Thursday, 2 October 2008

பொம்மைக் கொலு!

பொம்மைக் கொலு!

இந்த ஒன்பது நாட்களிலும் துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, என்ற முப்பெருந் தேவியரும், கல்வியாய், செல்வமாய், வீரமாய், மக்களுக்கு அருள் செய்திட வென்று வீடுகளில் கொலுவிருக்கக் கொண்டாடி மகிழ்வோம்!!

சின்னவயது நினைவுகள் ! .......

எங்கள் ஊரிலே, எனக்குத் தெரிஞ்சு ஒரு 30, 40 வீடுகளில் கொலு வைத்திருப்பார்கள்.

இந்த ஒன்பது நாளும் கையில் குங்குமச் சிமிழுடன் எல்லோர் வீட்டுக்கும் சென்று அழைப்போம்!

சிறுமிகளுக்கு இது மகிழ்ச்சியான நாட்களாகும்!

பெரியவர்கள் முடிந்த நாளில் வந்து, கொலுவில் பங்கேற்றுப் பாடி மகிழ்வர்! மஞ்சள் குங்குமம், வெத்திலைப் பாக்கு பூ வுடன் சுண்டலும் பெற்றுச் செல்வர்.
ஒரு வீட்டில் மட்டும் (வடிவேல் முதலியார் வீடு) கூடம் முழுதும் மேலிருந்து தரையில் முடியும் வரை நிறையப் படிக் கட்டுகளில் நிறைய்ய பொம்மைகள் வைத்திருப்பர்!

செட்டு செட்டாய், வித விதமாய் பொம்மைகள்! பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்!

சிறுமிகள் சிலர், ராதை, கிருஷ்ணன் போன்ற வேஷம் போட்டுக் கொண்டு அலங்காரமாய் வருவாகள்.

இன்னும் சிலர், பட்டுப் பாவாடை நகைகள் அணிந்து பின்னலில், ஜடை பில்லையும், மேல் தலையில் "உச்சிப் பூ" என்னும் கற்கள் பதித்த தலையணியை, அல்லது "ராக்கொடி" என்னும் தலையணியையோ அணிந்து வருவர்.

பார்க்க அழகு கொஞ்சும்!

நான் இருப்பதற்குள் நல்ல ஆடைகளை அணிந்து கொள்வேன்.

ஜடைபில்லை, உச்சுப் பூ வைத்து என் அம்மா பின்னி விடுவாள்.

இது போதும் எனக்கு!

எனக்கு எல்லோர் வீட்டுப் பொம்மைகளைக் கண்டு களிக்கணும்.

அங்கு பாடுவோர்களின் பாடல்களைக் கேட்டு மகிழணும்.

மற்றப் பெண்கள் அணிந்த புத்தாடைகளைக் கண்டு ரசிக்கணும்.

அப்புறம்...என்ன என்ன சுண்டல்கள் (வாயனம்) கிடைக்கிறதோ, வீட்டில் எல்லோருமாய் சாப்பிடுவோம்.

கொலுவைப்பதில், நம் பண்பாடு, ஆன்மீக பக்தி, மதிக்கப் படுகிறது.

அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ந்து கொண்டாடப் படும் நவராத்திரி, ஒரு கலை உணர்வு மிக்க திருநாட்களாகும்!

No comments: