Sunday 26 October, 2008

தீபாவளி நாளில்....

என் சின்னவயசிலே, எல்லா வகையிலும் மகிழ்ச்சி!

புத்தாடைகள்! மத்தாப்பு பட்டாசுகள்!

முறுக்கு, இனிப்புகள்! படிக்க தீபாவளி புத்தகங்கள்!

இன்னும் என்ன வேண்டும்!

இந்த மகிழ்ச்சிக்குப் பின்னே...

அப்பா துணிக்கடைக்கு எங்களை அழைத்துப் போவார்!

சீட்டித் துணி வகைகளிலும், பசங்களுக்கான டிராயர், சட்டை வகைகளிலும் நாலு வகைகளைக் கடைக்காரர் எடுத்து போடுவார்!

மகிழ்ச்சியாய் அதற்குள் ஒரு கலரைச் சுட்டிக் காட்டுவோம்!

புதுத் துணி மணம்! பட்டாசுப் புகையோடு, பட்சண மணமும் சேர்ந்து மகிழ்ச்சியில் மனம் திளைக்கும்!

அது ஒரு பொற்காலம்!


(அப்பா கடன் சொல்லி, துணிகள், மத்தாப்புகள் வாங்கி கொடுத்த விஷயம் எங்களுக்குத் தெரிவிக்கப் படாத விஷயம்)

Tuesday 21 October, 2008

சின்ன விஷயங்கள்!

.
அப்போதெல்லாம், நிறையத் துணிகளைத் துவைத்து உலர்த்த, சாதாரண சோப்புக் கட்டிகள்தான் கிடைக்கும்.

நாம் புழங்கும் தண்ணீரும் உப்பாக இருந்தால்... சோப்பை உராய்ந்து கை வலிக்கத் துவைக்கணும்!

பிறகு 'சன்லைட்' சோப் வந்தது! துவைக்கும் வேலை சுலபமாயிற்று!
தேகடை சோப்பையும் கல்லில் தேய்த்து, துணிகளை துவைப்போம்.

( தீர்ந்து போகும் நிலையில் உள்ள சோப்=தேய் கடை சோப் என்று சொல்லலாமா ? )

501பார் சோப், வீல் பார் சோப், டெட் சோப், ரின் சோப் (வாசனையாய் இருக்கும்!)

அதற்குப் பின்பு, சோப்பு தூள்கள் (சோப்புக் கட்டிகளை வெட்டும்போது கிடைக்கும் தூள்கள் ) பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வந்தன!

கொஞ்சம் வெந்நீரில் தூளைப் போட்டு கைகளால் நன்கு கலக்கி, துணிகளை போட்டு சிறிது நேரம் ஊற வைத்த பின் துவைத்தால் துணிகள் சுத்தமாக இருக்கும்!

நிர்மா, சர்ப்ஃ தூள், இவைகளுக்குப் பின், சுர்ப்ஃ எக்ஸெல் இப்போது வந்தது!

இன்னும் இன்றைய நாகரீகத்தில் லிக்விட்டாகக் கிடைக்கிறது! இயந்திரம் தோய்க்கிறது! உலர்த்துகிறது! வேகமான உலகத்தில், என்ன என்ன வசதிகள்!

இப்படியே அனைத்து வீட்டு வேலைகளுக்கும் நவீன வசதிகள் இருக்கின்றன!

இப்போது, வேண்டியதெல்லாம் அன்பு! அன்பு!! அன்பு!!!

தாயும்-பிள்ளையும்
தந்தையும்--மகனும்
கணவனும்--மனைவியும்
சகோதர--ஸகோதரி

அடிப்படைக்கு பஞ்சம் வரக் கூடாதே!

இறைவா! மனிதத்தை அன்பில் வாழ வை!

Thursday 16 October, 2008

சின்ன விஷயங்கள்...

.
பெண் குழந்தைகளுக்கு தலை பின்னி, பின்னல் முடிவில் ரிப்பன் வைத்து பட்டாம்பூச்சி போல் முடி போடுவது அழகாக இருக்கும்!

ரிப்பனில் எத்தனை விதம்! சாட்டின் ரிப்பன், பவானி ரிப்பன், சில்க் ரிப்பன் என பல வண்ணங்களில் இருக்கும்!

கோடுகள், புள்ளிகள், பூக்கள் என வகை வகையாய் கிடைக்கும்!

உல்லன் நூல்களில், ரோஸ், பச்சை, நீலம், வைலெட் என தனியாகவும், அத்தனைக் கலரும் ஒரே உல்லனில் இருக்கும்படி அமைந்தும் இருக்கும்.

இந்த உல்லன் நூலை வைத்து அழகாக சிறுமிகளுக்கும், குழந்தைகளுக்கும் பின்னலிடுவர்.

குஞ்சம் வைத்துப் பின்னலிடுவதும் ஒரு அழகுதான்!

இன்று நாட்டியம் ஆடும் பெண்கள் குஞ்சம் வைத்துக் கொள்கின்றனர்!

அரிதாய் மணப் பெண்கள் வைத்துக் கொள்கின்றனர் !

நெற்றிப் பொட்டு !

அந்த நாட்களில், நெற்றிக்கு கருப்பு சாந்து இட்டுக் கொள்வது பெண்களின் வழக்கம்!

அரிசியைக் கருக்கிக் கூழாக்கிக் காய்ச்சி, கொட்டாங்கச்சியில்
ஊற்றி வைத்து வெய்யிலில் ,உலர்ந்தபின், நெற்றியில் இட்டுக் கொள்வர்.

பெண்ணுக்கு சீராக வெள்ளிக் கொட்டாங்கச்சி கொடுப்பதுண்டு!

அழகழகான வடிவங்களில், கண் மைக் கூடுகள் இருக்கும்!

வீனை, மயில்,அன்னம், இன்னும் வித விதமாய்....!

பின்னால் மை அச்சுக் குச்சிகள் வந்தன!

சிவப்பு சாந்து, சின்ன பாட்டில்களில் வந்தன!

அதில் வாசனைக் கலந்து...!

அப்புறம்...ஸ்டிக்கர் பொட்டு, அதில் தான் எத்தனை வடிவங்கள்! வண்ணங்கள்!

இப்பொழுது, கற்கள் பதித்த சம்கிவேலைப் பாடு கொண்ட பொட்டுகள்!

நுட்பமான வேலைப்பாடு கண்ணுக்குத் தெரியாத வகையில் மிகச் சிறிய பொட்டுகள்!

தொடரும்...

Sunday 5 October, 2008

காந்தி தாத்தாவைப் பற்றிய என் நினைவுகள்!

.
காந்தி தாத்தாவைப் பற்றிய என் நினைவுகள்!

வீட்டில் காந்திமகானின் படம்! ஓட்டைப் பல் தெரிய சிரிக்கும் அழகு!

அன்னை கஸ்தூரி பா அவர்களின் படம்! கைகூப்பி வணங்கும் முறையில் அமைந்தது!

மனதுக்கு நிம்மதி கிடைப்பது போல் உணர்வேன்!

போராட்டத்தில் ஒரு அமைதியான வாழ்வு! பேரலைக் கடலிடையிலும் அமைதி உண்டே! அது போல!

காந்திஜியை எண்ணி நெகிழ்வதில் சினிமாவின் பங்குண்டு.

தினசரி, பத்திரிகைகள், ஆல் இந்தியா ரேடியோவிற்கும் பெரும் பங்குண்டு!

பாடல்கள், நாடகங்கள் மூலமாகவும் காந்தி அண்ணலை அறிஞ்சுக்க முடிந்தது!

"நாமிருவர்" திரைப் படத்தில், சிறுமியாக இருக்கும் போதே "மஹான்! காந்தி மகான்!" என்ற பாடலில் கமலாவின் நாட்டியத்தில், பாடலில் நெகிழ்ந்தேன்!

ஒற்றுமையை வலியுறுத்தும் பாடலான "சீலமிகும் ஒற்றுமையுற்றோமே! இனிநாமே பிரியாத வாழ்வு நாமே பெறுவோமே!"

கருணாமூர்த்தி காந்தி மகானை பணிந்து பாடும் பாடல்!

என்.எஸ்.கே, டி.ஏ.மதுரம் அவர்களின் நாடகம் தமிழகம் மறக்காது!

"மதுவை ஒழிப்போம்! மதியை வளர்ப்போம்!" என்றும்,

"குடி கெடுத்த குடி ஒழிஞ்சுது!
அடிதடி சண்டை அதும் கொறஞ்சுது!
ஆணும் பெண்ணும் புத்தி அறிஞ்சுது!
எங்க நாட்டிலே அக்டோபர் ரெண்டுக்கு மேலே!"

என்ற பாடல் சொல்வது போல குடியை ஒழிக்க வந்த மகானல்லவா?

காந்திஜி , ஒரு வெள்ளிக் கிழமை மாலை பிரார்த்தனையின் போது குண்டடி பட்டு இறைவனடி சேர்ந்தது செய்தியாய் பரவின!

எங்கள் ஊரில் ஒரு மாடிவீட்டில் ரேடியோவில் ஒலிபெருக்கியை இணைத்து அன்று முழுதும் கேட்டுக் கொண்டே இருந்தோம்!

என் அம்மா சாப்பிடாமல் வருத்தத்துடன் கண் பனிக்க கேட்டுக் கொண்டிருந்தார் நானும் அம்மாவுடனே இருந்தேன்!

தகனத்திற்குப் பின் ஒரு வெறுமை!

அவர் நினைவில், சுதந்திர இந்தியா வறுமையை ஒழிக்கப் பாடுபட்டு, ஐந்தாண்டு திட்டங்களை வகுத்து முன்னேற்றப் பாதையில் நடை போடத் துவங்கியது!

Thursday 2 October, 2008

பொம்மைக் கொலு!

பொம்மைக் கொலு!

இந்த ஒன்பது நாட்களிலும் துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, என்ற முப்பெருந் தேவியரும், கல்வியாய், செல்வமாய், வீரமாய், மக்களுக்கு அருள் செய்திட வென்று வீடுகளில் கொலுவிருக்கக் கொண்டாடி மகிழ்வோம்!!

சின்னவயது நினைவுகள் ! .......

எங்கள் ஊரிலே, எனக்குத் தெரிஞ்சு ஒரு 30, 40 வீடுகளில் கொலு வைத்திருப்பார்கள்.

இந்த ஒன்பது நாளும் கையில் குங்குமச் சிமிழுடன் எல்லோர் வீட்டுக்கும் சென்று அழைப்போம்!

சிறுமிகளுக்கு இது மகிழ்ச்சியான நாட்களாகும்!

பெரியவர்கள் முடிந்த நாளில் வந்து, கொலுவில் பங்கேற்றுப் பாடி மகிழ்வர்! மஞ்சள் குங்குமம், வெத்திலைப் பாக்கு பூ வுடன் சுண்டலும் பெற்றுச் செல்வர்.
ஒரு வீட்டில் மட்டும் (வடிவேல் முதலியார் வீடு) கூடம் முழுதும் மேலிருந்து தரையில் முடியும் வரை நிறையப் படிக் கட்டுகளில் நிறைய்ய பொம்மைகள் வைத்திருப்பர்!

செட்டு செட்டாய், வித விதமாய் பொம்மைகள்! பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்!

சிறுமிகள் சிலர், ராதை, கிருஷ்ணன் போன்ற வேஷம் போட்டுக் கொண்டு அலங்காரமாய் வருவாகள்.

இன்னும் சிலர், பட்டுப் பாவாடை நகைகள் அணிந்து பின்னலில், ஜடை பில்லையும், மேல் தலையில் "உச்சிப் பூ" என்னும் கற்கள் பதித்த தலையணியை, அல்லது "ராக்கொடி" என்னும் தலையணியையோ அணிந்து வருவர்.

பார்க்க அழகு கொஞ்சும்!

நான் இருப்பதற்குள் நல்ல ஆடைகளை அணிந்து கொள்வேன்.

ஜடைபில்லை, உச்சுப் பூ வைத்து என் அம்மா பின்னி விடுவாள்.

இது போதும் எனக்கு!

எனக்கு எல்லோர் வீட்டுப் பொம்மைகளைக் கண்டு களிக்கணும்.

அங்கு பாடுவோர்களின் பாடல்களைக் கேட்டு மகிழணும்.

மற்றப் பெண்கள் அணிந்த புத்தாடைகளைக் கண்டு ரசிக்கணும்.

அப்புறம்...என்ன என்ன சுண்டல்கள் (வாயனம்) கிடைக்கிறதோ, வீட்டில் எல்லோருமாய் சாப்பிடுவோம்.

கொலுவைப்பதில், நம் பண்பாடு, ஆன்மீக பக்தி, மதிக்கப் படுகிறது.

அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ந்து கொண்டாடப் படும் நவராத்திரி, ஒரு கலை உணர்வு மிக்க திருநாட்களாகும்!