Tuesday, 26 August 2008

விளையாட்டே உலகம்!

விளையாட்டு என்பது தேகத்துக்கு ஆரோக்கியம்.

மனசுக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும்.

விளையாட்டில், கோபமும் வரவேண்டும். சமாதானமும் கொள்ள வேண்டும்

நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவதால் விட்டுக் கொடுப்பது தோல்வியை ஏற்றுக் கொள்வது போன்ற குணங்கள் வளரும்.

சின்னவயசில், எத்தனை விதமான விளயாட்டுகள்!

பாண்டி ஆடுதல், நொண்டி அடித்தல், கில்லித் தாண்டி, பச்சைக் குதிரை, வண்ண வண்ண கோலிகளில் விளையாட்டு, தாயக் கட்டம், பல்லாங்குழி, அஞ்சாம் கல்லு, ஏழாங்கல்லு, அப்புறம் நாலு நாலு கல்லாய் சேர்த்து அச்சுக்கல் ஆட்டம், இப்படி பல விளையாட்டுண்டு.

பட்டம் விடுதல் - அதிலும் கதவுப் பட்டம்பெரியதாக இருக்கும்.

"ட்வைன்" நூலில் தான் கதவுப் பட்டம் பறக்கவிட முடியும்.

மேலே பறக்கும்போது "விர்ர்ர்"னு சத்தம் போடும்! அதை விர்ர் பட்டம்னு சொல்லுவார்கள்!

இன்று "பட்டம் விடுதல்" உலகளாவிய வியப்புக்குரிய விந்தையான விளையாட்டாகும்!

எத்தனை உருவங்கள்! எத்தனை வடிவங்கள்! எத்தனை வண்ணங்கள்!

ஓ!...சொல்லி முடியாது!

பனை ஓலையில், காத்தாடி செய்து வேல முள்ளை (கடிகார முள் போல இணைந்திருக்கும்) சோளத் தக்கையில் குத்திச் சுழற்றி காற்றில் காண்பித்தாலே (நாம் ஓடாமலே) ஓடும்!

சின்னஞ் சிறுவர், சிறுமிகளுக்கு, சோளத்தட்டில், மூக்குக் கண்ணாடி, கட்டில், நாற்காலி இவையெல்லாம் செய்து கொடுத்தால் மகிழ்வர்!

"மானாப் புள்ளி" என்றொரு விளையாட்டு!

சிறுவர்கள் தாங்களாகவே அட்டைகளைத் தயார் செய்து, உலகத்திலுள்ள புகழ் வாய்ந்த நகர், துறைமுகம் இவைகளின் பெயர், விலை போன்றவைகளை எழுதி விளையாடுவர்! (இப்போதுள்ள "Trade" என்ற "Monopoly" விளையாட்டு என நினைக்கிறேன்!)

நம் நாட்டுப் புறக் கலைகள் நமக்குத் தரும் செய்திகள் தான் எத்தனையோ!

கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம்!

இத்தகைய ஆட்டங்கள் நம்மை மகிழ்விப்பதுடன், காண்பவரையும் மகிழ்விக்கின்றன!

இவ்வகை ஆட்டங்களோடு பாடல்களும் இசைந்து வரும் அழகையும் காணலாம்!

இன்று, கிரிக்கெட், ஹாக்கி, டேபில் டென்னிஸ், கூடைப் பந்து.. போன்ற பலவித விளையாட்டுக்கள் இளைஞரிடையே விளையாடப் படுகின்றன!

ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், இரண்டு வெண்கலம் நம் இந்தியாவுக்குப் பெற்று தந்த அந்த இளைஞர்களுக்கு நம் வாழ்த்துகள்!

அரசும் விளையாட்டை ஊக்குவிக்கின்றது! இளைஞரும் அதனால் நன்குப் பயன் பெற வேண்டும் !

விளையாடுவதால் உடல் ஆரோக்கியம் பெற்று, மனம் புத்துணர்வு அடைகின்றது!

எதிர்கால பாரதத்தின் வளமைக்கு இளைஞர்களின் பங்குதான் முக்கியம்!

ஆரோக்கியமான உடல், சிந்தை, செயல், இவை யாவற்றுக்கும் விளையாட்டு துணை புரிகின்றது!

குழந்தையிலிருந்தே விளையாட்டை ஊக்குவிப்போம்!

பாரதி அன்றே சொன்னான்!

ஓடி விளையாடு பாப்பா!
காலை எழுந்தவுடன் படிப்பு
கனிவுதரும் நல்ல பாட்டு,
மாலைமுழுதும் விளையாட்டு,
என்று பழக்கப் படுத்தி கொள்ளு பாப்பா!


அன்புடன்,
தங்கமணி.

No comments: