Monday, 30 November 2009

வீடு ! - 3

புழக்கடை ரேழி !

புழக்கடை ரேழியின் இரண்டுச் சின்னப் பரண்கள்.

ஒன்றில், விறகுகள் இருக்கும். மற்றொன்றில்,எருமுட்டை, செம்மண் உருண்டைகள் இருக்கும்.

எருமாமுட்டை (சாணியைதட்டி வெய்யிலில் காயவச்சி, எடுத்து வைத்தவை) வெந்நீரடுப்பு, சமையல் அடுப்பு எரிய ரொம்பத் தேவை.

அப்பா, கொடுவாளால் விறகைச் செதுக்கி, செதுக்கி, சிராய்த் தூளாக்குவார். சிராய்த் தூளும் ஜோராய் அடுப்பெரிக்க உதவும்.

ஆனால், மழைக் காலத்துலே எரியாத விறகும், காயாத எருமுட்டையும் அமையும்!அம்மாக்குத் திண்டாட்டம்தான்!

ஊதுகுழலால்(கண்ணன் கைக் குழல் அல்ல!)அடுப்பை ஊதி ஊதி எரிய வைக்கறத்துக்குள்ள எம்பாடு உன்பாடு ந்னு ஆயிடும்!

செம்மண் உருண்டைகள்(விசேஷங்களுக்குச் செம்மண் இடுவோமே! அதுக்கு) இருக்கும்.

புழக்கடை ரேழியின் மூலையில் ஐந்தாறு உலக்கைகள் இருக்கும்.

குழிவாய்ப் பூண்போட்டது, தட்டையாய்ப் பூண் போட்டது, என்று இருக்கும்.

வீட்டிலேயே 'அவல்' இடிப்பார்கள்.

அம்மா, புழுக்கி ஆர்வாடப் போட்ட நெல்லை பெரிய இரும்பு வாணலியில் போட்டு, ஒரு புதுத் தென்னங்குச்சிகளால் செய்த மாறால் (விளக்குமாறு) வேகமாக வறுத்து, உரலில் கொட்டினால், எதிரும், புதிருமா ரெண்டு வேலையாட்கள் 'சொய்' 'சொய்" ன்னு இடிப்பார்கள் !

தட்டை தட்டையா அவலு உமியோட இருக்கும்! பிறகு புடைத்து அவல் தனியாக எடுத்து வைப்பார்கள்.

மாவு, மிளகாய்த்தூள் எல்லாம் உரலில் இடித்துத்தான் செய்யப் படும். அதுக்குன்னே கடப்பாரையும் உண்டு!

ஊருக்குள்ளே, நெல் அரவை மில்லு இருக்கு!எள் எண்ணெய், கடலை எண்ணை ஆடுகின்ற செக்கு உண்டு! எள்ளுப் புண்ணாக்குத்(பிண்ணாக்கு?) தின்ற அனுபவம் இருக்கு!

இளையராஜாப் பாட்டு நினைவு வருது! 'போடாப் போடாப் புண்ணாக்கு போடாதேத் தப்புக் கணக்கு!'

இன்னிக்கு தயாராப் பாக்கெட்டுல மாவா, பொடியா எல்லாம் கிடைக்குது!

வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்தல், ஓடு மாத்தி வேய்தல் போன்ற கவனிப்புகளும் வேண்டும். இல்லாட்டா மழைவந்தா வீடெல்லாம் ஒழுகும்! திண்டாட்டம் தான்!

தூங்காமே துன்பப் பட்டதும் நிறைய அனுபவம் உண்டு!

நான் எழுதற கால கட்டம், என்னுடைய பள்ளி வயது!

மூட்டைப் பூச்சிக் கடி, கொசுக் கடி, சிரங்கு.... இவற்றில் சிக்காத பிள்ளைங்க
கிடையாது!

அப்போ விறகுப் பஞ்சம், அரிசிப் பஞ்சம் போன்ற கஷ்டமான நாட்களையும் கடந்துதான்
வாழ வேண்டியிருந்தது!

இன்னும் வரும்....

2 comments:

க.பாலாசி said...

//வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்தல்,ஓடு மாத்தி வேய்தல்
போன்ற கவனிப்புகளும் வேண்டும்.இல்லாட்டா மழைவந்தா
வீடெல்லாம் ஒழுகும்!திண்டாட்டம் தான்!
தூங்காமே துன்பப் பட்டதும் நிறைய அனுபவம் உண்டு!//

அருமையான கிராமத்து நினைவுகள்..கண்முன்னே நிழலாடவிடும் தங்களின் பதிவு. இழந்த கனவுகளை உயிர்பெழ செய்கிறது...

Thangamani said...

அன்புள்ள பாலாஜி,
வருகைக்கும்,கருத்துக்கும்
நன்றி!

அன்புடன்,
தங்கமணி.