Saturday 16 August, 2008

சுதந்திரத் திருநாள்

சுதந்திர வேள்வியில் தங்கள் உடல் பொருள், ஆவி இம்மூன்றையும் திரணமாக எண்ணி தியாகம் செய்து, அழியாப் புகழ் கொண்ட மா பெருந் தியாகிகளுக்கு மனப் பூர்வமான அஞ்சலியை செய்வோம்!

வாழ்க தீரர் புகழ்! வாழ்க பாரதம்!

முதல் சுதந்திரத் திருநாளில்....எனக்கு ஏழுவயது இருக்கும். பள்ளிக்கூட மாணவ, மாணவியர்கள் நாங்கள் எல்லோரும் ஊர்வலமாய்க் கையில் கொடி பிடித்து வரிசையாய் வந்தோம்...

வழியெல்லாம் தேசபக்தி பாடல் முழக்கம்! கஷ்டப் பட்டு அந்நியரிடமிருந்து நம் நாட்டைபெற்ற நாள் இந்நாள் என்றுதெரிகிறது.

காந்தி,நேரு,படேல்,சுபாஷ், இவர்களெல்லாம் பெரிய தலைவர்கள் அப்பிடீன்னு தெரியறது!

சுதந்திரப் பாடல் கேட்கும் போது மனசிலே வீரம் வந்த மாதிரித் தோணுது! அன்று மாலை சினிமாக் கொட்டகையில்.. "பக்த மீரா" சினிமா, பள்ளி மாணவர்களுக்கு "சும்மா" வே காசு கொடுத்து டிக்கெட் வாங்காமல்... அது மட்டுமா?

வரிசையில் உள்ளே செல்லுமுன், வலதுகையில் ஸ்வீட், இடது கையில் பின்னால் ரப்பர் வெச்ச காயிதப் பென்சில்! எங்கள் சந்தோஷத்துக்கு அளவேயில்லை!!

முதல் சுதந்திரநாளை நினைத்துப் பார்த்தேன்.... இன்று..சாதி மத இனக் கலவரங்கள்.. தீவிரவாதங்கள்... இவற்றுக்கிடையே மனம் தளராமல் நல்ல நம்பிக்கையுடன், வருங்கால உலக நன்மையை எதிர் நோக்குவோம்!!

5 comments:

sury siva said...

இலக்கிய இன்பம் எனும் வலைப்பதிவு வழியே தங்கள் பதிவுக்கு
வந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
இதுகாறும் இப்படியோர் பதிவு இருப்பதைப் பார்க்கவில்லை.
சுதந்திர தினத்தன்று அன்றைய நிலையையும் இன்றைய நிலைதனையும்
ஒப்பிட்டு மனம் வருந்தியிருக்கிறீர்கள்.

எப்படி ஒரு தனி மனிதனின் வாழ்வு வண்டிச்சக்கரம் போல் சுழற்கின்றதோ
அவ்வாறே தான் ஒரு நாட்டின் வாழ்வும் இருக்கிறது. ஏறுவதும் இறங்குவதும்
இயல்பே. இருப்பினும் பொருளாதாரத்திலோ அல்லது அரசியலிலோ
ஏற்றத்தாழ்வுகள் நிகழ்கையில் ஒப்புக்கொள்ளும் மனம், பண்பிலும் வாழ்வியலிலும்
ஏற்படும் தாழ்வுகளை ஒப்புக்கொள்ள மறுப்பது நம்மைப்போன்ற அக்காலத்தவர்க்கு
கடினம் தான்.

என்ன செய்வது ?

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பின் குறிப்பு: தங்களது இன்னொரு வலைப்பதிவு இன்னமும் சென்று பார்க்கவில்லை.
நேரமிருப்பின் வரவும்:
http://vazhvuneri.blogspot.com

Thangamani said...

திரு.சூரி அவர்களுக்கு,
வணக்கம்.உங்கள் மடல் கண்டேன்.மிகவும் நன்றி.


அன்புடன்,
தங்கமணி.

Uma said...

சுதந்திர தினத்தன்று நம் வீட்டு கூரையின் மீது ஒலி பெருக்கி பொருத்தி
வானொலியில் அன்றய தினம் ஒலி பரப்பான தேசபக்தி பாடல்களை
எல்லோரையும் கேட்க வைத்தோமே,நினைவு இருக்கிறதா?
சுதந்திர கொடி பறந்திடப் பாரீர்.......
சூழும் இருளும் தொலைந்தது பார்..........

இரா. வசந்த குமார். said...

அம்மா... நீங்கள் தானே ஆர்குட் தளத்தில் 'தமிழ் மரபுக் கவிதைகள்' குழுவில் இணைந்தவர்கள்..?

தங்களது வாழ்வின் அனுபவங்களை இங்கே நீங்கள் பகிரலாமே...? உதாரணமாக முதல் சுதந்திர நாள், மிசா நாட்கள், பஞ்சம் வந்த போது...

போன்ற நாங்கள் பார்த்திராத நிகழ்ச்சிகளை இங்கே பதிந்து பகிர்ந்தால், நாங்கள் மகிழ்வோம்..

நன்றி.

இரா.வசந்த குமார்.

Thangamani said...

அன்புள்ள இரா.வசந்தகுமார்,ஆசிகள்.
ஆம். நான் ஆர்குட் தளத்தில்"மரபுக் கவிதை" குழுவில்
சேர்ந்திருக்கிறேன்.
எனக்கு நினைவில் இருப்பதை எழுத முயலுவேன்.ஞாபகமறதி அதிகம்.
நன்றி!வசந்த் குமார்.

அன்புடன்,
தங்கமணி.