Friday 28 November, 2008

குடையால் வந்த குடைச்சல்..!

அது ஒரு மழைக் காலம்..

மெட்ராஸ் .. இப்போதைய சிங்கார chennai..

ஒரு கொட்டும் மழை காலை..

கரண்ட் இல்லாததால்.. transister ம் காதுமா எல்லாரும் வானிலை அறிக்கை கேட்டுண்டு leave announcement வராதானு ஏங்க..

மழையினால் மனமிரங்கா மாநில அரசு மெளனம் சாதிக்க..

எல்லாரும் அவரவர் தொழிலை அடாது மழையிலும் விடாது கவனிக்க வேண்டிய கட்டாயம்..

நமக்கு மழையில் school போறதுனா ஒரு தனி குஷி தான்..

almirahல அழகாய் மடிச்சிருந்த raincoat .."எனக்கும் மழையில் நனைய ஒரு chance கொடேன்" னு என்னை பார்த்து ஏக்கமாய் பார்க்க ..

நானோ .நேற்று பெய்த மழையில் முளைத்த..

பூ போட்ட குடையை எடுத்துண்டு விட்டேன் ஜீட் ஸ்கூலுக்கு..

என் சித்தி ஆசையாய் வாங்கின குடை என்பதால்.. பய பக்தியோட .. ஒதுக்குபுறமா ஒரு இடத்தில் விரித்து விட்டு.. ஓடினேன்.. classroom..

சாயந்திரம் school பெல் அடிச்சதும் தேடினேன்.. தேடினேன்.. என் புது குடையை..கிடைச்சாதானே..

"போனால் போகட்டும் போடா" னு மனசை தேத்தினாலும் ..

வீடு வர வர.. வயிற்றில் ஒரே புளி கரைப்பு தான்..

நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் ..குடை பற்றி புலன் விசாரணை பண்ண..

என் சித்தி ஸ்கூல் வந்து டீச்சரை சந்திக்க ஒரு மனதா முடிவானது..

அடுத்த நாள்.. கடங்காரன் ஒண்ணாம் தேதி ஆபிஸ் வாசலில் நிக்கிற மாதிரி..

சித்தி ஆஜர்..classroom வாசலில்..

"class teacher தேடி நான் ஓட....

corridor ல் என் teacher வர..

என் சித்தி .. "ஷீலா எப்படிடி இருக்கே"னு கேட்க..(ஷீலா.. என் teacher பேரு)

பிரிந்த நண்பிகள் ஒன்று கூடிய அந்த நேரம்..

கும்மி அடிக்க ஆரம்பித்ததில் .. என் சித்தி குடை பற்றி மறக்க..நமக்கு ஒரே கொண்டாட்டம்தான்..

எங்க சித்தி ஒரு over enthusiasm ல "ஷீலா..sunday வீட்டுக்கு வாயேன்"னு address கொடுக்க..

என் நண்பிகள் எல்லாம் என்னை பொறாமைல பார்க்க..

அந்த sundayம் வந்தது..

calling bell அடிக்க ..கதவின் பின்னே.. class teacher..

வீட்டில ஒரே உபசாரம்..

ஆனா.. "sunday வரும் பின்னே.. ஷிலா வருவாள் முன்னேனு" டீச்சர் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ஆஜர் ஆக..

"அந்த நடுங்கும் ஞாயிறுகள்"னு டப்பிங் படமே எடுத்துடலாம்..

எத்தனை சுதந்திரம் இழந்த Sundays..(டீச்சர் கிட்டே நல்ல பேர் வாங்கணுமேனு தான்!!!!!!!)

இப்படியாக..குடை பிடிக்க குடைச்சல் வந்த காலமது..

ஆனா.. அந்த டீச்சரை இன்னும் மறக்காம இருக்க காரணம் ஒண்ணு உண்டு..

அதை தெரிஞ்சிக்கணுமா..?

கொஞ்சம் wait பண்ணுங்கோ..
.

அன்புடன்
அகிலா

Monday 24 November, 2008

Boost is the Secret of My சமையல் !

காவேரி கரை வாசம் விட்டு.. கூவம் வாசத்திற்கு பழக ஆரம்பிச்ச நாட்கள்..

எல்லாம் புதுசு.. வீடு புதுசு.. school புதுசு.. teacher புதுசு..

எல்லாத்தையும் விட.. தனிமை புதுசு..

school விட்டு வந்தா.. பூட்டு தான் வரவேற்கும்..

அம்மா அப்பா.. வேலைக்கு பார்த்துகொண்டு இருந்ததால்..

அம்மா..பாவம்..

காலையிலே evening tiffin முதற்கொண்டு டப்பால போட்டு வெச்சுட்டு போய்டுவா..

சாயந்தரம் school விட்டு வந்ததும் .. ஆறிப்போன இட்லியும், துவண்டு போன தோசையும்.. என்னை பார்த்து.. ஐயோ பாவம்னு சொல்லும்..

house owner aunty தான் என்னோட care taker ..

ரொம்ப அன்பானவள்..

இப்படி நாட்கள் வீட்டுகார அம்மாகாரு..(தெலுங்கு மாமி.. அதான் அப்படி சொன்னென்)புண்ணியத்தில..ஒட....

ஒரு நாள்..எங்க அம்மாகிட்டெ.. "நாளைலேர்ந்து உங்க பொண்ணுக்கு நானே boost கல்ந்து தரேன்னு அறிக்கை விட்டா..

அன்னிக்கு அம்மாவுக்கு தாங்க முடியாத சந்தோஷம்..

"எத்தனை நல்ல மனுஷி .. இருந்தா மாமி மாதிரி இருக்கணும்னு.".

அங்கே இருந்த ஒன்பது குடித்தன காரர்களும்.. புகழ் மாலை போட..

அடுத்த நாள் நானும்.. ஆவலாய்.. school விட்டதும்.. boost தேடி ஓட..

மூலையிலே பத்திரமா மூடி வெச்ச tumbler காண்பிச்சா.. சுந்தரத் தெலுங்காள்.

குடிக்க ஆரம்பிச்சேன்..

முதல்ல.. பால் மட்டும் வந்தது..

(அம்மா.. boost bottle குடுக்க மறந்து போய்ட்ட போல இருக்குனு நினச்சேன்)

ஒரு ரெண்டு முழுங்கு குடிச்சு முடிச்சதும்.. ஏதோ கட்டி வந்து தொண்டையை அடச்சது..chocolate வாசத்துடன்..

பாலோட சேராத அந்த boost ஐ கற கறனு தின்னு முடிச்சு, பேந்த பேந்த விழிச்ச வேளையில்...

அடுத்து ஒரு கற முற item tumbler அடியிலேர்ந்து வந்தது..

அது வேற ஒன்னுமில்ல..சக்கரை தான்.

இப்படி தோண்டத் தோண்ட பிச்சைகாரன் பாத்திரம் போல..

ஒன்னோடு ஒண்ணு ஒட்டாமல்.. ஒவ்வொன்றாய் என் வயிற்றில் இறங்க..

ஐயோ.. பட்ட பாடு.. அய்யா சாமி..

இன்னி வரைக்கும் நெஞ்சை விட்டு அகலாத ஒரு சுவை

இப்படியொரு பானகம் இது வரை யாருமே குடிச்சு இருக்க முடியாது..

இப்படி boost ஆசை புஸ்வாணமாய் போச்சு..

ஆனா மாமி கிட்டே ரொம்ப super ஆ இருந்ததுனு சொல்லிட்டென்..

அம்மா வந்ததும் சொன்னென்..நான் பட்ட கஷ்டத்தை .....

"உனக்கு நாக்கு ரொம்ப நீளம் "னு சொல்லி topic full stop வெச்சுட்டா..

இது ஒரு தொடர் கதையா போச்சு..

ஆனா..இந்த boost சகாப்தம் தான் என்னை சமையல் கட்டுக்குள் சீக்கிரம் நுழைய வைத்தது..

பங்காரு அம்மா எனக்கு ஒரு வழிகாட்டி..

எப்படினா..எங்கிருந்தோ வந்த எனக்கு அன்பு காட்டின பெருந்தன்மை....

தனக்கு நன்னா செய்ய தெரியாட்டியும்.. நல்லது செய்யனும் என்கிற மனசு..

(boost போட தெரியாட்டியும்.. school விட்டு வரும் குழந்தையின் தாகம் தீர்க்கும் அந்த எண்ணம்)

ஆனா நான் கத்து கொண்ட பாடமே வேற......என்ன தெரியுமா???

'நல்லது செய்யனும்னு நினச்சா....அதை நன்றாக செய்.."

"மற்றவர்களுக்காக ஒண்ணு செய்யும்போது நீ செய்த வேலை உனக்கு முதலில் திருப்தி தரதானு உன்னையே ஒரு தரம் கேட்டுப் பார்"..

சரியா நான் சொல்றது ?

அன்புடன்
அகிலா

Saturday 22 November, 2008

வெங்குவின் பெட்டிக் கடை!

அந்த ஆரம்ப நாட்களின் நினைவுகளில் ஒன்று 'வெங்குக் கடை'.

அருணாசலம் 'ஜலம் மாமா' வாகவும், செல்லமணி 'மாமா''வாகவும் லக்ஷ்மி நாராயணன் 'அம்பி'மாமாவாகவும் ஆன போதிலும் வெங்கடேசன் மற்றும் 'வெங்கு' தான்.

மாமா என்ற விகுதி பெறாததற்கு காரணம், எந்தக் குழந்தையையும் கவரும் சிரிப்புடனான 'வளர்ந்த மழலை' யும் நூறு நூறு கதை சொல்ல தேவைப்படும் 'குழந்தைத்தனமான கற்பனையும்'

என் வயதுக் குழந்தைகளின் நண்பனாக அடையாளம் காட்டியதே தவிர 'மிரட்டும் மாமா' வாக அன்று.

எனவே நேற்றுப் பிறந்த 'வக்கீலாத்து' காயத்ரி முதல் வளர்ந்த 'வாசு' வரை எல்லோருக்கும் 'வெங்கு' தான்.

வீட்டு வேலையெல்லாம் 'மங்கு மங்கென்று' செய்ய சலிக்காத மனிதர்.

மற்ற நேரத்தில், தெரிந்த மந்திரத்தில் தெரிந்த உச்சரிப்பில் 'பூணூல்' போட்ட ஒரே காரணத்தால் கடவுள் மன்னிப்பாரென்ற ஒரே தைரியத்தில் சுற்றுப் பட்ட கிராமத்திற்கெல்லாம் 'புரோகிதர்' ஆக ஒரு அவதாரம்.

வளர்ந்த வயதில் கண் சரியாகத் தெரியாத வெங்குவை நான் சைக்கிளில் குருக்கப்பட்டி என்ற குக்கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள குக்குக்குக்குக் கிராமத்திற்கு (ஒரு சாவிற்காக) ஒட்டிச் சென்றதை மட்டுமே 'ஷ்யாம் பெனெகல்' ஸ்டைலில் ஒரு சினிமா எடுக்கலாம்!

தனக்கே உண்டான பாணியில் அவர் சொல்லும் கதைகளைக் கேட்பதென்பது ஒவ்வொரு தெவச மத்யானங்களின் சிறப்பம்சம்!

'வெங்கு வெங்கு ஒரு கதை சொல்லேன்' என்று நச்சும் குழந்தைகளுக்கு மத்தியில் ஒரு 'கேண்டால்F-ஆக அவர்!

பாட்டி வடை பண்ணும் கதையில் ஒரு சமையல் குறிப்பே நடந்து விடும்.

நன்கு சாப்பிட்ட பின்னும் பசியெடுக்கும் அந்த வடைக்கு.

ஆனால் பாட்டி வடையோடு நிறுத்த மாட்டாள்!

ஜிலெபி ஜாங்கிரி என்று பலப்பல பலகாரங்கள்!

சில நேரத்தில் காக்காய் வராமலேயே கதை முடிந்து அலிபாபா திடீர் விஜயம் செய்வார்!

வாரத்தில் ஒரு நாள் தவறாமல் செல்லும் மேட்டினீ ஷோ பலனாக (இரவில் கண் சரியாகத் தெரியாது) பல திரைக்கதை இயக்குனர் ரீதியில் ஒரு புகைப்படமாகவே கதை சொல்லும் திறன் அசத்தும்.



இந்த வெங்குவின் கடையில் என் நினைவில் இருப்பது கலர் கலாராய் இருக்கும் ஒரு பைசா மிட்டாய்.

மைதா மாவினாலான இனிப்பு உருண்டைகள் என்று நினைக்கிறேன்.

வீட்டில் இரண்டு பைசா கிடைத்த மாத்திரத்திலேயே தோட்டத்தின் இடப்பக்கமாக இருக்கும் 'இடைக்கதவு' வழியாக ஓடி கடை பின் பக்கமாய் நுழைந்து இருட்டில் சரியாகக் கண் தெரியாத வெங்கு கண்டு பிடிக்கும் முன்பாகவே மூன்று மிட்டாய்களை எடுத்துக் கொண்டு ' இந்தா வெங்கு இரண்டு மிட்டாய்க்கு காசு' என்று எப்போதோ ஏமாத்தியது இப்பொது மன வேதனையுடன் கூச வைக்கிறது!

சில வருடங்களுக்கு முன்னால் முதிர்ந்த வெங்குவிடம் இதைச் சொன்னேன்; சிரித்தார்.(புகைப்படம் மேலே)

பக்கத்துக் கடையில் க்ஷவரம் (ஆஹா!என்ன ஒரு வார்த்தை! நாவிதமும் அம்பட்டமும் இதற்கு ஈடாகுமா?) பண்ணிக் கொள்ள வரும் 'பெரிய' மனிதர்கள் வெங்கு கடையில் இல்லாத போது கேட்கும் 'Passing Show, Charminar, Scissors' போன்ற சிகரெட்டுக்களை எடுத்து கொடுத்து சரியான சில்லரை கொடுக்கும் பெரிய பொறுப்பு பின்னாளில் என் மேல் விழுந்ததுண்டு!

அப்போதெல்லாம் என்னவோ ஒரு பெரிய ஆஸ்தானத்துக்கே அதிபதி போல் உணர்வேன்! ஒரு பெரிய தொழிலதிபருக்கு உண்டான 'கெத்தோடு' 'பணத்தை' டீல் செய்வேன்.



அரிசி மில்லிற்கும் எங்களது வீட்டுக்கும் இடையிலான இடத்தை யாருடைய கல்யாணத்திற்காகவோ 'மிராசுதார்' TLV தாத்தா விற்ற பின் வெங்கு கடை சகாப்தம் முடிந்தது.

மேலே உள்ள புகைப்படத்தில் என் பின்னாலுள்ள (உலகப்போர் வெடிகுண்டு விழுந்தது போல் உள்ள) இடம் தான் வெங்குக்கடை!

கடிதமோ? உள்ளமோ? -3

தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் தன் புதல்வி லக்ஷ்மிக்கு எழுதிய கடிதங்களும்,

நேருஜி அவர்கள் தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களும் பிரசித்திப் பெற்ற நூல்களாகும்.

அனைவரும் படிக்க வேண்டியவை.

கடிதங்கள் வரலாறுபோல் காலத்தை, நிகழ்வுகளை, வாழ்வியல் நடைமுறைகளை உணர்த்துகின்றன.

"இன்னும் இரண்டே வரி!" என்ற கதை போன்ற செய்தி ராணுவக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் உணர முடியும்.

சிறு வயதில் படித்தது.

போர்ப் பாசறையில், ஆணையை மீறி மெழுகுவர்த்தி ஒளியில்

போர் வீரன் ஒருவன் தன் மனைவிக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறான்...

அருகில் ஒரு குரல் "இன்னும் இரண்டு வரி!" எழுது!

"இக்கடிதம் உன்கைக்கு வரும்போது நான் பிணமாகியிருப்பேன்!"

திரும்பவும் திரைக் காட்சியில், கடிதங்கள் பற்றி நிறைய அறியக் கிடைக்கின்றன!

"கிழக்கே போகும் ரயில்" திரைப் படத்தில், காதலர் பரிமாறிக் கொள்ளும் கடிதம்...

ரயிலின் பின்பக்கம்! பாரதிராஜாவின் புதுமைக் கற்பனை!

"குணா" திரைப் படத்தில், காதலன் வசனமாகச் சொல்வதை அழகிய கவிதையாய், காதலி எழுதிப் பாடலாய்ப் பாடுவது கேட்டு ரசிக்கலாம்!

இன்று ஈ-மெயில், எஸ் எம் எஸ் மூலமாக எல்லாவித பரிமாணத்திலும் கடிதங்கள்
அதி துரிதமாகச் செயல் படுகின்றன!

என்ன இருந்தாலும் கைப்பட எழுதும் சொந்தங்களின், நட்புகளின் கடிதங்களுக்கு இணை சொல்ல முடியுமா?

தங்கமணி

Thursday 20 November, 2008

வாத நாராயண மரத்து 'ஒடக்காண்'



என் குழந்தைப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கையில் தாரமங்கலமென்ற கிராமத்தைப் பற்றியும் அதன் 1970 களின் வாழ்க்கையைப் பற்றியும் எழுத வெண்டியதாகிறது.

எனக்குத் தெரிந்த 'தாரை மா நகர்' என்பது ஒரு சிறிய கிராமம்.

வயல் வெளிகளும் தென்னைத் தோப்புகளும் நிறைந்த பசுமையான இடங்களைத் தவிர சிறிதும் பெரிதுமான சில நூறு வீடுகளையும் ஒரு பெரிய கோவிலையும் மையத்தில் கொண்ட ஒரு அழகான கிராமம்.

(3 டாக்டர்களும் 2 மருந்து கடைகளும் 3 பள்ளிக் கூடங்களும் ஒரு சினிமா கொட்டகையும் கிராம வாழ்க்கையின் அடையாள நிதர்சனங்கள்.)

ஸன்னதி தெரு, அக்ரஹாரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகே எங்கள் வீடு.

எனது 17 வருட வாழ்க்கையிலேயே அந்த வீட்டில் நிறைய மாற்றங்கள்.

மூன்று தென்னை மரங்கள் தேன் கூட்டைக் கலைக்க வைத்த நெருப்பு சாகஸத்தில் இரண்டானது;

முதலியாருக்கு வீட்டின் முன் பகுதியை விற்றபின் வெங்கு மாமாவின் கடையடைத்தது,

பிறகு விற்ற பகுதிக்கு அடையாளமாக எழுப்ப பட்ட என் இடுப்புயர சுவற்றின் மீது நடந்து போன நாட்கள்...

பின் மழை பெய்து மண் கரைந்து போய் அந்த சுவர் என் காலுயரமானது...

நினைத்துப் பார்க்கையில் மழையினாலா அல்லது நான் உயரமானதாலா என்ற குழப்பம் இப்போது.

தென்னை மரங்களுடன் படர்ந்து வளர்ந்த ஒரு வாத நாராயண மரமும் அதில் வசித்த ஒரு 'ஒடக்காண்' குடும்பமும் என் மனதில் இன்றும் பசுமையாக.

(ஓணான் என்றால் 'ஒட்டகம் ஓணான் ஔவையார்' என்பது போல் நல்ல தமிழ் வார்த்தையாகிவிடும். எங்கள் தாரமங்கல தமிழில் அது என்றும் 'ஒடக்காண்' தான்!)

சின்ன வயதில் அந்த ஒடக்காணுடன் நிறைய பகிர்ந்து கொண்டிருக்கிறேன்;

என் சந்தோஷங்களை, என் தோல்விகளை, என் எண்ணங்களையும் ஆசைகளையும் என் பயங்களையும் கிலேசங்களையும் ....

இப்படி எது நான் சொன்னாலும் பொறுமையாக நின்ற இடம் நகராமல் தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டிருக்கும் அது!

என் 4 வயதில் பள்ளி ஆரம்பித்த நாட்களில், டீச்சரிடம் திட்டு வாங்கினாலோ, நண்பனிடம் சண்டை போட்டாலோ, மணி படுத்தினாலோ, உஷாவிடம் தகறாரென்றாலோ...

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு விட்டு ஆமோதிக்க நல்ல ஒரு கௌன்ஸில்லர், தெரபிஸ்ட் அந்த ஒடக்காண்!

பாட்டுப் போட்டிக்கு தயார் செய்யவெண்டுமானால், ஓடு தோட்டத்துக்கு!

நல்ல மழையில் வருமே ஒரு 'மெலன்கொலி'- மனக்கிலேசமா...(அது ஒழுகும் கூரையாலா அல்லது மழை வந்தவுடன் தாத்தாவுக்கு பிடிக்கும் 'தண்ணீ பூதத்' தினாலா? அல்லது வெளியில் ஓடியாடி விளையாட முடியாதாலா?) ஒடு வாசலுக்கு..

சொட்டும் மழையில் குளிர்ச் சிலிர்ப்புடன் அந்த ஒடக்காண்.

சில வேளையில் பள்ளியிலிருந்து வீடு வந்தால் காணாமல் போய் விடும் ஒடக்காணைத் தேடி மரம் மரமாய் பார்வையை ஒட்டினால்,

மிகச் சிறந்த 'கேமோFலாஜ் ஆர்டிஸ்டாய்' கண் முன்னாலேயே மறைந்திருக்கும் அந்த நண்பனைப் பார்த்ததும் தான் நிம்மதி வரும்!

பின்னாளில் பாரதியின் கயிற்றைப் பற்றிய வசனக் கவிதையைப் புரிந்து கொள்ள முற்படுகையில் அவரது கற்பனை எனது ஐந்து ஆறு வயதுக்கான 'ஒடக்காண்' கற்பனையை நினைவூட்டியது.

- திப்பிலி.

Wednesday 19 November, 2008

நினைவோ ஒரு பறவை !

கொஞ்சம் rewind பண்ணி ஒரு 35 வருஷம் பின்னாடி போகலாமா..

காலை மணி 5:55..

vanthe maatharam..sujalaam.. sufalaam.. All India Radio la முழங்கற நேரம்..

தூங்கி கொண்டிருக்கும் எங்கள் படுக்கைகள் ஒவ்வொன்னா தாத்தா.. உருவும் நேரம்..

தரையில தடுமாறி தவக்களை போட்டு படுத்து..தோல்வியை தழுவி.. .

பாட்டி oho productions ல wholesaleல கலந்த காபி ஆறிடுமேனு..

அரக்க பரக்க அரைகுறையா பல் தேச்சுட்டு..

அந்த வீட்டில கறந்த பசும்பால்ல கலந்த filter காபியை "பேஷ் பேஷ் ரொம்ம்ப நன்னா இருக்குன்னு".. உசிலமணி styleல.. ஒரு இழு இழுக்கிற சொகம் இருக்கே..

ஆஹா.. தேவாமிர்தம்தான்..

இப்படியாக queue நின்னு(வீட்டில டிக்கெட் ஜாஸ்தி ஆச்சே)காலை கடனும், குளியலும் முடிச்சு.. ready ஆனா..

cycle rickshaw ஓட்டி ஓட்டி 'S' காலோட பெருமாள் ரிக்க்ஷாகாரர் புகையில, பொட்டு, செக்கசிவக்க பற்பசை விளம்பரத்துக்கு pose கொடுத்துண்டு நிப்பார்..

school, பாடம், படிப்பு நு இருந்தாலும்..பண்டிகை வந்தால் கொண்டாட்டம் தான்..

தீபாவளிக்கு பட்டாசு list போட்டு.. அதை வாங்கி காய வெச்சு.. பத்திரமா எடுத்து வெச்சு...

daily அத ஒரு தடவ.. கண்ணால பார்த்து சந்தோஷப்பட்டு தீபாவளிக்கு

காலம்பர சீக்கிரம் எழுந்து ஊருக்கு முன்னாடி வெடிக்கிற குஷியே தனி தான்..

அடுத்து இந்த பொங்கல் வரும் பாருங்கோ..பொங்கும் வீட்டில கும்பல்..

அதுவும் இந்த கோலம் போடறேன்னு போகி அன்னிக்கு அடிக்கிற ராக்கும்மி இருக்கே..ஆண்டவா..

என்னமோ.. switzerland ல இருக்கிற நினைப்பில.. ஒரு பெரிய scarf கட்டிண்டு..

சுத்தி சுத்தி பெரிய டிக்கெட் எல்லாம் கோலம் போட..

வாண்டுகள் நாங்க எல்லாம்... அவாளுக்கு தண்ணி கொடுத்து, கொசு அடிச்சு, முதுகு சொரிஞ்சு விட்டு..

எல்லாரும் ஒண்ணா சேர்ந்து சூரியனை வழிபட்டு, காக்கா பிடி கன்னு பிடி வெச்சு..

பொங்கல் release படத்தை.. தியேட்டரே மிரளறமாதிரி கும்பலா பார்த்த இனிமை...

இப்பொ நினச்சாலும்.. பொங்கலை விட தித்திப்பாய் இருக்கு..

Leave விட்டதும்.... தூக்கம் , TV இதே உலகம் நு காலத்தை ஓட்டற இந்த கால குழந்தைகளுக்கு..

காவேரில குளிச்சு, கவளமதை பாட்டி கையால் உருட்டி போட, கதைகள் பேசி சாப்பிட்ட காலத்தை சொன்னா..

கேட்க கூட மனசில்லாத nuclear family குழந்தைகளை நினைக்கும்போது..

இத்தனை விஷயம் இவர்கள் எல்லாரும் miss பண்றாளேனு ஒரு சின்ன வருத்தம் தான்..

குறைஞ்ச சம்பளம், கூட்டு குடும்பம்னு குட்டிகரணம் போட்டு கஷ்டப்பட்டாலும்

இத்தனை இன்பம் என் வாழ்வில் அள்ளித்தந்து..என் சின்ன வயசை சிங்காரிச்ச.. எங்க பாட்டி தாத்தாவை நான் ரொம்ப ரொம்ப miss பண்றேன்..

காலம் யாருக்காகவும் நிற்பதில்லை..

அந்த கால சக்கரத்தில் எத்தனை மனிதர்களை சந்திக்கிறோம்..

பேசறேன் அடுத்தpost ல என்னை பாதித்த மனிதர்களை பற்றி..

அன்புடன்
அகிலா

Monday 17 November, 2008

கடிதமோ ? உள்ளமோ ? - 2

"லெட்டர் மாமா" ன்னு அழைக்கும் "மல்லி" குறும்படம் "மக்கள்' தொலைக்காட்சியில் கண்டேன்!

அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!

அன்றிலிருந்து இன்றுவரை...

கடிதத்திற்கு வாழ்வில் முக்கிய இடம் உண்டு!

ஓலை, லிகிதம், மடல் என்று பல பெயர்கள் கடிதத்திற்கு உண்டு!

அரசன் தன் பெண்ணை மணம் செய்ய வேண்டிக் கேட்ட சிற்றரசனுக்கு தூதுவனிடம் "செல் அறித்த ஓலை செல்லுமோ?" என்று மேலும் கூறி மறுத்ததை கேட்டிருக்கிறோம்!

"சுகுமாரா! என் தாபம் தனைநீ அறியாயோ? மாரா!" என்று சகுந்தலை கடிதம் (பாடல்) தாமரை இலையில் எழுதுவதை படத்தில் கண்டு அறிவோம்!

கிளிக்கண்ணியில் "மாலை வடிவேலவர்க்கு ஓலை கிறுக்காச்சுதே! உள்ளமும் கிறுக்காச்சுதே!" என்னும் பாடல் கவிதை இலக்கியமாய் வளர்ந்தது!

"கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே!" என்ற பாடலும்,

" அதிகாலை, சுபவேளை, ஒரு ஓலை வந்தது!
ஒரு தத்தை, கடிதத்தை, தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க"

அன்புள்ள மான் விழியே! ஆசையில் ஓர் கடிதம்"

இப்படி நிறைய பாடல்கள் கடிதத்தைப் பற்றி சினிமாப் பாடலில் காண்கின்றன!

(தொடரும் ..)

Sunday 16 November, 2008

நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு !

அப்படி என்னை தூக்கிவாரி போட வெச்ச விஷயம்..

ஜாதகத்தில இருக்கிற கோடு கட்டம் ரொம்ப பொருந்தினது..

(10 வருஷத்துக்கபறம் தான் உண்மை தெரிஞ்சது ஒரு பெரிய ஜோசியர் மூலமா.. இது பொருந்தியே இருக்க முடியாத ஜாதகம்னு... இதுதான் ஜோசியம் என்பதா..?????)

ஜாகை, job எல்லாம்.. அப்பாக்கு ok..

ஆனா.. என்னை மிரள வெச்ச அந்த எழுத்துக்கள் இன்னமும் என் கண் முன்னே நிக்கறது..

அது என்னனா.. Tom and jerry ல கூட என்னிக்காவது ஒரு நாள் jerry மாட்டிக்கும்..

ஆனா .. நான் துரத்தி துரத்தி கத்துக்க நினச்சு என்னை விட்டு olympic தங்க பதக்கம் வாங்கற speed ல ஓடி போன.. சங்கீதம் ...

பையனோட interests என்கிற இடத்தில.. கொட்டை எழுத்தில் "LOVES MUSIC" நு கிண்டலா என்னை பார்த்து கண் சிமிட்டியது..

அட பாவமே..என்ன கொடுமை sir இது..

"அப்பா.. அந்த பையன் பாவம் பா.. என்ன மாதிரி ஒரு ஞான சூன்யத்தோட என்ன பண்ணுவார்னு கேட்டேன்.."

'கல்யாணம் சொர்க்கத்தில நிச்சயக்கபடறது .. சங்கீதத்தில இல்ல".. நு என்னை சமாளிச்சு-fy பண்ணிட்டார்.'.அப்பா..

அவரோட வார்த்தைகள் 100% right....

மனசு ஒத்துபோனா போதும்..

காடு மலை நு நாங்க எங்க சுத்தினாலும்..

(நான் எத்தனை) சண்டைகள் போட்டாலும்..

சோதனைகள் தாங்கி.. சாதிக்க நினைக்கும் நாங்க என்னிக்குமே..

Made For Each Other Couple தான்..

"சொர்க்கமே என்றாலும் நம்ம சென்னை போல வருமா.." நு பாடின காலம் போய்..

இப்போ (இமய) "மலையோரம் வீசும் காத்து" நு பாடிண்டு ..

குழந்தைகள் என்னும் வட்டத்துக்குள் சுத்தி சுத்தி வந்தாலும்..

ரொம்ப miss பண்ற விஷயம் ஒண்ணு உண்டு..

சொல்றேனே.. அதை அடுத்த post ல..

அகிலா

Friday 14 November, 2008

குழந்தைகள் தினவாழ்த்துகள்!

குழந்தைகள் தின வாழ்த்துகள்!

நேருஜியின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டது 1957, நவம்பர்-14 என நினைக்கிறேன்!

நான் அப்போது பதினோறாம் வகுப்புப் படிக்கிறேன்!

நேருஜியைப் பற்றி ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு பரிசும் வாங்கினேன்.

ஒரு ரைட்டர் பேனா!

நேற்று இரவு "மல்லி" படம் பார்த்தேன்!

மனசெல்லாம் மத்தாப்பூ! மல்லியின் தோழியாய் மாறி அவள்பின்னே சென்றேன்!

இயற்கையோடு பேசிப் பாடி வாழும் அவள் ஒரு குட்டி தேவதையோ?

தேவக் கன்னிகையோ? ஞானியோ?

"லெட்டர் மாமா"வுடனும், "குக்கூ"வுடனும் அவளுக்கு உள்ள நட்பின்,
பாசத்தின் பிணைப்பை எப்படி விளக்குவது?

அடிபட்டமானைக் காப்பாற்றும் முனைப்பிலும், ஊருக்குச் செல்லும் தோழி குக்கூவின் ஜீப்பைத் துரத்தி மூச்சுவாங்க, அந்த நீலக்கல் கோர்த்த மாலையை அவளுக்கு சூட்டி மகிழ்வதிலும், மல்லியின் திட உறுதி செயல்பாடு தெரிகின்றது!

அருமையான குழந்தைகள் படம்!

இயக்கிய சந்தோஷ் சிவன் அவர்களுக்கு மிக்க நன்றி!

வனத்தின் பசுமைகளையும், மல்லி,லெட்டர் மாமா இவர்களின் உணர்வுகளையும் புகைப்படத்தில் கொள்ளயடித்தத் திறத்தைப் புகழ வார்த்தையே இல்லை!

மல்லியாக நடித்த.. அல்ல அல்ல.. வாழ்ந்த அந்தக் குழந்தைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்!

Wednesday 12 November, 2008

என்ன சொல்லி நான் எழுத !

இப்படி மங்களம் பாடி முடிஞ்ச என் வீணை class கு மீண்டும் திறப்பு விழா தந்த பெருமை

என் friend ராஜி யோட அத்தை சரஸ்வதி மாமிக்கே போய் சேரும்..

கலை மனமும் கை மணமும் (கை மணம் ஏன்னு நீங்க கேட்கலாம்.. மாமி கல்கத்தா return..

அவா கை பட்ட dham aaloo நாள் முழுக்க சாப்பிடுண்டே இருக்கலாம்..
(north indian dish ஒரு பேரு அப்பொ கத்துண்டேன்)..

பெரிய வீணை ரெண்டும் சின்ன ஒரு வீணை ஒண்ணும் கல்யாணி மாமி கிட்டேர்ந்து விலைக்கு வாங்கி அவர் விட்ட பணியை தொடர ஆரம்பிச்சா..

எங்க சுருள் மாடி வீட்டு second floor லயே வீடு என்பதால்.. timings கிடையாது..

எப்போ மனசுக்கு தோனறதோ.. வந்து வாசிங்கோ சொல்ர.. ஒரு தங்கமான குரு..

அப்படியே.. எங்க class continue ஆகி இருந்தால் எவ்வளவு நன்னா இருந்திருக்கும்..

சரஸ்வதி மாமிக்கு சொந்த வீட்டில் போய் சுகமா வாழணும்னு ஏக்கம்..

நாங்க இருந்த வீட்டிலேர்ந்து 5 km distance ல வீடு கட்டிண்டு, வீணையும் மூட்டை கட்டிண்டு..

எங்களை மட்டும் விட்டுட்டு மாடம்பாக்கம் போய் settle ஆகிட்டா..

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போன கதை தான்..

அதவிட கொடுமை என்னடானா..

வீணை வாங்க வசதி இருந்தும்..வீட்டில் வைக்க இடம் இல்லாத ஒண்டு குடித்தனம்..

இப்படியாக.. வீணை கனவு.. வீணாய் போனது..

கையில் மிஞ்சியது.. வீணை தந்தி தந்த தழும்புகள் தான்..

மனசை விட்டு ஆறாத வடுக்கள் தான்..

சங்கீதத்துக்கு ஒரு பெரிய good bye.. சொல்லி முடிச்சாச்சு..

கொஞ்ச நாள் feelings ஆ இருந்தது..

அப்பறம்.. சங்கீததுக்கும் நமக்கும் ஸ்னானப்ராப்தி கூட இல்லாமல் போச்சு

இப்படியே.. காலம் ஓடிப் போச்சு..

எனக்கு.. வரன் பார்க்கும் படலம் ஆரம்பித்தது..

நல்ல பையன்.. ரொம்ப நல்ல குடும்பம்..

கொடுத்து வெச்சு இருக்கணும் இந்த சம்பந்தம்னு அப்பா..

ரொம்ப சந்தோஷப்பட்டு என்கிட்ட அந்த ஜாதக copy காண்பிச்சார்..

அதுல பையன் பத்தின விவரங்கள் பார்த்தேன்..

அப்பா.. எனக்கு இந்த பையன் வேண்டாம்னு அலறினேன்..

ஏன்னு தெரிஞ்சிக்கணுமா..

wait .. பண்ணுங்கோ

என் next post வரைக்கும்..

akila

Tuesday 11 November, 2008

கடிதமோ? உள்ளமோ?

"நான் அனுப்புவது கடிதம் அல்ல! உள்ளம்!" என்று கவிஞர் கூறுவது உண்மையே!

இளம் தம்பதியரும்,பெற்றோர் பிள்ளைகளும் பிரிந்து வாழும்போது பாலமாக அவர்களின் உணர்வுகளை இணைப்பது கடிதம்தானே?

கடிதங்களைக் கொணர்ந்து கொடுக்கும் தபால் ஊழியர் இவர்களுக்குத் தெய்வமாகத் தோன்றுவது வியப்பில்லையன்றோ?

தபால் ஊழியர் தொழில் உன்னதமான சேவையாகும்.

அவர்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் மக்களுடன் உறவாக வாழ்வதே சிறப்பாகும்.

வெய்யிலில் அலைந்து, கிராமங்களில் மக்களுக்கு மணியார்டர் மூலம் பணம் பட்டுவாடா செய்தல், கடிதங்களை கொடுப்பதுடன், படித்து விளக்கம் சொல்லுதல் போன்ற உதவிகளையும் செய்வர்.

சிலர், தபாலூழியரை மோர், தண்ணீர் கொடுத்து உபசரிக்கும் பண்புடையவராக இருப்பர்.

கார்டு, கவர், இன்லன்ட் லெட்டர், ஏர்மெயில் போன்றவைகள் கடிதம் எழுத உபயோகத்தில் இருந்தன.

"தந்தி" என்பது சாவு போன்ற செய்திகளுக்கென்று நினைத்து பயப்படும் மக்கள் உண்டு.

திருமண வாழ்த்துப் போன்றவற்றிற்கும் "தந்தி" உபயோகத்தில் இருந்தது.

எங்கள் கிராமத்தில் காலை எட்டு மணிக்கு தபால் அலுவலகம் முன்பு மக்கள் கூடி அங்கேயே தபாலைப் பெற்றுச் செல்வதுமுண்டு.

வேலை கிடைக்க, காலேஜ் ஸீட் கிடைக்க, பிள்ளையிடமிருந்து (மணியார்டர் கிடைக்க, பணமோ, அவன் வரவைக் குறித்தோ, கணவனிடமிருந்து கடிதம் பெற என்று பலப்பல எதிர்பார்ப்பில், தபால்காரர் பணி முக்கியம் வாய்ந்தது.


கடிதம் எழுதத் தெரியாதத் தாய்மார்களுக்கு, அவர்கள் சொல்லுவது போலவே எழுதி உதவி செய்யணும்.

பேச்சுவழக்கில் மண் மணம் கமழ எதிரிலே இருப்பது போல் சொல்லுவார்கள்.

அதே கருத்தை அப்படியே கடிதத்தில் கொணர்ந்து நாம் எழுதுவதோடு மட்டுமல்ல!

படித்தும் காட்ட வேண்டும்.

(தொடரும்...)

அன்புடன்,
தங்கமணி.

Monday 10 November, 2008

எடுத்து நான் விடவா என் பாட்டை தோழா தோழா !

சங்கீதம்.. ஒரு வரம்..

ஒரு வரப் பிரசாதம்..

எல்லாருக்கும்.. சுலபமா வராது..

எதுக்கு சுத்தி வளைச்சுனு நீங்க கேட்கறது என் காதில விழரது..

என்னோட தாத்தா சங்கீதம் தெரிஞ்ச வக்கீல்..

அந்த காலத்தில புதுக்கோட்டையில..

அத்தைகள் பாடினால் நாள் முழுக்க கேட்டுண்டே இருக்கலாம்..

என் அப்பா.. harmonium எடுத்து வாசிக்க ஆரம்பிச்சால்..

ராக சஞ்சாரத்தில மூழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்கிடுவார்..

ஆனால்.. சோதனை என்னவென்று சொன்னால்..

இந்த குடும்பத்து வாரிசு எல்லாம்..

"சங்கீதமா....கிலோ என்ன விலை என்று கேட்கிற.. மஹானுபாவர்கள்.

ஆனா.. கொஞ்சம் என் அப்பாவோட காத்து எனக்கு அடிச்சு..

எங்க ஆத்துகாரரும் கச்சேரிக்கு போறார்னு.. நானும் வீணை கிளாஸ் போனேன்..

நான் என் friend ராஜி, பெரிய ராஜி அக்கா..நாங்க மூணு பேரும் ஒரு group.

எங்க பாட்டு மாமி பேரு கல்யாணி ..

ரொம்ப தெய்வீகமா.. ரொம்ப musical ஆ இருப்பா..

மாமா.. அவர்.. மூக்கு.. அதுதான்.. highlight

வாரத்தில் ரெண்டு நாள் தான் class..

கடுப்பில சேர்ந்த class.. கொஞ்ச நாள்ல கலகலப்பா மாற ஆரம்பிச்சது..

காரணம் மாமாவோட குட மிளகாய் மூக்குதான்..

வீணை வாசிக்க ஆரம்பிச்சதும்.. அவர் பாடுவார் பாருங்கோ..

அவர் மூக்கு ஒரு ஜதி ஆடும் ... விடைச்சு விடைச்சு விரிஞ்சு அகண்டு..

மூக்கிலே ஒரு உலகமே காட்டுவார்..

அதை நாங்க.. மூணு பேரும்.. ஜாடையா கண்ணால் சொல்லி.. பின்ன அடக்க முடியாமால் சிரிச்சு..

அங்கே இருக்கிற அத்தனை students attention divert பண்ணி.. ....

மாமா.. "சின்ன குழந்தைகள் எப்படி கலாட்டாபாருடி நு " மாமி கிட்ட வெகுளியா..சொல்லும்போது.. தப்பு பண்ணிட்டோமோனு ஒரு சோகம் வரும்..

சரஸ்வதி பூஜை அன்னிக்கு அவா ரெண்டு பேர் கிட்டயும் ஆசிவாதம் வாங்க ஒரு பெரிய queue நிக்கும்..

மாமியும் மாமாவும் அத்தனை students க்கும் அன்பா தர ஒரு ரூவா நாணயம் இருக்கே.. அது.. ஒரு கோடிக்கு சமம்..

இப்படியே சந்தோஷாமா போன நாட்கள் ஒரு நாள் முடிவுக்கு வந்தது..

வீணை மாமிக்கு குழந்தைகள் கிடையாது.

அதனால் காளஹஸ்தி க்கு போய்.. ஆசிரமத்தில் தங்கி அங்கேயே காலத்தை கழிக்க முடிவு பண்ணிட்டா..


எங்களை விட்டு அந்த அன்பான உள்ளங்கள் பிரிந்த நாளை இன்னிக்கும் மறக்க முடியாது..

இந்த காலம் மாதிரி photo எடுத்துக்கலை..

ஆனா அந்த இனிய நினைவுகள் இன்னிக்கும் பசுமரத்தாணி போல பதிஞ்சு இருக்கு..

அப்பறம்..எங்களுக்கு அவர்களை பத்தி எந்த தகவலும் கிடைக்கலை..

இப்படி ஏளனமா தொடங்கிய என் இசை ஆர்வம்.. எப்படி ஏக்கத்தில் முடிஞ்சதுன்னு

அடுத்த post ல சொல்ரேனே..!

அன்புடன்
அகிலா

Thursday 6 November, 2008

மரச்சாமான்கள்!

மரங்கள் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கின்றன என நாம் அறிவோம்.

இன்று நாடு முழுதும் பசுமை சூழலை வளர்க்க வேண்டும் என பெரிதளவு பேசப் படுகிறது.
செயல் படவும் செய்கிறது.

நான் கொஞ்சநாள் முன்பு, பொதிகையில் மரச்சாமான்கள் பற்றி சுவாரஸ்யமான செய்திகள் கேட்டேன்.

பர்மா தேக்கு, ஈட்டி (ரோஸ்வுட்), கருங்காலி மரம் போன்ற மர வகைகளைப் பற்றியும், அவற்றில் செய்யப்பட்ட சாமான்கள் (ஃபர்னிசசர்) பற்றியும் அவற்றின் தன்மையைப் பற்றியும் விவரமாகச் சொன்னார்.

நினைவில் இருக்கும் சில செய்திகளை நினைவு படுத்திக் கொள்கிறேன்.

வாசல் நிலைப்படி ஈட்டி மரத்தில்தான் செய்வார்கள். லக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

கருங்காலிமரம் இல்லாத வீடே கிடையாது.

கருங்காலி மரம் என்று தெரிஞ்சு கொள்ளாமலேயே உபயோகிக்கிறோம்.

உலக்கை, உரல், வாயோடு (குந்தாணி), போன்ற சாதனங்களை முக்கியமாக பயன் படுத்துகிறோம்.

கோவில் கோபுரக் கலசத்துக்கு அடியில் தாங்குவது கருங்காலி மரம்தான்.

இடியை, வெய்யிலைத் தாங்கும் சக்தி இந்த மரத்துக்கு உண்டு.

கருங்காலி மரம் இயற்கையாகவே தன்னைக் காத்துக் கொள்ளும்.

கரையான், பூச்சிகளால் அழிக்க முடியாதது.

கருங்காலி மரம் இப்போது விளைவது இல்லை. இந்த மர வகை மிகவும் கனமாக இருக்கும். கீழே போட்டால் உடைந்து விடும் தன்மையை உடையது.

ஈட்டி மரங்கள் ஊஞ்சல் போன்றவை செய்யப் படுகின்றன.

ஊஞ்சல் ஏழு அடி நீளமும், மூன்று அடி அகலமும் கொண்டவையாக ஒரே பலகையில் செய்யப் பட்டிருக்கவேண்டும் என்றால் அந்த மரத்தின் செழிப்பை வியக்கத்தான் வேண்டும்!

திருமண மக்கள் அமரும் பலகை, ஊஞ்சல் போன்றவை ஒரே பலகையால்தான் செய்திருக்க வேண்டும்.

விசேஷங்கள் போன்றவைகளுக்கு இரண்டு பலகையை இணைத்துச் செய்திருக்கக் கூடாது.

மர ஆப்பு என்றால், இரண்டு கைவிரல்களை இணைப்பது போன்ற முறையிலும் பலகைகளை இணைப்பார்கள்.

அந்தக்கால தூண்களில் உள்ள, நுண்ணிய சித்திர வேலைப் பாடுகள் இன்று எவ்வளவு முயன்றும், பழைய வேலைப்பாடுகளைக் கொண்டுவர முடியவில்லை.

இவற்றைக் கண்டு ஜப்பான் போன்ற வெளிநாட்டவரும் வியக்கின்றனர்.

பழங்கால மர வேலைப்பாடுள்ள பொருள்களை நம் சொத்தாகப் பாதுகாக்க வேண்டும்.

Monday 3 November, 2008

அந்த நாட்களில்,

அந்த நாட்களில்,

காய்கறி நறுக்க அரிவாள் மனை, துருவா மணை (தேங்காய் துருவ) என்று மரத்தில் செதுக்கி, அரியும் பகுதி இரும்பில் பொருத்தப் பட்டிருக்கும்.

அஞ்சலி போன்ற எளிதாக நறுக்கும் கருவி இன்றைய உபயோகத்தில் இருக்கின்றன.

தண்ணீர் நிரப்பி, உபயோகிக்க, பக்கெட், ட்ரம் போன்றவையும், அண்டா, ஜோடுதவலை, கொப்பரை போன்ற தாமிர பித்தளை பாத்திரங்களும் புழக்கத்தில் இருந்தன.

சொம்பு தான் நீர் மொண்டு உபயோகிக்க எளிது.

மரத்தில் செய்யப் பட்ட அஞ்சரை பெட்டி கடுகு போன்றவை வைப்பதோடு
சில்லறைக் காசுகள் வைத்துக் கொள்ளவும் பயன்பட்டது.

இந்நாட்களில், பிளாஸ்டிக் யுகம் என்று சொல்லலாம்.

சொம்புக்குப் பதில் மக்குகள்.

பிளாஸ்டிக் டப், பக்கெட்டுகள்

சமையல் பொருள்கள் கடுகிலிருந்து யாவற்றையும் வைத்துக் கொள்ள பேர்ல்பெட்..

பிறகு டப்பர்வேர் போன்றவை ஆட்சி செலுத்துகின்றன!

அந்நாட்களில், அடுப்புகள்....

அனேகமாகத் தாய்க் குலங்கள் கைவண்ணத்தில் களிமண் அடுப்புகள் அழகாக,கச்சிதமாக வனைந்து உபயோகிப்பர்.

அது ஒரு கைவண்ணம்!

நான் சின்னஞ் சிறுமியாக இருக்கும் போது, நன்கு பிசையப் பட்டக் களிமண், ஒரு தோசை திருப்பிக் கரண்டி இதை வைத்துக் கொண்டு, ஒற்றை அடுப்பு,ரெட்டை அடுப்பு,(கொடியடுப்பு)
கட்டி அடுப்பு, குமுட்டி அடுப்பு எல்லாம் என் அம்மா செய்யும் போது பார்த்துக் கொண்டே இருப்பேன்.

பெருமையாக இருக்கும்!

"எப்பிடி அம்மா இவ்வளவு அழகா அடுப்பு செய்யரே?"ன்னு நான் கேட்பேன். அம்மா ரொம்ப சந்தோஷப் படுவா.

"கண்ணே! உனக்கு இத்தனை சொல்லத் தெரியறதே!"ன்னு மகிழ்வா.

அடுப்பில் சமையல் செய்த பின்பு, நன்கு சாணத்தால் மெழுகி துடைத்து, அழகாய் கோலம் போட்டு சுத்தமாக வைத்து, மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்துவர்.

இப்போது, மின்னடுப்பு, காஸ் அடுப்புகளும், குக்கர்களில் பலவிதங்களும் வந்து முன்னேற்றம்
கண்டு வருகிறோம்!

எவர்ஸிவர் பாத்திரங்களுடன், பீங்கான் சாமான்களும் விதவித டிஸைன்களில், உபயோகத்தில் உள்ளன.

கருப்பு மெட்டல், நான்-ஸ்டிக் போன்றும் புதுமையான சாதனங்கள் சமையலுக்கு உதவுகின்றன.

இன்னும் என்ன புதுமையாய் வருமோ?

அன்புடன்,
தங்கமணி.

Sunday 2 November, 2008

பாத்திரங்கள்

அந்த நாட்களில்....

வீடுகளில் நாம் சமைக்க, உணவுக் கெடாமலிருக்க, எத்தகைய சாதனங்களை, கருவிகளை உபயோகித்தோம்?

50 களின் ஆரம்பத்திலும், அதற்கு முன்பும் எனக்குத் தெரிந்தவரை கற்சட்டிகள், உலோக பாத்திரங்கள், வெண்கல பாத்திரங்கள் உபயோகப் படுத்தப் பட்டன.

மண்சட்டிகளும் உபயோகத்தில் இருந்தன.

கற்சட்டிகளில் உயரமானது,அகலமானது, எனப் பல விதங்களில் உள்ளன.

மடக்கு என்று சொல்லப்படும் வடிவிலும் கற்சட்டி அமைந்திருக்கும்.

குழம்பு, ரசம், கூட்டு முதலியவற்றை கற்சட்டியிலே செய்வார்கள். தயிர் தோயவைக்க கற்சட்டி பயன் பட்டது.

வெண்கல பானை என்னும் உலோக சாதனம் சாதம், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசி உப்புமா போன்ற உணவு வகைகளை செய்யப் பயன்படும்.

வெண்கல உருளிகள், விதவித வடிவுகளில், தட்டை உருளி (சருவம் போன்ற அமைப்பில் இருக்கும்)

கல்யாணி உருளி,(பெயர்க் காரணம் தெரியவில்லை) குண்டு உருளி ... இன்னும் பல...

இந்த உருளி என்பது கனமாக இருக்கும்.

பருப்பு வேக வைத்தல், காய்களை வேக வைத்தல், பாயசங்கள் செய்தல், இன்னும் பால் காய்ச்சுதல் போன்ற வற்றிற்கு மிக உபயோகமாக இருக்கும்.

வெண்கல பேலா என்னும் சாதனம் சுத்தமான வெண்கலத்தில் செய்தவையாகும்.

மீந்த சாதத்தை வெண்கலப் பேலாவில் நீர் ஊற்றி வைத்தால் காலையில் உபயோகிக்கலாம். கெடாது.

பித்தளை பாத்திரங்கள் அடுக்குகள், தூக்குகள், தாம்பாளங்கள், கரண்டிகள் என்று புழக்கத்தில் இருந்தன.

குத்து விளக்குகள், போன்ற பூஜைக்குத் தேவையானவைகளும் பித்தளை, வெண்கலம் போன்ற உலோகங்களில் இருந்தன.

பித்தளை அடுக்கு, தாம்பாளம் போன்றவற்றில் ஈயம் பூசப்பட்டு, விசேஷங்களில் பயன்படுத்தப் பட்டது.

அரைத்தல், இடித்தல் போன்றவைகளுக்கு, கல் உரல்,எந்திரம் மிகவும் பயன்பாடு உடையன.

பருப்பை உடைக்கும் எந்திரம், தானியத்தை மாவாய் பொடிக்கும் எந்திரம் பலவகைகளில் உபயோகிக்கப் பட்டன.

மர உலக்கைகள் (பூண்போட்டது) அவல், தானியங்களை இடிக்கப் பயன் பட்டது.

இரும்பு வாணலி பலகாரம், பட்சணம் செய்ய உபயோகிக்கப் பட்டது.

அலுமினியப் பாத்திரங்கள்..

சமைக்க, உணவுப் பொருளை பாதுகாக்க உபயோகப் ப்பட்டன.
அலுமினியக் கரண்டிகள், குழிக்கரண்டிகள் (முட்டை ஸ்பூன்)
உபயோகமாக இருந்தன.

கல்லு கொத்துதல், ஈயம் பூசுதல், ஓட்டை அடைத்தல் போன்ற தொழில் செய்து பிழைக்கும் தொழிலாளர் வாழ்ந்தனர்!

பிறகுதான் எவர்ஸில்வர் பாத்திரங்கள் வர ஆரம்பித்தன!