாமே!)

பாட்டியின் அப்பா பெயர் ராமசாமி.

பாட்டியின் அப்பா ராமுப்பா, கூடப் பிறந்தவர்கள் உம்மாச்சிப்பா, காப்பிப்பா, ஒரு அத்தை லக்ஷ்மி(அப்பிச்சியம்மா)

ஆசையாய் குழந்தைகளுக்கு பட்சணம் (குழந்தை மொழியில்
அப்பிச்சி என்றால் பட்சணம் என்று பொருள்) செய்து தருவதால்!

கூட்டுக் குடும்பம்! பெரிய குடும்பம்!

பாத்திரம் நமக்கு அடிமையா? நாம் பாத்திரத்துக்கு அடிமையா? என்னும் பாட்டியின் பேச்சு, பாத்திரங்கள் பற்றாமையால் மட்டும் அல்ல! தேவைக்கு பயன் படித்துவோம்! என்ற எண்ணத்தில் கூறியது.

(பாட்டி இரண்டாம் வகுப்பு படித்து இருக்கிறாள். பாட்டிக்கு ஒன்பது வயசில் கல்யாணம். தாத்தாக்கு அப்போ 15 வயது)

தத்துவப் பாடலில் இந்தப் பாடலும்:

"எச்சில் எச்சில் என்கிறீர்! ஏதுங்கெட்ட மூடரே!
பொறந்தபிள்ளை எச்சிலோ? கறந்த பாலும் எச்சிலோ!"


ராமநாடகக் கீர்த்தனைகளையும், தேசிங்கு ராஜா கதை பாட்டுகளையும்,

"நாயகர் பட்சமடி! எனக்கது ஆயிரம் லட்சமடி!"

கூழேயானாலும் எனக்கது தேனே!
கொண்டவனிருக்கக் குறையென்ன மானே!"


போன்ற வேதநாயகம் பிள்ளையின் பாடல்களையும், சித்தர் பாடல்களையும், கவிகுஞ்சரர், சிவன், கோபாலகிருஷ்ண பாரதியார், போன்றோரின் பாடல்களையும் பாடி, தத்துவமும், தேச பக்தியும், பக்தியும் நிறைந்த உள்ளத்தோடு வாழ்ந்தவள்.

"இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழிலுடையோன்
எங்கள் தமிழன்!மேலாம்(எழிலுடையோன்)

கந்தமூலமே புசிக்கநேரினும் கடமை தவறவே
மாட்டான் தமிழன்!"


(எம்.எம்.மாரியப்பா பாடியது என நினைக்கிறென்)

தாரமங்கலம் டூரிங் டாக்கிஸ் கொட்டகையில் இந்தப்
பாடல்கள் ஒலிக்கும்! கேட்கும் தூரத்தில் வீடு.

கே.ஆர்.ராமசாமி பாடிய பாடல்களை அம்மா ரசித்துப் பாடுவாள்.

"இன்னமும் பராமுகம் ஏனம்மா! ஏழை
இடர்தவிர்ப்பதுன் பாரம்மா!"

"நீதானல்லாமல் துணை யார்!
மாதா பிதாவும் நீயே!"


வானொலியில் 50 களின் கடைசியில் பல மெல்லிசைப் பாடல்கள் அருமையாக இருக்கும்!

சுந்தரியும்,உமாவும் நினைவு கூர்ந்து சொன்ன பாடல்கள்! யார் எழுதிய பாடல் தெரியவில்லை! அருமையான பாடல்!

"இதய தாபம் தீருமா!இறைவா
எனது வேட்கை மாறுமா?
உடலின் நடிப்பும் ஓய்ந்திடவில்லை!
உயிரின் துடிப்பும் சாய்ந்திடவில்லை

நினைவுக்கப்பால் நெடுவழ ஓடி
கனவுக்கப்பால் கண்டது கோடி!

நிலையின்றி நானும் அழுதேன் தேடி!

பயிலும் வினையும் பண்படவில்லை!
பாடி அழுதும் உன்கண்படவில்லை!


இன்னொரு பாடல்..

கதிரவன் கிரணக் கையால் தொழுவான்!
சுதியோடு புட்கள் ஆடிப்பாடி துதி செய்யும்!
பொதியலர் தூவிப் போற்றும் தருக்களெல்லாம்
பூதம் தம்தொழில் செய் தேற்றும்!
அதிர்கடல் தனொலியால் வாழ்த்தும்!
அகமே! நீ வாழ்த்தாததென்னே...."


70 களில் வானொலிப் பாட்டொன்று,

"அஞ்சலி செய்தோம் பாரத தேவி!
அணுவொடுப் பயிலத் தேர்ந்தவளே!
சஞ்சலம் தீர்க்கும் செஞ்சுடற் செல்வி
சமத்துவ நெறியைச் சார்ந்தவளே!"

எஸ்.ஜானகி பாடிய பாடல். குமார் பாட்டுப் போட்டிக்கு பாடினான்.

(பொக்ரானில் அணு பரிசோதனை இந்திராகாந்தி ஆட்சிக் காலம்)

இந்தப் பாடல்கள் இப்போது கேட்கக் கிடைக்குமா?

இன்னும் உன் பள்ளிநாள், கல்லூரி நாள், நினைவுகளைப்
பகிர்ந்து கொள்ளேன்.

வாழ்க வளமுடன்!

Sunday 18 January, 2009

ராஜம்மாள் - பாட்டியின் நினைவுகள்

அம்மா,

என் குழந்தைப் பருவ (சில) வருடங்களில் நானும் பல பாடல்களை பாட்டி பாடி கேட்டிருக்கிறென்.

காந்தி லண்டன் சேர்ந்த பாடல் வட்டமேசை மா நாட்டிற்காக என வரலாற்றில் படித்து புரிந்து கொண்டது;

அதே சமயத்தில்,ஜார்ஜு துரை வரவிற்காக பாட்டியின் பள்ளி நாட்களில் பாடிய பாட்டு

( நினைவிருக்கிறதா? -

'ஐந்தாம் மன்னர் ஜார்ஜு துரை எங்கள் மஹராஜா,
அருமையான மேரியம்மாள் எங்கள் மஹராணி' )-

இன்னுமொரு பாட்டு King george coronation-பற்றி

'சக்ரவர்த்தி முடிசூடும் சம்ப்ரவமே,
தரணியங்கும் புகழும் வைபவமே,


லண்டனிலே ஸ்டீமரேறி ஏடென் வழியாக வந்து,
தண்டு தாளங்களுடன் ஜார்ஜு மன்னர் முடி புனைன்தார் ?

டெல்லி நகரத்திலே டிஸம்பர் பதினெட்டினிலே
சொல்ல முடியாதுஙம்மா, ஸ்வதேசி மன்னர் கூட்டமதை,

சக்ரவர்த்தி முடிசூடும் சம்ப்ரவமே,
தரணியங்கும் புகழும் வைபவமே

காந்திக்கும் பாட்டு, துரைக்கும் பாட்டு, என்ன சமத்துவம்!

'என்ன வார்த்தை சொன்னாயடா தொன்றம்மல்லண்ணா!,

நீ வந்தார்ப்போல் நவாபு வந்தால் நிமிஷமிருக்க மாட்டேன்,

பணம் என்ற சொல்லே காதில் விழுந்தால்
பாய்ந்து வெட்டுவேன் நான்,

டாரு டாராய் வெட்டிப் போடுவேன்
நவாபு சேனையைத் தான்!' -


வரிப் பணம் கேட்டு நவாபு அனுப்பித்த தூதரிடம் ராஜா தேசிங்கு வீரமாக பாடுவதான இந்தப் பாடலை பாட்டி ஆக்ரோஷமாய்ப் பாடும் போது வீட்டு விவகாரமெல்லாம் மறந்து போகும்.

பாட்டிக்கும் தான் என்று இப்போது நினைக்கிறேன்,

தாத்தா ''காப்பி பொடி வாங்கி பத்தே நாள் தான் ஆச்சு,அதுக்குள்ளே தீத்துட்டேளா'' என்று ஆங்காரமாய் கத்தினால்,

'என்ன வார்த்தை சொன்னாயடா........'

பொருத்தமாய்த் தான் இருக்கிறது!!!

இன்னும் பல பாடல்கள் கஷ்டங்களில் மட்டுமின்றி எல்லா சமயங்களுக்கும் பாட்டு ஒரு துணை பாட்டிக்கு.

பாட்டியின் அப்பா பள்ளிக்கூடத்தில் உள்ள எல்லா ஆசிரியர்களின் பெயரும் எனக்கு இன்னும் மனப்பாடம் இன்றும்!

‘சர்வாடம்ப்ரமாம் குமரலிங்கம், தங்கும் மாணாக்கர்கள் கல்விச் சங்கம்’

(மணிப்ப்ரவாளத்தை முழுதாக மறந்த எழுபதுகளில் எனக்கு இது முழுதும் புதிது,

‘சர்வ ஆடம்ப்ரம்’-மும் ‘மாணாக்கர் கல்விச் சங்கம்’- மும் ஒரெ வாக்கியத்தில் எழுத முடிகிற நடையை உதறி விட்டது ஒரு விஷயத்தில் தமிழின் நஷ்டமென்று நான் சொன்னால் தமிழ் பேசும் நல்லுலகத்தில் உதை படுவேன்!)

‘தரிசனமொடு தலைமியில் வரும் ப்ரெசிடென்ட் சார்,
தர்மதுரை ராமசாமிக் கௌண்டர்,
தன்யராம் ஹெட்மாஸ்டர் சார்,
தனமுத்து சுப்ரமண்ய பண்டிதரே,
தரமோர்க் கிள்ளை ? பெருமாள் பிள்ளை,
சாஸ்திரி ராமனாதய்யர் துரை ராமசாமி லக்ஷ்மிராஜு சம்மதியில்''


இதில் பாட்டியின் அப்பா ராமனாதய்யரென்று நினைக்கிறேன்.
இன்னும் தனது சகோதரியுடன் சேர்ந்து மாலை நேரங்களில் பாடிய பல பாடல்கள் பெரிய தாத்தா எழுதியது என நினைக்கிறேன் !

அம்மா, உனக்கு நினைவிருந்தால் வலை விரி!
(தேவி எனைக் காரம்மா)

பாட்டியைப் பற்றி சிலவிஷயங்கள் என் நினைவுகளில், வெகுளி, வாழ்க்கயைப் பற்றிய வரைமுறைகளில் சிறிதும் குழப்பமில்லாமல், கண்டதே காட்சியாய் வாழ்ந்து முடித்தவள்.
சூதுக்கும் வாதுக்கும் இடம் கொடுக்காமல் இதயமும் வாயும் ஒன்றாக வாழ்ந்தவள்.

'நாம் பாத்திரத்துக்கு அடிமையா இல்லை பாத்திரம் நமக்கு அடிமையா' என்பதான தர்க்கத்தில் வீட்டில் பாத்திரம் பத்தாத குறைபாட்டை மறக்க முயலும் escapism ஒரு weakness என சொல்லலாமோ?

இந்த விதமான வாழ்க்கை முறையால் ஏற்பட்ட பல குடும்ப பிளவுகளை she gracefully tackled.

பாட்டி தாத்தாவின் கல்யாண வாழ்க்கை, gives an insight into arranged Indian maariage.

இதைப் பற்றி இன்னொரு முறை எழுத வேண்டும்.!

நினைவலைகளில்...!

என் அம்மா பாடிய பாட்டுகள்!

"அடுத்து வந்த என்னைத் தள்ளலாகாது!
அரஹரா என்று சொன்னாலும் போதாதோ?"


அம்மா சமையல் உள்ளே கணீரென்று பாடுகிறாள்!

புகைமண்டிய, எரியாத அடுப்பை ஊதி ஊதி களைத்து, இந்த மாதிரியான பாடல்களை அம்மா பாடுவதை நான் பலமுறைக் கேட்டிருக்கிறேன்...

"சம்போ! கங்காதரா! சந்ரசேகரா! ஹரஹர!"

ஏதாவது கஷ்டமான சூழ்நிலைகளில் அம்மா பாடுவதை பல நேரந்க்களில் கண்டு கேட்டிருக்கிறேன்!

"கண்டாமணி ஆடுது! கண்டுபிணி வாடுது!"
"சிவலோக நாதனைக் கண்டு சேவித்திருப்போம்! வாரீர்!"


"உடலைவளர்த்தேன்! உயிர் வளர்த்தேனே!" திருமூலர் பாடல்!

"வெட்டவெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்கு
பட்டயம் ஏதுக்கடி!குதம்பாய்!"
போன்ற குதம்பை சித்தர் பாடல்!

"தாரகமே நீ பாரு! பவந்தாண்டியே கரை சேரு! மனமே! (தாரகமே)

இன்றைக்கு இருப்பார் நாளைக்கு காணோம்
நிலையில்லாக் காயம் மனமே!"


யார் பாடல்?தெரியாது!

இப்படியோர் பாடல்!

"மோசம் போகாதே! மனமே! மோசம் போகாதே!
ஒன்பது வாசலின் கூடு!
உற்று பார்த்தால் மலக்காடு!
துன்பதிற்காகிய வீடு!
இந்த துற்புத்தியைத் தள்ளி போடு!"


தேசபக்தி பாடல்கள் நிறையப் பாடல்கள் அம்மா பாடி கேட்டிருக்கேன்!

"பொழுது புலர்ந்தது! யாம் செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்!"


பெண்விடுதலைக் கும்மி பாடல்

" ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை யென்றெண்ணியிருந்தவர்
மாய்ந்து விட்டார்!"

"கற்பு நிலை யென்று சொல்ல வந்தால்
இருகட்சிக்கும் அஃதை பொதுவில் வைப்போம்!"


சிறப்பாகப் பாடுவாள்!

"கனிந்து வந்தேமாதரம் ஓதும்...
...லோகமான்ய பால கங்காதரத் திலகமே!
அஞ்சாத பால கங்காதரத் திலகமே!"

"காந்தி லண்டன் சேர்ந்தார் கைகூப்பித் தொழுவீர்!"

"கதர்கொடி கப்பல் தோணுதே!",


திருமதி சுந்தராம்பாள் பாடியது என நினைக்கிறேன்!

வள்ளலார் பாடல், தண்டலையார் சதகம், எல்லாம் அம்மா எப்படி எப்போது படித்து தெரிந்து கொண்டாளோ !

இதைத் தவிர கும்மி, கோலாட்டப் பாடல், கண்ணன் ஓடக் கும்மி, போன்ற பாடல்களும் அம்மா ஆசையாகப் பாடிக் காட்டியிருகிறாள்!

இன்னும் இன்னும் நிறைய! மும்மூர்த்திகளின் சில பாடல்களும் அம்மா பாடி கேட்டிருக்கிறேன்! என்னுடைய 30 களில்!

"மதுரைக் கரசியான கண்மணி!
மாட்சிசேர் மீனாட்சி அம்மணி!
சதுர்முகனோடு முனிவர் பணியும்
தாரணி! நாரணி1!பூரணி!காரணி!"


இன்னொரு பாடல்...

"தருவாய்!நல்வரம்!தாயே!வாணி!
தருண மிதுனதடிச் சார்ந்தெமைப் பேணி!
குருவாய் உலகில் குறை தவிர்த்திடவே
தருவாய் குருகிய மதி வினைக் கெடவே!"


பாபனாசம் சிவன் பாடல்களும் அம்மாவின் விருப்பமாகும்.

என் சிறியவயதிலிருந்து அம்மா பாடுவதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் என்பதை நினைப்பதே எனக்கு இன்றைக்கும் மகிழ்ச்சியை தருகின்றது!