Tuesday, 26 August, 2008

விளையாட்டே உலகம்!

விளையாட்டு என்பது தேகத்துக்கு ஆரோக்கியம்.

மனசுக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும்.

விளையாட்டில், கோபமும் வரவேண்டும். சமாதானமும் கொள்ள வேண்டும்

நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவதால் விட்டுக் கொடுப்பது தோல்வியை ஏற்றுக் கொள்வது போன்ற குணங்கள் வளரும்.

சின்னவயசில், எத்தனை விதமான விளயாட்டுகள்!

பாண்டி ஆடுதல், நொண்டி அடித்தல், கில்லித் தாண்டி, பச்சைக் குதிரை, வண்ண வண்ண கோலிகளில் விளையாட்டு, தாயக் கட்டம், பல்லாங்குழி, அஞ்சாம் கல்லு, ஏழாங்கல்லு, அப்புறம் நாலு நாலு கல்லாய் சேர்த்து அச்சுக்கல் ஆட்டம், இப்படி பல விளையாட்டுண்டு.

பட்டம் விடுதல் - அதிலும் கதவுப் பட்டம்பெரியதாக இருக்கும்.

"ட்வைன்" நூலில் தான் கதவுப் பட்டம் பறக்கவிட முடியும்.

மேலே பறக்கும்போது "விர்ர்ர்"னு சத்தம் போடும்! அதை விர்ர் பட்டம்னு சொல்லுவார்கள்!

இன்று "பட்டம் விடுதல்" உலகளாவிய வியப்புக்குரிய விந்தையான விளையாட்டாகும்!

எத்தனை உருவங்கள்! எத்தனை வடிவங்கள்! எத்தனை வண்ணங்கள்!

ஓ!...சொல்லி முடியாது!

பனை ஓலையில், காத்தாடி செய்து வேல முள்ளை (கடிகார முள் போல இணைந்திருக்கும்) சோளத் தக்கையில் குத்திச் சுழற்றி காற்றில் காண்பித்தாலே (நாம் ஓடாமலே) ஓடும்!

சின்னஞ் சிறுவர், சிறுமிகளுக்கு, சோளத்தட்டில், மூக்குக் கண்ணாடி, கட்டில், நாற்காலி இவையெல்லாம் செய்து கொடுத்தால் மகிழ்வர்!

"மானாப் புள்ளி" என்றொரு விளையாட்டு!

சிறுவர்கள் தாங்களாகவே அட்டைகளைத் தயார் செய்து, உலகத்திலுள்ள புகழ் வாய்ந்த நகர், துறைமுகம் இவைகளின் பெயர், விலை போன்றவைகளை எழுதி விளையாடுவர்! (இப்போதுள்ள "Trade" என்ற "Monopoly" விளையாட்டு என நினைக்கிறேன்!)

நம் நாட்டுப் புறக் கலைகள் நமக்குத் தரும் செய்திகள் தான் எத்தனையோ!

கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம்!

இத்தகைய ஆட்டங்கள் நம்மை மகிழ்விப்பதுடன், காண்பவரையும் மகிழ்விக்கின்றன!

இவ்வகை ஆட்டங்களோடு பாடல்களும் இசைந்து வரும் அழகையும் காணலாம்!

இன்று, கிரிக்கெட், ஹாக்கி, டேபில் டென்னிஸ், கூடைப் பந்து.. போன்ற பலவித விளையாட்டுக்கள் இளைஞரிடையே விளையாடப் படுகின்றன!

ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், இரண்டு வெண்கலம் நம் இந்தியாவுக்குப் பெற்று தந்த அந்த இளைஞர்களுக்கு நம் வாழ்த்துகள்!

அரசும் விளையாட்டை ஊக்குவிக்கின்றது! இளைஞரும் அதனால் நன்குப் பயன் பெற வேண்டும் !

விளையாடுவதால் உடல் ஆரோக்கியம் பெற்று, மனம் புத்துணர்வு அடைகின்றது!

எதிர்கால பாரதத்தின் வளமைக்கு இளைஞர்களின் பங்குதான் முக்கியம்!

ஆரோக்கியமான உடல், சிந்தை, செயல், இவை யாவற்றுக்கும் விளையாட்டு துணை புரிகின்றது!

குழந்தையிலிருந்தே விளையாட்டை ஊக்குவிப்போம்!

பாரதி அன்றே சொன்னான்!

ஓடி விளையாடு பாப்பா!
காலை எழுந்தவுடன் படிப்பு
கனிவுதரும் நல்ல பாட்டு,
மாலைமுழுதும் விளையாட்டு,
என்று பழக்கப் படுத்தி கொள்ளு பாப்பா!


அன்புடன்,
தங்கமணி.

Saturday, 16 August, 2008

சுதந்திரத் திருநாள்

சுதந்திர வேள்வியில் தங்கள் உடல் பொருள், ஆவி இம்மூன்றையும் திரணமாக எண்ணி தியாகம் செய்து, அழியாப் புகழ் கொண்ட மா பெருந் தியாகிகளுக்கு மனப் பூர்வமான அஞ்சலியை செய்வோம்!

வாழ்க தீரர் புகழ்! வாழ்க பாரதம்!

முதல் சுதந்திரத் திருநாளில்....எனக்கு ஏழுவயது இருக்கும். பள்ளிக்கூட மாணவ, மாணவியர்கள் நாங்கள் எல்லோரும் ஊர்வலமாய்க் கையில் கொடி பிடித்து வரிசையாய் வந்தோம்...

வழியெல்லாம் தேசபக்தி பாடல் முழக்கம்! கஷ்டப் பட்டு அந்நியரிடமிருந்து நம் நாட்டைபெற்ற நாள் இந்நாள் என்றுதெரிகிறது.

காந்தி,நேரு,படேல்,சுபாஷ், இவர்களெல்லாம் பெரிய தலைவர்கள் அப்பிடீன்னு தெரியறது!

சுதந்திரப் பாடல் கேட்கும் போது மனசிலே வீரம் வந்த மாதிரித் தோணுது! அன்று மாலை சினிமாக் கொட்டகையில்.. "பக்த மீரா" சினிமா, பள்ளி மாணவர்களுக்கு "சும்மா" வே காசு கொடுத்து டிக்கெட் வாங்காமல்... அது மட்டுமா?

வரிசையில் உள்ளே செல்லுமுன், வலதுகையில் ஸ்வீட், இடது கையில் பின்னால் ரப்பர் வெச்ச காயிதப் பென்சில்! எங்கள் சந்தோஷத்துக்கு அளவேயில்லை!!

முதல் சுதந்திரநாளை நினைத்துப் பார்த்தேன்.... இன்று..சாதி மத இனக் கலவரங்கள்.. தீவிரவாதங்கள்... இவற்றுக்கிடையே மனம் தளராமல் நல்ல நம்பிக்கையுடன், வருங்கால உலக நன்மையை எதிர் நோக்குவோம்!!

Tuesday, 12 August, 2008

படிப்பது எனக்குப் பிடித்தது!

எனது சின்ன வயசில் சங்கு, ஜிங்கிலி போன்றவை நாளேடுகளாய் வந்தன.

கல்கண்டு, கண்ணன், அம்புலிமாமா போன்ற சிறியவர்களுக்கான புத்தகங்கள் சிறுவர், சிறுமியர் விரும்பிப் படித்தனர். பெரியவர்களுங்கூட!

10-12 வயசிலே கல்கியின் "சிவகாமியின்சபதம்" படிச்சிருக்கேன்! எல்லாம் புரியணும்னு இல்லை. கதை போக்கா புரிஞ்சிண்டு படித்தேன்!

"அலை ஓசை" என்னுடைய 15 வயசிலே கல்கியில் தொடராக வந்தது! வாரா வாரம் எதிர்பார்ப்புடன் படித்தேன்!

அப்போது ஓவியங்கள் கதைகளுக்கு உயிரூட்டும்!

சந்திரா, மணியம், சாமா, இன்னும்.. இன்னும்... மம்ம்ம்.. ராம்கி, ஸ்வாமி... விகடனில், கோபுலு, சிம்ஹா, உமாபதி, மாயா..

விகடனில், லக்ஷ்மி, தேவன், போன்றோரின் புதினங்களைப் படித்திருக்கிறேன். அப்புறம்...நிறைய எழுத்தாளர்கள் கதைகள் ... ராஜம்கிருஷ்ணன், ஜெயகாந்தன், வாஸந்தி, இந்துமதி, தி.சா.ராஜு (கலைமகளில்) படித்திருக்கிறேன்.

வீட்டிலே சுண்ணாம்பு அடித்தால், எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி!

மேலே உயரத்தில் பலகையில் இருக்கும் புத்தகங்கள் கீழே இறக்குமதி ஆகும்! வீட்டின் முற்றத்தில் இறக்கி வைக்கப் படும்.

பழைய தீபாவளி மலர் ஏடுகளாய் அடுக்கியிருக்கும். ஆர்வத்தோடு பார்ப்பதில், படிப்பதில் ஒரு இனிமை!

என் பிள்ளைகள் முத்துகாமிக்ஸ், வேதாளம், அப்புசாமி-சீதாப் பாட்டி(பாக்கியம்ராமசாமி)கதைகள் ( சப்தமாக சிரித்துக்கொண்டே படிப்பர்)

குமுதம்,விகடனும் கூட..

படிக்கும் பழக்கம் இருந்தால் பிற்காலத்தில் நல்லனவற்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வழிகாட்டும்.

புத்தகம் படிப்பது என்பது நம் வாழ்க்கைக்கு ஊன்றுகோலாய் துணை செய்யும்.

உள்ளத்தை செம்மைபடுத்தும்.

இன்று நம் இளைஞர்கள் படிக்கும் வழக்கத்தையும் அவர்களின் அன்றாடப் பணிகளில் ஒன்றாக செயல் படுத்தவேண்டும்.

அன்புடன்,

தங்கமணி.

Monday, 4 August, 2008

எங்கள் ஊர் - தாரமங்கலம் !சேலம் நகரிலிருந்து 19 மைல் தொலைவில் தாரமங்கலம் என்னும் எங்கள் கிராமம் இயற்கை அழகு நிறைந்து விளங்குகிறது.

கோவில்கள், குளங்கள், பள்ளிகள், ஊருக்கேத் தனி அழகூட்டுகிறது!

கைலாசநாதர் கோவில், சிற்பக் கலையின் அற்புதங்கள் நிறைந்தது! சுற்றுலாத் தலம்!

எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனுமு..!

வருடாவருடம் சிறப்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்து அளிக்கும் தாரைவாழ் செங்குந்தர் மஹாஜன அன்பர்களுக்கு என் மனமுவந்த நன்றியைச் சொல்லிக் கொள்வேன்.

திருவிழா நாட்களில், செவிக்கும், மனதுக்கும் சுவையளிக்கும் சொற்பொழிவுகள், இசைநிகழ்ச்சிகள்!

சிலம்பொலி செல்லப்பா,மா.வே.பசுபதி, சத்திய சீலன், அ.வ.ராஜகோபால், சுகிசிவம், சொ.சொ.மீ.சுந்தரம், அரு.நாகப்பன், இன்னும் பலர்...நினைவு இல்லை.

சீர்காழிகோவிந்தராஜன், மதுரை சோமு, சூலமங்கலம் சகோதரிகள், இன்னும் பலர் இவர்களின் இசைநிகழ்ச்சிகளைக் கேட்டுமகிழ்ந்திருக்கின்றோம்!

சவுணிக்கட்டு எனும் சொல் அன்றாட காய்கறி அங்காடியைக் குறிக்கின்றது. ஹொய்சளர் ஆட்சியினால் (முன்னொருகாலம்) இந்த சொல்இங்கு பேச்சு வழக்கில் வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

'டூரிங் டாக்கீஸ்' சினிமாக் கொட்டகை, எங்கள் ஊரைச்சுத்தியுள்ள கிராமத்துமக்களும் வந்து பொழுதுபோக்காய் கண்டு இரசித்துச் செல்வார்கள்!

எங்கள் ஊரைப் பற்றிய பல இனிய நினைவுகள் இன்னும் உண்டு!

அன்புடன்,
தங்கமணி.

Sunday, 3 August, 2008

எதிலும் எங்கும் இருப்பான் அவன் யாரோ..!

...

ஏதோ நினைவுகள்....!

எதுவும் அர்த்தங்கள்...!

எல்லாமும் தேவைகள் ..!

எனது எண்ணங்களும் சென்றடையட்டும் ...! எட்டு திக்கும் ....! எங்கெங்கும்....!

துவங்குகிறேன்...! எதிலும் எங்கும் இருப்பவனின் அருளுடன்...!

அன்புடன்

தங்கமணி