Monday, 7 June, 2010

கண்ணா! என் கண்மணியே!

ராமு கதை சொல்கிறான்.

ரொம்ப ஆர்வமோடு குழந்தைகள் கதை கேட்கிறார்கள்..

பின்னாலே தளர்நடை பயின்று ஓர் பாலகன் கண்விரிய...வாய்மலர்ந்து...வருகிறான்!

கதையில் வரும் காக்காய் தாகத்துக்கு தண்ணீர் வேண்டும் என்று "கா கா"ன்னு கத்தறது!

அப்பிடீன்னு சொல்லிக் கொண்டே பின்னால் திரும்பி பார்க்கிறான் ராமு.

கதையை இன்னும் சுவையாகச் சொல்லச் சொல்ல அந்த பாலகன் ராமுவின் முதுகில் சாய்ந்து, கழுத்தை வளைத்து ராமுவையே பார்த்துக் கொண்டிருந்தான்!

கதையில்....

காக்கா மூக்காலே ஒவ்வொரு கல்லாகக் கொத்திக் கொண்டுபோய்.... ஜாடியில் போட்டது....

தண்ணீரும் மேலே வந்துவிட்டது. காகமும் தாகம் தீரக் குடித்தது!

காகம் பறந்து போனது!

கதையும் முடிந்து போனது!

எல்லாக் குழந்தைகளும் கைத் தட்டி மகிழ்ந்தன!

இப்பொழுது ராமு பாலகனைப் பார்க்கிறான்!

ராமுவின் முதுகைக் கட்டிக்கொண்டிருக்கும் அழகில் லயித்துப் போகிறான்!...

பெரியாழ்வார் திருமொழி நினைவுக்கு வருகிறது!

கிண்கிணிக் கட்டி கிறிகட்டி கையினில்
கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி
தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து
என்கண்ணன் எனைப்புறம் புல்குவான்

ஆயர்களேறெனைப் புறம்புல்குவான்.

Saturday, 29 May, 2010

உணர்வுகள்..!

உணர்வுகள்..!

ஞாபகசக்தி என்பது ஒரு வரமோ? சாபமோ?

இரண்டும் தான்!!

மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது..

ஏதோ ஒன்றை நினைக்கத் தொட்டுத் தொடர்ந்து போய்கொண்டே இருக்கிறது....

உறவுகளில் தெரியும் முரணோ, பாசமோ..

நாம் பார்த்த சினிமாவைப் பற்றியோ, கண்ணில் பட்ட காட்சியைப் பற்றியோ

படித்த புத்தகத்தினால் பாதிக்கப் பட்டோ

சிந்திக்கையில் எழும் நினைவு...அதனால் தோணும் உணர்வுகள்...பலவிதம்..

வீரத்தில், பக்தியில், காதலில், கருணையில், அன்பினில்...உயர்ந்திடும் உணர்வுகள்!

வீரத்தில் சிலிர்த்தெழுந்திடும் உணர்வு!

பக்தியில் நெக்குருகி நெகிழ்ந்திடும் உணர்வு!

காதலில் தவித்திடும் உணர்வு!

கருணையில் கனிந்திடும் உணர்வு!

அன்பினில் அடங்கிடும் உணர்வு!

கோபத்தில், பொறாமையில், வெறுப்பில், சினத்தில்...தோன்றும் உணர்வுகள்!

கோபம் வந்தால் அதன் வழியேச் சென்று கோபம் கொள்ளலாம்..

பொறாமை வெறுப்பு வரும்தான்!

ஆனால், நிதானமாக யோசித்துப் பார்த்து அவற்றை வராமலிருக்கும் வழியை முயல வேண்டும்.

மனிதருக்குள்ளே தோன்றும் நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பக்தி உணர்வை விளக்கும் தேவாரப் பாடல் ஒன்று நினைவில்:

விறகில் தீயில்நன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணி சோதியான்
உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.


(விறகில் தீப்போலவும். பாலிற்பொருந்திய நெய்போலவும், மாமணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன் ; உறவு என்னுங்கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுகவாங்கிக் கடைந்தால் முன்னின்று அருள் வழங்குவான்)

Friday, 12 March, 2010

சந்தை!ஒரு காலத்தில், மக்கள் தங்களிடமுள்ள பண்டங்களை ஓரிடத்தில் கூடி, விற்பனை செய்வார்கள்.

அது பணம் பெற்றுக்கொண்டோ, அல்லது பண்ட மாற்றாகவோ நடைபெறும்.

தனது ஆசை எண்ணமாக, பாரதியாரும் தம் பாடலில் கூறுவார்!

"கங்கை நதிப் புரத்துக் கோதுமைபண்டம்
...காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்"
சிங்க மராட்டியர்தம் கவிதைக் கொண்டு
...சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்!"


பண்டைக் காலத்தில்,திருவிழாக்காலங்களில், மக்கள் கூடி,தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். இப்போதும் திருவிழாவின் போது "சந்தை" கூடும்!

ஆனால் "வார சந்தை" என்பது கிராமத்து மக்களுக்கு மிகவும் முக்கியம். அன்றாட தேவைகளுக்கு ஏற்ற பொருள்களை வாங்குவதற்கு மக்கள் சந்தைக்குச் செல்வார்கள்.

எங்கள் ஊரில் (தாரமங்கலம்) வியாழன் தோறும் சந்தை கூடும்!

சந்தை என்றால் ஒரு எதிர்பார்ப்பு எங்களுக்கு!

எங்கள் தந்தை காய்கறிகளுடன், பொரிகடலை, பழங்கள் வாங்கி வருவார்!

எங்களுக்கெல்லாம், (நாங்கள், எங்கள் சித்தப்பா பசங்களோட ஏழு, எட்டு பேரு இருப்போம்!) பகிர்ந்து உண்ணுவதில் மகிழ்ச்சி!

அந்தந்த காலத்தில் என்னப் பழம் கிடைக்குமோ, வாங்குவார். மாம்பழம், கொய்யாபழம், வெள்ளரிப்பழம்(வெல்லம் தொட்டு சாப்பிடச் சுவையாக இருக்கும்!) கோசப் பழம்(தர்பூஸணிப் பழம்!) பேரிக்காய், சீதாப் பழம் போன்ற பலவகைப் பழங்கள்...

கரும்பு, அப்பா வெட்டித் தருவார். நாங்கள் வாசலில் கதைப் பேசிகொண்டே கரும்பைக் கடிச்சி, உறிஞ்சிக் கொண்டே...ப் பேசுவோம்!காய்களெல்லாம் கூறு,கூறாகத்தான் விற்பார்கள்!

அக்கம்பக்கத்து கிராமத்தில் விளையும் காய்களும் புதுசாகிடைக்கும்!

கொளத்தூரு கத்திரி பிஞ்சு ஒரு புட்டிக்கூடை ஒரு ரூவாய்க்கு வித்திருக்கு!

எங்கள் வீட்டு புழக்கடையில், பந்தலில், அவரை, பீர்க்கங்காய்,புடலை எல்லாம் காய்க்கும்!

வெங்குவின் படைப்பு! உழைப்பு! வெங்கு என் அண்ணன்(சித்தப்பா மகன்), நன்றாக தோட்ட வேலை செய்வார்!

("வெங்குவின்கடை" யில் வரும் அதே வெங்கு!)

அவரைக் "கீரை மாஸ்டர்" என்று கூறுவோம்! கீரை பாத்தி கட்டி பாதுகாத்து வளர்ப்பார்!

சந்தையை விட்டு விட்டேனே! சந்தையில் தானியங்கள், புளி, மிளகாய், கொத்தமல்லிவிரை(தனியா) விவசாயிகளுக்குத் தேவையான பொருள்களும் கிடைக்கும்!

மக்களுக்குச் சேந்து கிணத்துக்கு வேண்டுமென்ற கயிறு, வாளி (பக்கெட்டு) எல்லாம் கிடைக்கும்!

கயிறு "பத்து மாரு, பதினஞ்சு மாரு" என்ற அளவில் வாங்குவார்கள் !

காய்கள் என்று சொல்லும்போது உருளைக் கிழங்கு (என்பது அபூர்வம்!) சந்தையில் அப்பா வாங்குவார்!

மறுநாள், வெள்ளிக்கிழமை "உருளைக் கிழங்கு பொடிமாஸ்" உண்டு! சாம்பார் (சின்ன வெங்காயம் போட்டு) உண்டு!

பெரிய வெங்காயம் அப்போதுதான் கிராமத்துக்கு வந்தது! அதிசயமா இவ்வளவு பெரிய வெங்காயம் என்று அதிசயித்திருக்கிறேன்!

வியாழன், கல்கி வரும் நாள்! ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்!

இன்னொரு மறக்க முடியாத நினைவு!

சந்தைக்கு சந்தை தவறாமல், கண் தெரியாதப் பிச்சைக்காரர் ஒருவர் தெருவில் பாட்டுப் பாடிப் பிச்சைக் கேட்பார்!

காச்சனீ முத்துக் கருப்பங்களா!
கரும வாதனையில் உழன்றேன்!


(காசினியில் முத்துக்கருப்பஙளே! நான் கரும வாதனையில் உழல்கிறேன்!)

அடுத்து தன் வயிற்றில் அடித்துக் கொண்டு,

"ஒத்துருனாச்சும், ஆணைப் பெண்ணைப் பெத்த புண்ணியரே! ஒரு காச்சுனாச்சும் போடுங்கய்யா! அம்மா!"

வாசலில் தெருவில் காணும் காட்சி!

சந்தையிலிருந்து வரும் மக்கள் அவருக்குத் தின்பண்டமாக அவித்தக் கிழங்கு போன்றவை தருவார்கள்! காசுகளும் போடுவார்கள்! எங்கள் வீட்டிலும் அவருக்குக் காசுகள் தருவோம்!

சந்தைன்னு நினைத்தாலே, அந்த பிச்சைக்காரர் நினைவு வரும்!

பிறகு என்ன ஆனர் தெரியவில்லை!

Monday, 8 March, 2010

பெண் !
"அம்மா! ராத்திரி நான் தூங்கும்போதும் வீட்டுவேலைன்னு எங்கிட்ட படுத்துக்க மாட்டே!

காலையிலும் வேலைன்னு நான் முழிச்சுக்கும்போது, பக்கத்துலே இருக்க மாட்டே!"

இது ஒரு பெண் குழந்தையின் புலம்பல்!

"ஷூவை இப்படி போட்டுண்டு, நாடாவை இப்படி கட்டு!" என்று ஜாடையில் சொல்லித் தரும் அம்மா!

நான்கு வயதுக் குழந்தைக்கு அம்மா கிடைக்க மாட்டாள்!

அப்போதெல்லாம் பெரியவர்களுக்காக (அம்மா) மடியாய், ஆசாரத்துடன் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்!

வேலைக்குப் போகும் அம்மாதான் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை என்று இல்லை!

வீட்டில் இருக்கும் அம்மாவும் குழந்தைகளுக்குக் கிடைப்பது கஷ்டம் என்று அப்போது இருந்த காலம் உண்டு!பெண் என்பவள் தாயாய், மனைவியாய், சகோதரியாய், மகளாய் வாழ்ந்து சகாப்தம் படைத்திடுவாள்!

பெண்மை, அன்பில் ஒளிர்கின்றது!

பெண்மை பொறுமையில் மிளிர்கின்றது!

இன்றைய பெண்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையைக் கொள்ள வேண்டும்!

அதனால் உயர்வே அன்றி தாழ்வு வாராது!இன்றைய ஆண்கள் பெண்களுக்கு விட்டுக் கொடுக்கின்றனர்!

இரு கண்களாக ஆணும், பெண்ணும் அனுசரணையாய் வாழ்வதுதான் நிறைந்த வாழ்வாகும்!

பெண்ணின் பெருமையே பெருமை!

தனித்துவம் வாய்ந்து உயர்வினில் வளர்வது!!

பெண், குடும்பத்தை அரவணைத்து அன்பு செலுத்துவாள்!

குடும்பத்தில் அவளுக்கென இருக்கும் இடத்தை, யாராலும் நிரப்பிவிட முடியாது!

அவளுக்கு நிகர் அவளே!

இன்றைய நாகரீக உலகினில், பெண், ஆணுக்கு நிகராய் வானில் பறந்து, மண்ணில் அலைந்து வீடு காத்து, நாடும் காக்கின்றாள்!

"பெண்மை வெல்க!" என வாழ்த்துவோம்!

Tuesday, 2 March, 2010

கண்ணன் குழல் அமுதம்-- 2.

கண்ணன் வேய்ங்குழல் ஊதற்சிறப்பு!
=================================

கண்ணனின் குழலிசை அமுதப் பிரவாகமாய் வழிகிறது!

உயிரினங்கள் எல்லாம் அந்த இசையில் கட்டுண்டு எப்படியெல்லாம் காட்சி அளிக்கின்றன!

பறவைகள் தன் கூடுதுறந்து தரையின்மீது கிடக்கின்றன ! கறவைகள் கால்பரப்பி, தலை தாழ்ந்து செவியாட்டாமல் அப்படியே நிற்கின்றன!

மருண்டமான்கள் மேய்தலை மறந்து,வாயிலுள்ள புல் கடைவாய் வழியாய் வெளியே நழுவும்படியாகத் தன்னை மறந்து, இருக்கும் நிலை, வரைந்த ஓவியங்களாய் அசையாதச் சித்திரங்களாய்க் காண்கின்றன!

என்னென்பது குழல்வழி அமுதகீதம்! யாதவக்கண்ணனின் கருணைநிறைந்த லீலையன்றோ?

குழலிசையில் உயிரினங்கள் எல்லாம் தன்நிலை மறந்து இருக்கும்போது மனிதராகிய நாம் எம்மாத்திரம்?

வண்டினம் சூழ்ந்த தாமரை போல சுருண்டுருண்ட குழல் சூழ்ந்த முகமலரோன், முகில்வண்ணன் சிறு வியர்வைத் துளிர்க்கும்படியான புருவங்கள் கூட, சிவந்த கண்கள் செருக
குழலின் துளைகளைச் சிறுவிரல்களால் தடவி குழலூதும் போது, குவியும் செவ்விதழின் அழகு போன்ற அற்புதக் காட்சிகளும், உயிரினங்களின் தன்னை மறந்த நிலைகளும் எழுதியச் சித்திரமாய்ப் படைத்து நமக்கு அளித்த பெரியாழ்வார் அனுபவித்ததை நமக்குப் பாடல்களாக
அளித்து அருளிச்செய்துள்ளார்!

நாம் இப்பாடல்களைப் படித்து உணர்ந்து, அனுபவித்து உய்வோமாக!

பாடல்கள் இதோ:

சிறுவிரல் கள் தடவிப் பறிமாறச்
..செங்கண் கோடச் செய்ய வாய்க்கொப் பளிக்க
குறுவெயர்ப் புருவம் கூட லிப்பக்
..கோவிந்தன் குழல் கொடூதி யபோது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
..வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால்ப ரப்பிட்டுக்
..கவிழ்ந்திறங்கிச் செவியாட்டகில் லாவே!

திரண்டெ ழுதழை மழைமுகில் வண்னன்
..செங்க மலர்சூழ் வண்டினம் போலே
சுருண்டி ருண்ட குழல்தாழ்ந்த முகத்தான்
..ஊது கின்ற குழலோசை வழியே
மருண்டு மான்கணங்கள் மேய்கை மறந்து
..மேய்ந்த புல்லும் கடைவாய் வழிசோர
இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா
..எழுதுசித் திரங்கள் போல நின்றனவே !

Friday, 26 February, 2010

கண்ணன் குழல் அமுதம்!

இப்பாடலை ஒருதரம் படித்தேன்.

அந்த கோகுலத்திற்கேச் சென்று விட்டேன்!

நான் அனுபவித்த இன்பத்தை நீங்களும் அனுபவியுங்களேன்.

பெரியாழ்வார் மிக அற்புதமாக, கண்ணன் குழல் ஊதும் அழகை, கீத இசையை
மனம் கிறங்கிட அனுபவித்துக் கூறுகிறார்.

கண்ணனின் கண்களைப் பார்க்கிறார்! வியந்து பேசுகிறார்! "செம்பெருந்தடங்கண்ணன்!"

அவர் பார்வை தோளழகில் விழுகிறது!

கம்பன் சொன்னானே! "தோள் கண்டார் தோளேகண்டார்!" என்பது போல பெரியாழ்வர் "திரள் தோளன்" என்று கண்ணனின் புஜ பல பராக்கிரமத்தைப் பேசுகிறார்!

யசோதையின் மழலையாய், வளர்ந்து, பல அற்புதங்களை கோகுலத்தில் நிகழ்த்தி யாவர்
மனத்தையும் கொள்ளைக் கொண்ட யாதவச் சிறுவன்.

யசோதையும், பரந்தாமனைக் கொஞ்சி, குலவி, மிரட்டி, கயிற்றில் கட்டி வாய் பொத்திக் கெஞ்ச வைத்து, இன்னும் இன்னும் நிறைய அவனைக் கொண்டாடியிருக்கிறாள் !

பாவம் ! தேவகி!

கண்ணனின் விளையாடல்களைப் பக்கத்தில் இருந்து அனுபவித்தவளில்லை!

தேவகியின் மணிவயிற்றில் உதித்த பிள்ளையல்லவா?

பெரியாழ்வார் சொல்கிறார் "தேவகி சிறுவன் ...."

இன்னும் சொல்கிறார் 'தேவர்கள் சிங்கம்"

ஆம். நரசிம்மமாய் அவதரித்து, இரண்யனைக் கொன்று, பிரஹ்லாதனுக்கு அருளிய
"நரசிங்கமல்லவா அவன்!

இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டே போவதில் மனம் திருப்தி அடையவில்லையாம்!

"நம் பரமன்" அப்பாடா!

இப்பொழுது பெரியாழ்வாருக்கு உவகைப் பெருகுகிறது!

ஆமாம்...கண்ணனின் குழலூதும் அழகைப் பருக வந்துவிட்டு, அவனழகில் உருகி நின்றால் எப்படி?

வாருங்கள்! பெரியாழ்வார் கூறுகிறார்! கேட்போம்:

கண்ணனின் குழலிசைக் கேட்டவரெல்லாம் தவித்தனர்!

அமுத மய கீதமென்னும் கீத வலையில் சிக்குண்டு, வானவெளியில் இயங்கும்
கந்தர்வர்கள், மயங்கி நிலைகுலைந்தனராம்!

கந்தருவர் என்ன? நாமும் அந்த குழலிசை மயக்கத்தில் இருக்கிறோம்!

பெரியாழ்வார் திருமொழி.
====================

கண்ணன் வேய்ங்குழலூதற் சிறப்பு.

செம்பெருந் தடங்கண் ணன் திரள் தோளன்
..தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம்பர மன் இந் நாள்குழ லூதக்
...கேட்ட வர்கள் இடருற் ரன கேளீர்
அம்பரந் திரியும் காந்தப் பரெல்லாம்
...அமுத கீத வலையால் சுருக்குண்டு
நம்பர மன்றென்று நாணி மயங்கி
...நைந்து சோர்ந்து கைமறித்து நின்றனரே.

Tuesday, 2 February, 2010

"டஸன் டெக்கான்!"

உஷாவுக்கு அப்போது ஆறுவயதுன்னு நினைக்கிறேன்!
சின்னவன் திலீபுக்கு மூன்றுவயது!
ஒருதடவை என் நாத்தனார் பிள்ளை எங்கவீட்டுக்கு
வந்திருந்தான்.கையில் இருந்த சாக்லெட் டப்பாவை
திலீபுவிடம் கொடுத்தான்.
குழந்தை என்னிடம் கொடுத்தான்!நான் அதை அறையில்,
பலகை மேலே வைத்து விட்டேன்!
ஊர்விஷயங்களெல்லாம் பேசினோம்,அந்தப்
பிள்ளை குளித்து விட்டு, உணவருந்தி விட்டு,
கூடத்தில் பாயில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டு
அப்படியே உறங்கிப் போனான்!
அன்று இரவே ஊருக்குக் கிளம்பி விட்டான்!
அந்த சாக்லெட் டப்பா நினைவு வந்தது!
பாவம்! குழந்தைகள்! ஆசையாகச் சாக்லெட் தின்ன
காத்திண்டிருக்குமே!...ன்னு தோன்றியது!
உள்ளே போனால்...!!
அங்கே திலீப்'ஓ'வென்று அழறான்!
அதற்குள் உஷாவே வேகமாக என்னிடம் வந்து,
"அம்மா! சாக்லெட் திங்கணும் .னு ரொம்ப
ஆசையா இருந்துதும்மா!
நீயும் தரமாட்டேங்கறே!
அதான் நான் ஒரு சாக்லெட் திங்கப்
போகும்போது
இவன் வந்துட்டான்!இவனுக்கும் தந்தேன்மா!"

இப்பொ திலீப்,
"அம்மா!இவோ சாக்லெட்டை கல்லாலே ஒடச்சு ஒடச்சு
எனக்குக் கொஞ்சூன்டு! அவளுக்கு நெறயா எடுத்துக்கறா அம்மா!
ஓவென்று ஒரே அழுகை!
(பெரியவன் குமார் சாது!சமத்து!இந்த வம்புக்கே வரவில்லை!)

'அழாதெடாக் கண்ணு!!உஷா!டப்பாவைக் கொண்டா!
உஷா சாக்லெட் டப்பாவை என்னிடம் கொடுக்கின்றாள்1
திறந்து பார்த்தேன்!
கணிசமாக் கொறஞ்சு இருந்தது!
எவ்வளவு சாக்லெட் தின்றீர்கள் ரெண்டு பேரும்?
உஷா சொல்றா:அங்கே பக்கத்துல இருக்கிற ஸ்டூல இழுத்துண்டு வந்து,மேலே
அங்கே சுவரோரமா மரப் பெட்டி ஒன்று இருக்கும்!
"அம்மா! டெக்கான்(சாக்லெட் பேரு!)சாக்லெட்டுலே
சுத்தியிருந்த பேபர்லாம் இங்கதான் போட்டேன்மா!"இது உஷா.
மரப்பொட்டி சந்துல பன்னிரெண்டு சாக்லெட் பேபர் கிடந்தன!
பசங்களுக்குத் தெரிஞ்சி
அதுக்கப்புறம் உஷாவை "டஸன் டெக்கான்!"என்று கிண்டலடிக்க,
அவள் அழ ஒரே அமர்க்களம்தான்!

ஆனால்,பாவம் உஷா! டெக்கான்சாக்லெட்டை எடுக்க,
ஒவ்வொரு தடவையும் ஸ்டூல் மேல ஏறி,
டப்பாலேர்ந்து ஒருசாக்லெட் எடுத்து
கீழே இறங்கி(கூடவே திலீப் தயாரா இருப்பான்!)
முழுசு முழுசா ஆளுக்கொரு சாக்லெட்டுன்னு
திங்கத் தெரியலையே!
இதுல சத்தமில்லாம சாக்லெட்ட
கல்லுல ஒடைக்கிற கஷ்டம் வேற!
ஒடச்சு ஒடச்சே கஷ்டப் பட்டே 12 டெக்கான் சாக்லெட்டும்
தின்ற ரெண்டு குழந்தைகளின் பேதமையும்
மனசுக்கு வருத்தமா இருந்தது!
பகிர்ந்து தின்னும் குணம் பாராட்ட வேண்டும்!
உஷாவைப் ஒரு விஷயத்துக்குப் பாராட்டனும்!
அவளுக்கு எது திங்கக் கிடைத்தாலும்
எங்க எல்லாருக்கும் கொடுத்துத் தானும் தின்பாள்!
நல்லகுணம்!

Friday, 15 January, 2010

பொங்கலோ பொங்கல்!

மண்ணுக்கும், விண்ணிருந்து புவி காக்கும் சூரியனுக்கும், உழைக்கும் மாடுகளுக்கும், உயர்வான உழவுக்கும், பயிர் வளர்த்து உயிர் அளிக்கும் உழவர் பெருமக்களுக்கும் நன்றி சொல்லிப் பணியும் விழாதான் இப்பொங்கல் திருவிழா!

பொங்கல் நாளில், புது மண் அடுப்பில் ஏற்றிய புத்தம்புதுக் கோலப் பானையில், கட்டியக் கொத்து மஞ்சளுடன், புத்தரிசி, பாகு வெல்லம், ஏலம் மணக்க, புத்துருக்கு நெய்யூற்றி, கட்டுக் கரும்பும், பக்கத்தில் சாத்தி வைத்து, மனமெல்லாம் மணக்க,வாழ்வெல்லாம் மணக்க ஏழையர் வாழ்வினிக்க இறைவனருள் வேண்டியே "பொங்குக பொங்கல்! பொங்கலோ பொங்கல்" என்று கூடியேக் கூவிடுவோம்!

விவசாயத்தில் பெண்களின் நிலை கூறி, அவர்களின் உயர்வு கூறும் 'கோடுகளும், கோலங்களும்' என்னும் நாவலை அளித்த, திருமதி. ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றி!

பெண்ணுயர்வுக்குத் தலை வணங்குவோம்!

பள்ளி நாட்கள், சிறு வயதினில், கும்மிப் பாடல் ஒன்று...

அப்போது அதன்பொருள் விளங்காமலே பாடிக் கும்மிக் கொட்டியிருக்கேன்!

அந்தப் பாடல் அருமையான படல்! ஒரு சிறிதே நினைவில் இருக்கிறது!

'அறிகுவமே! அறிகுவமே!
அமுதின் சரிதமிதை அறிகுவமே!

நிலம் உழுது நன்றாய் நீர்ப் பாய்ச்சி
பறம்படித்து நன்றாய் பண்படுத்தி
பலவித நெல்மணிகளைத் தெளிக்க'


............. (மறந்து விட்டது)


பொங்கல் நாளில் மனிதம் மலிந்து, தீவிரம் மறைந்துவிடக் கோருவோம்!

அன்பே தெய்வம்! அன்பே செய்வோம்!