Wednesday, 8 February, 2012

புளிக்குழம்பு (இனிப்பு)


தேவையானவை
----------------


புளி எலுமிச்சங்காய அளவு.

சாம்பார் வெங்காயம் ஒரு கையளவு.(எந்த காயும் போடலாம்)

வெல்லம் 2 அல்லது 3 நெல்லிக்காயளவு.

குழம்பு பொடி இரன்டு ஸ்பூன்.

மஞ்சள்தூள், பெருங்காயம் சிறிது.

கறிவேப்பிலை 2 ஆர்க்.

தாளிக்க
-----------

நல்லெண்ணெய் ஒரு குழி கரண்டி.

கடுகு ஓர் ஸ்பூன்.

வெந்தயம் இரண்டு ஸ்பூன்.(மூன்றுஸ்பூனும் போடலாம்).

செய்முறை.
-----------------


அடுப்பில் வாணலியை ஏற்றி, நல்லெண்ணையை ஊற்றி, நன்கு காயவேண்டும்.

கடுகு, வெந்தயம் எண்ணெயில் வெடிக்க விடவேண்டும். வெடித்ததும், அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.

மஞ்சள்தூள் சிறிது, பெருங்காயம் சிறிது போட்டு நன்கு கிளறி விடவேண்டும்.

வெங்காயம் வதங்கியதும், கரைத்து வைத்திருக்கும் புளிக் கரைசலை ஊற்றி, தேவையான உப்பும், குழம்பு மிளகாய்த்தூள் 2 ஸ்பூன், கறிவேபிலையையும் கிள்ளி குழம்புடன் சேர்க்கவும்.

நல்லெண்ணெயை ஊற்றி நன்கு கரண்டியால் கலக்கவேண்டும்.

இப்போது வெல்லம் 2 அல்லது 3 நெல்லிக்காயளவு சேர்த்தி கொதிக்கவிடவும்.

இப்போது இனிப்பு புளிகுழம்பு தயார்!

வெல்லம் (பிடிக்காதவர்கள்), போடாமலேயும் உபயோகிக்கலாம்

Wednesday, 1 February, 2012

மோர்கூழ்!


தேவையானவை
============

ரவை-- 1கப்.

புளித்தமோர். ரவையோடு நீர்த்த, புளித்த மோர் சேர்த்து மிகவும் நீர்க்க இருக்கும்படி கரைத்து வைத்துக் கொள்ளவும்.


தாளிக்க========

நல்லெண்ணெய்-- சிறிய குழிகரண்டி.


கடுகு சிறிது,

கறிவேப்பிலை கொஞ்சம்,

பெருங்காயம் சிறிது,

கொத்துமல்லித்தழை கொஞ்சம் (பொடியாய் நறுக்கிகொள்ளவும்)

பச்சைமிளாய் 2 - நறுக்கி வைத்துக் கொள்ளவும்

மோர்மிளகாய் இருந்தால் வறுத்து கூழுடன் சேர்த்துக் கொள்ளலாம்

பெருங்காயம் சிறிது.

நெய்-- 4 ஸ்பூன்.

தேவையான உப்பு.


செய்முறை
========

அடுப்பில் வாணலியை ஏற்றி, (இதயம்) நல்லெண்ணயை விட்டுக் காய்ந்ததும், கடுகு வெடிக்க விடவும்.


பச்சைமிளகாய், கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை, பெருங்காயம் எல்லாவற்றையும் சேர்த்துத் தாளித்து, கரைத்து வைத்திருக்கும் மோர் ரவையை, வாணலியில் ஊற்றி, நன்கு கிளற வேண்டும்.


இப்போது 2 ஸ்பூன் நெய் விட்டுக் கிளறவும்.


ரவா மோர் கெட்டியாகி அல்வா பதத்துக்கு முன்னே இளகிய பதத்தில் இருக்கும் போது இன்னும் நெய் ஊற்றிக் கிளறி, இறக்கி வைக்கவும்.


தட்டில் நெய் தடவி சூடாக மோர்கூழை விட்டு சாப்பிடச் சுவையாக இருக்கும்.

Saturday, 28 January, 2012

வாணலி உப்புமா!


வாணலி உப்புமா!

================

பச்சரிசி மா -- ஒரு கப்.(ஈரமில்லாத மாவு)

பெரிய நெல்லிக்காய் அளவு புளி.


தாளிக்க:
=========

நல்லெண்ணெய்-- 1குழி கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு,

வரமிளகாய் 2.

பெருங்காயம் சிறிது.

கறிவேப்பிலை கொஞ்சம்.

தேவையான உப்பு.

பெரிய நெல்லிக்காய் அளவு புளி.


செய்முறை
========

வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து,

பிறகு பச்சரிசி மாவை, தாளிப்போடு சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் வறுக்கவும்.

அரிசிமா பொன் நிறமாக ஆகும்வரை வறுக்கவும்

அரிசிமாவு பொன்நிறம் ஆனதும், புளிக்கரைசலை அதில் ஊற்றவும்.

இப்போது புளிக் கரைசலுடன், சேர்த்து நன்கு வறுக்கவும்.

ஐந்து நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.

வாணலி மாவு தயார்!

Monday, 26 December, 2011

திரைப்படம்--4

'கருப்பு-வெள்ளை' திரைப்பட காலத்தில், நடனகாட்சி, கனவு காட்சி கலரில்....என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும்.

வண்ணப்படம் பார்க்க மக்கள் ஆர்வமாகச் செல்லுவார்கள்.

நாமிருவர் படத்தில் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே", "வெற்றி எட்டு திக்குமெட்ட கொட்டு முரசே" என்ற பாரதியார் பாடல்கள் கமலாலக்ஷ்மணன் நடனம். மிக அழகாக சிறப்பாக, இருக்கும்.

தரை டிக்கெட் அப்போது,இரண்டரையணா. நான்கு பாகம். இரண்டு பாகத்திற்கு பிறகு 'இண்டர்வெல்' விடப்படும்.

கொட்டகையாக இருப்பதால், மழைக்கு ஒழுகும். சாரலடிக்கும். படம்பார்க்க முடியாது.

அப்பாவிடம் , சினிமாக்குப் போறோம்!னு சொல்லும் போதே, காசு கொடுத்து அனுப்புவார்.

சிலசமயம் கோவிச்சுப்பார்...

உள்ளூற பயத்துடனும், குற்ற உணர்வுடனும்தான் சினிமா பார்த்திருக்கோம்.... அது ஒரு காலம்..

சினிமாபற்றி எல்லோருக்கும் தெரிந்ததுதான்...

திரைப்படத்துறையில், நடிப்பு என்பதுடன் படப்பிடிப்பு, நடனம், இயக்கம், வசனம், திரைக்கதை என்று நிறைய விஷயங்கள் இருக்கின்றன...

சரித்திரக் கதையா...அதற்குண்டான ஆடை,ஆபரணங்கள், அரண்மனை,போர்க்களம், போன்றவைகளின் அமைப்பு (கலை இயக்குனர்) வேண்டும்.

பக்தி படமா...அதற்குண்டான கோவில்,தெருக்கள், குளம் போன்ற அமைப்பு வேண்டும்.

இப்போது நிறைய அறிவியல் முன்னேற்றம் கண்ட காலமிது.

எல்லோரும் அறிவீர்கள்....

திரைத்துறையிலும் நிறைய சாதனைகள் பெருகி வருகின்றன..

சாதனையாளரை வாழ்த்துவோம்!

Sunday, 4 December, 2011

திரைப்படம் -- 3.

திரைப்படம்....அந்தநாளிலிருந்து, என்று துவங்கியிருக்க வேண்டுமோ ?

ஆம். நிறைய மாற்றங்களை...பிரதிபலித்திருக்கிறது!

ஆடை,அணிகள் புழங்கும் சாதனங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்....

அன்று பாட்டு கேட்கவேண்டும் என்றால், வீட்டில் கிராமபோன் பெட்டி வைத்திருப்போர் தான் கேட்க முடியும்.

திரையரங்கில் ஒலிபெருக்கியில் கேட்கும் தூரத்து ஒலியாய்ப் பாடலைக் கேட்டிருக்கிறோம்.

பிறகு ரேடியோ என்னும் வானொலி வந்தது.

இதனால் பக்திப் பாடல்,சினிமாப் பாடல்,கர்னாடக சங்கீதம், நாட்டுப்புறப் பாடல் என்று கேட்க முடிந்தது.

மேடையில் இன்னிசை நிகழ்ச்சிகள் மக்களால் விரும்பி கேட்கப் பட்டன.

நிறைய சிறப்பாக தமிழிசை, கர்னாடக இசை இவையெல்லாம், கதைபோக்கோடு திரைப்படத்திலும் காட்சியாக்கப் பட்டன

வீடு என்றுகாட்டும்போது, கூடத்தில் மேசையின்மீது 'ரேடியோ' காட்டப்படும். அது ரேடியோக் காலம் என அறியலாம்.

பின்பு டெலிவிஷன் வந்தது.

அதுவும் திரையில் காணப்பட்டது....

அன்று ஆட்டுரலில் மாவரைப்பது, கிணற்றில் வாளியில் நீர் இறைப்பது

இன்று கிரைண்டர், மிக்ஸியில் அரைப்பது....பைப்புகளில் நீர் வருவதால் எல்லாத்தேவைகளும் எளிதில் முடிகின்றன.

சமையலறையில்.... அன்று விறகடுப்பு, குழலூதும் புகையில் கதாநாயகியைக் காட்டுவார்கள்.

பிறகு, மண்ணெண்ணை ஸ்டவ்விலிருந்து கேஸ் அடுப்பு வந்தது. இதையும் திரைப்படத்தில் சமூக வாழ்வியல் சார்ந்த படங்களில் கண்டோம்.

பெல்பாட்டம், ஸ்டெப் கட், என்றெல்லாம் இளைஞர்கள் அணிவதும் நாகரீகமாக இருந்தது.

Monday, 21 November, 2011

திரைப்படம் --2

திரைப்படம் காலம் காட்டும் கண்ணாடியாகத் தெரிகிறது.
மக்களின் ஆடையணி,உபயோகிக்கும் பொருள்கள்,இவையாவும்,
காலத்திற்கேற்ப மாற்றம் அடைந்ததை,திரைப்படத்தில்
அறியலாம்.அறிவியல் வளர்ச்சியால் திரைப்படத்தில் ஏற்பட்ட
முன்னேற்றம் மிகப்பெரிது.

திரையிசைப் பாடல்கள், இலக்கியத்தரம் வாய்ந்தவைகளாகவும்
உள்ளன.எளிய நடையில் மண்மணத்தோடு அமைந்த பாடல்கள் ஏராளம்.

ஒருநிகழ்ச்சி,
ஆலயமணி படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.
'என்னையாரென்று எண்ணி எண்ணி
..நீபார்க்கிறாய்?இது யார்பாடும்பாடலென்று
..நீ கேட்கிறாய்' என்றபாடல் திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.
பக்கத்தில் அமர்ந்திருப்பவர் யாரென்று பார்க்கவில்லை.
தலையை ஆட்டிக்கொண்டும்,தாளம் போட்டுக் கொண்டும்
கூடவே பாடிக் கொண்டிருக்கிறார்.சிலசமயம்,
என்மீதும் கைபடுகிறது. சங்கடத்துடன்
திரையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இடைவேளை விட்டதும்...
பக்கத்து இருக்கையைப் பார்த்தேன்...மனம் பதட்டப் பட்டது!
விழியிழந்த சிறுவன்,
பத்து,பன்னிரெண்டு வயதிருக்கும்... ஆர்வமோடு தன் தாயாரோடு ,
பாடல்களைத் திரையரங்கில் கேட்டு இரசிக்கவே வந்திருக்கிறான்.
என்மனதைப் பாதித்த நிகழ்ச்சி இது.

Sunday, 16 October, 2011

திரைப் படம்!

திரைப்படங்கள் மக்களின் பொழுதுபோக்காக மட்டும்
இல்லாமல் சிந்திக்கச்செய்வதாகவும் இருக்கின்றன.
கண்ணகி,மணிமேகலை போன்ற காவியங்களும், திரையில்
உலா வந்தன. இதிகாச பக்தி இலக்கியங்களும் திரையில் பவனி வந்தன.
வரலாற்றுக் காவியங்கள் அன்றையக் கால நிலையைக் காட்டுவதாய் அமைந்தன.

சமூகப் பிரச்சினைகள் வாழ்க்கையாய் சொல்லப்பட்டன.
பலவகைகளிலும் திரைப்படம் முக்கிய ஊடகமாக இருந்தது.வானொலியும் வந்தது.
நாளேடு,வார,மாத சஞ்சிகைகள்,புதினம், ஊடகங்களாக இருந்தபோதிலும்,
பட்டி தொட்டி யெங்கும் பாமரர்களிடை அதிவிரைவாக எடுத்துச்சென்ற ஊடகம்
திரைப்படம்தான்.
இசைக்கு முக்கியத்துவம் கிடைத்தது.திரையிசை எல்லோராலும்
இரசிக்கப்பட்டு பாடப்பட்டன.அதனாலேயே வானொலியில் 'திரையிசைப் பாடல்'
ஒலிபரப்பப் பட்டது.

Monday, 10 October, 2011

எழுது!எழுது!நிறைய எழுது!

எழுதுவது என்பது அழகிய கலை. உணர்வுகளைச்
சொல்வதுபோல் வார்த்தைகளாய் வரையும் ஓவியம்.
அதுவேபண்பட்ட,அனுபவத்தில் விளைந்த எழுத்துஓவியம்
காவியமாகின்றது.

ஒன்றும் எழுதத் தெரியாமல் இருக்கும் எனக்கு, எழுதவேண்டும் என்னும்
பசிக்குத் தீனியாக இந்த இணையதளம் உதவுகிறது.
வெள்ளைத்தாள்,எழுதுகோல் கண்டால் ஏதாவது எழுதவேண்டும்
என்ற எண்ணம் பரபரக்கும்...
அன்றைய தலைமுறைக்கும்,இன்றைய தலைமுறைக்கும்
இடைப்பட்ட மாறுதல்கள்,மாற்றங்கள் எல்லாவிதத்திலும் உண்டு.
வளர்ச்சிகளாகப் பார்க்கிறோம்.நிலைத்தடுமாறச்செய்யும்
மாற்றங்களும் உண்டு.
பழையனக் கழிதலும்,புதியனபுகுதலும் மரபு.
ஏற்றுக்கொண்டாலும்,கொள்ளாவிடினும் நடப்பது நடந்து போகும்.

இருப்பினும்,டூரிங்டாக்கீஸிலிருந்து,
இன்றையதியேட்டர் திரையரங்குவரை
காட்சிகளாய்க்காண்பதெல்லாம்,வாழ்வியல்கலாசாரம்,பண்பாடு,
சமூக அவலங்கள்,அறிவியலின்பங்கு,போன்ற
பலவற்றையும் கண்டு அறியச்செய்யும் துறைகளில்,
திரைப்படங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Friday, 29 July, 2011

ஆடையே அணி!-- 3

ஆடைகள் மக்களின் கலாசாரத்தைச்
சொல்கின்றன.

இன்று
விதவிதமான ஆடைகள்!
பார்க்கும் உத்தியோகத்திற்கேற்ற உடைகள்!
வழக்கறிஞர்,நீதிபதி,டாக்டர்,இவர்களுக்கான ஆடைகள்....
பள்ளிச் சிறார்களுக்கான யூனிபார்ம்...

பலவகைப் பண்பாடுடைய மக்கள் அணியும் பாரம்பரிய ஆடைகள்
அந்த அந்த விசேஷங்களுக்கான ஆடைகள்,
திருமணச் சடங்கு போன்றவைகளில் அணியும் ஆடைகள்!
பெண்களுக்கென்று அழகான வண்ணமான ஆடைகள் கண்கவரும்.
கவுன்,பாவாடை,தாவணி,புடவை என்று உண்டு.

மேலைநாட்டு நாகரிகம் நம் ஆடைகளில் வந்துவிட்டது.
காலத்திற்கேற்றக் கோலமாக மட்டுமல்ல,இன்றைய அவசியமாகவும்
பெண்களின் ஆடைகள் ஜீன்ஸ்,ஷர்ட்
என்றாகிவிட்டது.அதையும் நமக்கு ஏற்றவிதமாக அணியலாம்.
இன்றைய ஊடகங்களில் ஆண்,பெண் சிறார் ஆடைகள் பற்றிய
விளம்பரங்கள் புதுமையாக ஆட்டமும் பாட்டுமாகக்
காணக் கிடைக்கின்றன!

நடை , உடை. பாவனை, என்பதில் உடையின் முக்கியத்தை அறியலாம்.
ஆள் பாதி,ஆடை பாதி என்பது சொலவடை.
மகாத்மா காந்தி அவர்கள்'அரை சந்நியாசி' என ப்பட்டார்.
ஏனெனில் அவர் வேட்டி,துண்டில் தான் இருப்பார்.
ஏழையர்க்காக வேட்டி அணிந்தவர்.
"உடுக்கை இழந்தவன் கைபோல" என்று வள்ளுவனார்
மானம் காக்கும் ஆடையைப் பற்றி நட்பின் அருமையைக் கூறும்
இடத்தில் குறிப்பிடுகிறார்.

பெண்கள் அணியும் சீலை சீலை,புடவை,கூ றை,சீரை எனப்படும்.
மடி என்றும் ஆடைக்கு பெயருண்டு.
எனக்கு ஆடையைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது!பகிர்ந்து கொண்டேன்

Friday, 1 July, 2011

துணியே அணி!--2

கைத்தறித் துணி என்று சொன்னதும்,
தாரு சுத்தறதும்,பாவு ஓடறதும்,தறி நெய்யறதும்,
கெண்டைவேட்டி,கெண்டைச் சேலை(சரிகை)என்றும்
புடவையா,வேட்டியா விற்பனைக்கு எடுத்துச் செல்லப் படுவதும்
நினைவு வருகிறது!அரைகுறை நினைவிலேச் சொல்கிறேன்.
எங்க ஊரில்,கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் தறி நெய்வதில்
தேர்ச்சி பெற்று வாழ்ந்தனர்.
.

'சின்னச்சின்ன இழைப் பின்னிப்பின்னிவரும்
..சித்திரக் கைத்தறி சேலையடி நம்ம
தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி!'

கைத்தறி சேலையின் பெருமையை,
ஒரு கவிஞர் பாடிப் புகழ்ந்தார்!

பின்பு,சின்னாளப்பட்டில்,'பளப்பள' சேலைகள்
வண்ணங்களில் மிளிர்ந்தன.
சின்னாளப்பட்டி என்னும் ஊரில் சிறப்பாக நெய்யப்படும்
சேலைகள்.
பெண்களுக்குப் பாவாடைத்துணிகள்,
நல்ல பட்டுப்போன்றே கரைகள் வைத்து,
கட்டங்களுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.


மில்துணிகள் வந்த காலத்தில்,
புடவைகள் கட்டு(பேல்)கட்டாக வந்து இறங்கும்.
எத்தனை கெஜம் புடவைக்குத் தேவையோ அத்தனை
கெஜம் அளந்து கட்செய்து வாங்கலாம்.(அப்போவெல்லாம்
6கெஜம் ஒரு புடவைக்கு)பின்புதான்,அப்படியே
புடவை,புடவையாக விற்பனைக்கு வந்தன.
எஸ்குமார்,விமல்,பாம்பே டையிங்,ரூபிக்வீன்,போன்ற
மில்கம்பனிகள் நிறைய வகைகளை அறிமுகப் படுத்தின.

தொடரும்...